தினமும் மென்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். மென்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு, உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதய நோய், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும், குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் மென்பானங்களே முக்கியக் காரணம் என்பதை மத்திய சுகாதாரத் துறையே ஒப்புக்கொண்டுள்ளது.
மென்பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கின்ற எனாமலை மிக விரைவாக அரித்துவிடுவதால், பற்சிதைவு உண்டாகிறது. பல்லின் ஆயுள் குறைகிறது. சீக்கிரமே பற்கள் விழுந்துவிடுகின்றன. பாஸ்பாரிக் அமிலத்தால் மற்றொரு கெடுதலும் உண்டு. இது கால்சியம் சத்து, குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எலும்பில் உள்ள கால்சியத்தைச் சிதைத்துவிடுகிறது. இதனால் உடலில் கால்சியம் குறைந்துவிடுகிறது. எலும்பு, பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிக அவசியம். கால்சியத்தை பாஸ்பாரிக் அமிலம் குறைத்துவிடுவதால், எலும்பின் அடர்த்தி குறைகிறது. எலும்புச் சிதைவு நோய் வருகிறது. வயதானவர்கள் லேசாகத் தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். மேலும், மென்பானங்கள் மூட்டுவலிப் பிரச்சினையை மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன.
அடிக்கடி மென்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்சினையை இரு மடங்கு அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் சிறுநீரகம் செயலிழக்கவும் மென்பானம் ஒரு காரணமாகிறது. சில பானங்களுக்குக் கருப்பு வண்ணம் தருகின்ற ‘கேராமல்’ எனும் வேதிப்பொருள், புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளது. மென்பானங்களில் உள்ள காஃபீன் ரத்தஅழுத்தத்தை அதிகரித்து நரம்புத்தளர்ச்சிக்கும் இதய நோய்க்கும் வழிவகுக்கிறது.
மென்பானங்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகப் பொட்டாசியம் பென்சோவேட், சோடியம் சைக்ளோமேட் போன்றவற்றையும், திண்மையூட்டுவதற்காக பெக்டின், அல்ஜினேட், கராஜென், ஃபிரக்டோஓலிகோ சாக்கரைடு, இனுலின் போன்ற பல வேதிப்பொருள்களையும் சேர்க்கிறார்கள். இவை அனைத்துமே நம் உடல்நலனைக் கெடுக்கக் கூடியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று டெல்லியில் உள்ள அறிவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், மென்பானங்களைத் தொடர்ந்து அருந்தும்போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து, இரைப்பைப் புண், குடற்புண் ஏற்படும். பசியின்மை, புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவிடும்.
பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் மென்பானங்களைக் குடிக்கிறோம். இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் என்று நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறு. மென்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த நாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும் மீண்டும் குளிர்ந்த மென்பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.
உணவியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி, பழம் சாப்பிடுவதே நல்லது. காரணம், பழத்தை அப்படியே நேரடியாகச் சாப்பிடும்போது, பழத்தின் சத்துகளோடு, அதன் தோலில் உள்ள நார்ச்சத்தும் கிடைக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுப்பதுடன், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது. இயற்கைப் பழச்சாறுகளைத் தயாரிக்கும்போது தோலை நீக்கிவிடுவதால் அவற்றில் நார்ச்சத்து இல்லாமல் போகிறது.
‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பதுபோலக் கோடை காலத்தில் விற்கப்படும் பல மென் பானங்கள், குளிர்பானங்கள் போலி நிறுவனங்களின் தயாரிப்புகளாகத் தான் இருக்கின்றன. குறிப்பாக, கிராமங் களில் விற்கப்படும் பல குளிர்பானங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவற் றைக் குடிக்கும்போது, செரிமானக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் தொல்லை கொடுக்கும்.
இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பாட்டில் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. இதைக் குளிரக் குளிரக் குடிக்க விரும்புபவர்கள் ஃபிரிட்ஜுக்கு பதிலாக மண்பானையில் ஊற்றிவைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியம்.
கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த பானம்; சத்தான, சுத்தமான பானம். இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும். மாறாக, இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.