Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஏழைகளின் ஊட்டி ஏற்காடு - சுற்றுலா.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நூறு ரூபாய் பணமும் ' நடை ' போட ஆசையும் இருந்தால் இதோ உங்கள் இதயத்தோடு இதயமாக இணைந்துவிடும்- ஏற்காடு. ஆம் பாக்கட்டுக்குள் இ...

நூறு ரூபாய் பணமும் 'நடை' போட ஆசையும் இருந்தால் இதோ உங்கள் இதயத்தோடு இதயமாக இணைந்துவிடும்- ஏற்காடு.

ஆம் பாக்கட்டுக்குள் இருக்கும் பணத்தை பதம் பார்க்காத பசுமை நிறைந்த மலை-ஏற்காடு. அதனால் தான் 'ஏழைகளின் ஊட்டி' என அன்போடு அழைக்கப்படுகிறது நம்ம ஏற்காடு.

சரி இனி ஏற்காடுக்குள்ள நுழையலாமா!!!


பருவ வயதுகாரனின் பார்வையை விரிய வைக்கும் வனப்பு அதன் உயரம்.  அழகிய பெண்ணின்  உருவம் அதன் அழகு. அவள் கூந்தலை போல பறந்து விரிந்து அலங்கரிக்கும் பசுமை, அதன் கொண்டையை சிங்காரிக்கும் 20 கொண்டை ஊசி வளைவுகள், வள்ளுவர் வர்ணித்த மெல்லிய இடையால் போன்ற வளைவுகள் இதை ரசித்தபடியே அடிவாரத்தில் இருந்து 22 கி.மீ பயணித்தால்  உயரத்தில் இருக்கும் அழகிய ஏற்காடு நகரத்தை அடைந்தோம்..  சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 29 கி.மீ மட்டுமே. வெகு அருகில் மாநகரத்தை ஒட்டியே இருப்பது இதன் சிறப்பம்சம் என்றால் இவளின் (செல்லமா தான் சொல்றேங்கோ) காதல் விளையாட்டுகளை காண்பது சிறப்போ சிறப்பு. பசுமை போர்த்திய வனப்பு மிகுந்த மலையின் மேல் மோகம் கொண்டு பனி மேகம் உரசி மெது மெதுவாய் வேகத்தை கூட்டி மோகத்(தீயை)தை படர இந்த காதல் விளையாட்டை பார்க்கும் நமக்கே வெட்கம் வந்துவிடும். இது பேரானந்தம். இந்த அழகிய காதலை தான் ஆங்கிலத்தில் 'மிஸ்ட்என வர்ணிக்கின்றனர்.


நம்ம ஏற்காட்டு மங்கைக்கு இருக்குற ஒரே பிரச்சனை என்னன்னா ஆவுனா மேகத்திற்கு கண்ணசைவை  காட்டிவிடுவாள். அப்புறமென்ன அடிக்கடி விளையாட்டு தான். வெயில் காலம் என்றாலும் இவர்கள் படர்த்தல் மட்டும் குறைந்ததே இல்லை. சேலம் வெப்பம் நிறைந்த மாவட்டம் என்பதால் யாரும் வெப்பம் தணிக்க இங்க வந்துடலாம். சேலத்தில் இருந்து வெறும் 17 ரூபாய் தான் பேருந்து கட்டணம். 20 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து உள்ளது. மேலே ஏற்காட்டில் 25 ரூபாய்க்கு நல்ல உணவு கிடைக்கிறது அப்புறமென்ன சுகர், உப்பு, கொழுப்பு ஏதும் அண்டகூடாது என நினைத்து நடை போட்டால் எல்லா சுற்றுலா பகுதிகளும் எட்டிவிடும் தூரம் தான்.நூறு ரூபாயில் செலவு முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம், இவள் ஏழைகளின் அரசி என வர்ணிக்க.


அதுக்காக வசதி படைத்தோர் பணத்தை இறைக்க வாய்ப்பில்லையா? என கருத வேணாம். அதற்க்கும் இங்கு வழி உண்டு அறுநூறு ரூபாய் தொடங்கி ஆறாயிரம் வரை ஒருநாள் வாடகை தருமளவு தங்கும் லாட்ஜுகள் உண்டு. பெரிய நட்சத்திர ஹோட்டல்களும் உண்டு.

800 ரூபாய் கொடுத்தால் ஏற்காட்டில் உள்ள அத்தனை இடங்களையும் தங்கள் காரிலேயே ஏற்றிக்கொண்டு சுற்றி காட்டிவிட்டு வருவர் ஏற்காடு ஏரி அருகேயே உள்ள ட்ராவல்ஸ் ஓட்டுனர்கள். வெளியூர்ல இருந்து வர்றவங்களுக்கு சேலத்தில் உறவுகள் இருந்தால் அவர்கள் பைக்கை வாங்கிகொண்டு கூட ஏற்காடு பவனி வரலாம். ரெண்டு லிட்டர் பெட்ரோலில் ஒட்டுமொத்த அழகையும் கண்களில் உள்வாங்கி இதயத்தில் சேவ் பண்ணி வச்சுக்கலாம். நான் இப்போ பைக் ல தான் போறேன். வரிங்களா அப்படியே என்னோடவே சேர்ந்துகுறீங்களா?!!

பெரிய மின் கோபுரமும் அதன் கீழே உள்ள அண்ணா சிலையும் ஏற்காடு நகரத்தின் முகப்பாய் இருந்து நம்மை வரவேற்றது.


மெல்லிய இலை மேல் படர்ந்த பனி துளி போல பூமி பந்தின் மீது நீர் படர்ந்து 'ஏரி பூங்கா'வாக இருக்க அதில் கன்னி பெண்ணை தழுவி செல்லும் தென்றல் காற்றை போல் ஊர்ந்து சென்றது படகுகள்.

ஆம் அங்கேயே 'படகு இல்லம்' இருந்தது. பெரியவருக்கு 120 ரூபாய் தான் படகு சவாரி செய்ய. அப்படியே சவாரியை முடித்துவிட்டு அருகில் இருந்த அண்ணா பூங்காவிற்குள் நுழைந்தோம்.

சிறியவர் பெரியவர் என அனைவரும் சறுக்கல் தரையில் சர்கேஸ் விட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டு இருக்க அதை ரசிக்க ரசிக்கவே பசி வயிற்ரை கிள்ள 'நல்ல ஆனால் குறைந்த விலையில் ஒரு ஹோட்டல் இருந்தா சொல்லுங்க' என்றோம் பஜ்ஜி கடை பாட்டியிடம். 'நல்லாவும் இருக்கனும் காசு கொறைவாவும் இருக்கணும் அப்படினா நம்ம பெருமாளு நடத்துற 'தம்பி பிரபாகரன்' கடைக்கு போங்க...' என அருகிலேயே இருந்த ஹோட்டலிற்கு மன்னிக்கவும்  'உணவகத்திற்கு' வழிகாட்ட நுழைந்தோம்.

வாசலிலேயே 'பிரபாகரன்' படம் போட்ட கம்பீரம் உள்ளே அழைக்க, உள்ளேயோ 'பெரியார், அம்பேத்கர், புத்தர், திருவள்ளுவர்' பொன்மொழிகள் கடை முழுக்க ஒட்டி வைக்கப்பட்டு இருக்க படித்துகொண்டு இருக்கும்போதே சுட சுட சோறு வைக்கப்பட்டது. சைவமும் இருந்தாலும் எண்ணையில் நல்லா பொரிக்க வைத்து செவ செவனு மிணிக்கிட்டு இருந்தத பார்த்ததுக்கப் புறமும் சைவத்துல சாப்பிடமுடியுமா?! செவப்பிய வாங்கி மட்டன், சிக்கன் கொழம்பு மிக்ஸ் செய்து முல்லு படாமல்  முதல் மரியாதை சிவாஜி சார் போல மீனை முழுங்கினோம்.

அட ஆமாங்க அந்த செவப்பி 'கெண்டை மீனு' தான்.
  

திருப்தியா சாப்பிட்டு விட்டு லேடீஸ் சீட் புறப்பட .அங்கிருந்து மூணாவது கி.மீ இல் அதை அடைந்தோம். அங்கே இருந்த டெலஸ்கோப்பில் கீழே சேலத்தில் உள்ள மேட்டூர் டேம், டால்மியா, என அனைத்தையும் கண்ணருகே கொண்டு வந்து பார்த்தோம் செம அழகு. அருகிலேயே இருந்த ஜென்ட்ஸ் சீட் போக அங்கே இருந்து பசுமை நிறைந்த மலையை பார்க்க அழகிய கியூட் கவிதையாய் காட்சி தந்தது. நல்ல வியூ பாயின்ட்.

கொஞ்ச(ம்) சென்றோம்.. அங்கே புதியதாய் திறக்கப்பட்ட (அக் 15 இல் திறந்தனர்) தாவர பூங்காவிற்குள் நுழைந்தோம். 'தம்பி ஏற்காட்டில் இது புது இடம் வாங்க வாங்க 'என நுழைவு சீட்டை தந்து ரூ 20  பெற்றுக்கொண்ட பெண்மணி 'இது முழுக்க தாவரங்கள் உள்ள பூங்கா இங்க உட்கார்ந்து அதை ரசிக்கலாம் முக்கால்வாசி வேலை முடிந்துவிட்டது' என கூற அவர் சொன்னதன் போலவே ரம்மியமாய் இருந்தது புதிய தாவர பூங்கா. அருகே உயரத்தில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று 'தோழரே நீங்கள்தான் எங்கள் தமிழ் சமூகத்தின் மூத்த குடி முருகு என்றால் அழகு அந்த அழகை தான் இந்த ஏற்காடு சுமந்து இருக்கிறதே' என கொஞ்சம் பேசிவிட்டு அங்கிருந்து நடந்தே ரோஜா தோட்டம் நுழைந்தோம். ஆர்.கே செல்வமணியின் தோட்டம் கிடையாதுங்க நம்ம அரசாங்கத்து தோட்டம் தான்.


சிவப்பு, மஞ்சள் என எங்கும் வண்ண வண்ண மலர்கள்...உயர்ந்த உயர்ந்த மரங்கள் என பசுமையில் ஓர் பசுமை. நிறைய தாவிரங்கள் அங்கு விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது அறிய வகை தாவிரங்களாம்.

பல நாட்டு மலர்களும், பெரும்பாலும் நம் நாட்டு மலர்களும் அங்கே வைக்கப்பட்டு இருக்க மங்கை கூந்தலில் மலர்கள் ஏற்காடு மங்கை கூந்தலில் மலர்கள்.
திசையில் மூணு கி.மீ இல் உள்ள கிள்ளியூர் அருவிக்கு சென்றோம் உயர்ந்த இடத்தில இருந்து அருவி நீர்தாரகைகள் கொட்ட அவை நம் மீது பட்டு தெறிக்க (இங்கு மனைவி,காதலி  என யாரையும் சேர்த்துகொள்ளலாம்) தத்தி தத்தி பேசிய பேச்சின் இடையில் உதடுகளில் பட்டு தெறித்த குழந்தைகளின் எச்சில் துளி சுகம்.

இவைகளை ரசிக்க ரசிக்கவே அந்தி சாய தொடங்கிவிட்டது...இன்னும் போட்டானிக்கள் கார்டன், மான்போர்ட் பள்ளி என பல இடங்கள் உள்ளன. இந்த பள்ளியில் தான் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் படித்தார்கள் என்பது கூடுதல் தகவல்.

திரும்பிய நம்மை மீண்டும் மீண்டும் வாருங்கள் என்பதாக இருந்தது வழிநெடுக இருந்த  குரங்குகள் அணிவரிசை.


ஏற்காடு என்றாலே அதிகம் வியாபாரத்தளம் ஆகாத பசுமை பிரதேசம் எனலாம்.. அமைதி, பசுமை, ரம்மியமான சூழல் என தனிமை விரும்பி செல்பவர்களுக்கு ஏற்காடு ஒரு சொர்கபுரி தான்.அதுவும் குறைந்த செலவில் கிடைத்த சொர்கபுரி.

ஆம்!

நூறு ரூபாய் பணமும் 'நடை' போட ஆசையும் இருந்தால் இதோ சொர்க்கம் உங்கள் பக்கத்தில்....

நன்றி!!!


24 Apr 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...