Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பிஸ்கட் உருவான வரலாறு -bicuits history
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார...
பிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் 'பன்னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள்.
பிஸ்கட் சந்தையைப் பொறுத்தவரை இன்று பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக சிறு தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய பெருகிவிட்டிருக்கின்றன. அதிலும் கிராமப்புற சந்தையைக் குறிவைத்து சிறிய பிஸ்கட் கம்பெனிகள் நிறைய செயல்படுவதால் அதற்கென தனிச்சந்தை உருவாகியிருக்கிறது. என்றாலும் இந்தியாவின் பிஸ்கட் தயாரிப்பில் 70 விழுக்காட்டை இரண்டு தனியார் நிறுவனங்களே கைவசம் வைத்துள்ளன.

பிஸ்கட் தயாரிப்பின் வரலாறு ரோமில் தொடங்குகிறது. கோதுமையில் செய்த சிறிய துண்டுகளான ரொட்டியை தேனில் தொட்டுச் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அந்த நாட்களில் பிஸ்கட்டுகளில் இனிப்பு சேர்க்கப்படவில்லை. விற்பனைப் பொருளாக மாறவும் இல்லை. வீட்டில் மட்டுமே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன.
16-ம் நூற்றாண்டில்தான் பிஸ்கட், விற்பனைப் பொருளாக மாறியது.அதன் பிறகு கடற்படை வீரர்களுக்கான உணவாக பிஸ்கட் மாறியது, கடற்பயணத்தில் கெட்டுப்போகாத உணவுப் பொருளாக பிஸ்கட் இருந்ததே இதற்கான முக்கியக் காரணம். ஆனால், அந்த பிஸ்கட்டுகள் இன்று நாம் சாப்பிடுவது போல மிருதுவாக இல்லை. கடினமான பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இனிப்பும் முட்டையும் சேர்த்து மிருதுவான பிஸ்கட்டுகளைத் தயாரிப்பதில் பெர்சியர்கள் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகப் புதிய வகை மென் பிஸ்கட்டுகள் தயாரிப்பது தொடங்கியது.

15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் துறவிகள் தங்களின் உணவாக பிஸ்கட்டை வைத்திருந்தார்கள். துறவிகளுக்காகவே விஷேசமான பிஸ்கட்டுகள் மடாலயங்களில் தயாரிக்கப்பட்டன. அதை விரத நாட்களில் பயன்படுத்தி வந்தார்கள். 1595-ல் டீபோல் என்ற ஆர்மீனியத் துறவி ஒருவர் தனது விரத நாட்களில் சாப்பிட்ட பிஸ்கட் பற்றி எழுதியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஜோடன் கேக் என்ற குக்கீ யூத துறவிகளின் விருப்ப உணவாக இருந்தது.

தொழில் புரட்சியின் வழியாக ஈஸ்ட் தயாரிப்பு எளிதானது. பிஸ்கட்டை எம்போஸ் செய்யவும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும் உரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. தாமஸ் விகர்ஸ் என்பவர் இந்த இயந்திரங்களை உருவாக்கினார். புதிய இயந்திரங்களின் வருகையால் பிஸ்கட் செய்வது தனித் தொழிலாக வளர ஆரம்பித்தது. அதற்கான சந்தை உருவானது. ஆகவே, பிஸ்கட்டுகளை எளிய மக்களும் வாங்கி உண்ணத் தொடங்கினார்கள்.

டீயில் பிஸ்கட்டை முக்கிச் சாப்பிடும் பழக்கம் இங்கிலாந்தில்தான் பிரபலமானது. 19-ம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களே டீயில் பிஸ்கட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தார்கள். ஆகவே, அதை பிரபுக்கள் மோசமான பழக்கம் என ஒதுக்கி வைத்தார்கள். பணக்கார விருந்தில் டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், டீயில் ஊறிய பிஸ்கட்டின் சுவை பலருக்கும் பிடித்திருக்கவே, அது அனைவருக்குமான பழக்கமாக உருமாறியது. இதற்காகவே விசேஷ பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. அப்படி அறிமுகமானதே ரஸ்க். இது போர்த்துகீசிய சொல்லான ரோஸ்காவில் இருந்து உருவானது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் மூலமாகவே ரஸ்க் அறிமுகமானது.

பிஸ்கட்டை எவ்வளவு நேரம் டீயில் முக்கி வைத்திருப்பது என்பது ஒரு கலை. கவனம் தப்பினால் பிஸ்கட் டீயில் விழுந்து கரைந்துவிடும். இதுகுறித்து இயற்பியல் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறார் உணவியல் ஆய்வாளர் மெக்கலன்.
தானியங்களின் துகள்கள் ஒன்றுசேர்ந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. மண்பானையில் இருப்பது போன்றே, பிஸ்கெட்டிலும் நுண்மையான துவாரங்கள் இருக்கின்றன. டீயில் ஊறும்போது பிஸ்கட்டில் உள்ள இந்த பிணைப்புகள் தளர்ந்துவிடுகின்றன. அதனால் கனம் அதிகமாகி பிஸ்கட் நெகிழ்ந்து தேநீரில் விழுந்துவிடுகிறது.

இதற்குக் காரணமான இயற்பியல் உண்மைகள் குறித்து லென் ஃபிஷர் என்கிற இயற்பியலாளர் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் டீயில் எப்படி பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவது என்பதற்கு ஒரு டிப்ஸ் தருகிறார்.

அதாவது, 'பிஸ்கட்டை தேநீரில் செங்குத்தாக முக்குவதைவிடவும் படுக்கைவாட்டில் சாய்வாக முக்கினால், அதன் அடிப்புறம் மட்டுமே ஈரமாகும்; மேல்பகுதி அதே மொறுமொறுப்புடன் நனையாமலிருக்கும். ஆகவே பிஸ்கட் உடைந்து விழாது. சுவைப்பதற்கும் எளிதாக இருக்கும்என்கிறார்
பிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பதற்காகவே இந்தோனேஷியாவில் டிம்டாம்ஸ்லாம் என்றொரு விழா நடக்கிறது, அதில் பெரும்திரளாக மக்கள் கூடி பிஸ்கெட்டை டீயில் முக்கிச் சாப்பிடுகிறார்கள் 16-ம் நூற்றாண்டு வரை சந்தையில் சர்க்கரை கிடைப்பது எளிது இல்லை. அது விலை உயர்ந்த பொருள் என்பதால் இனிப்பு சேர்க்காத பிஸ்கட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டன. அதில் சுவைக்காகத் தேனை தொட்டுக்கொள்வார்கள்.
ஓட்ஸ் மற்றும் கோதுமையில் வெண்ணைய் கலந்தே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது ராகி, சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் புருஸ் தனது நாவலில் தேநீரில் தனக்கு விருப்பமான சிறிய கேக்கை முக்கிச் சாப்பிடுவது குறித்த நினைவுகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.

மனிதர்களுக்கு பிஸ்கட் பிடித்திருப்பது போலவே நாய்களுக்கும் பிஸ்கட் சாப்பிட பிடித்தேயிருக்கிறது. இன்று அதிகம் விற்பனையாகும் எலும்புத் துண்டு வடிவில் உள்ள நாய் பிஸ்கட்டுகள் இங்கிலாந்தில்தான் அறிமுகமாயின.

இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஸ்பிராட் என்பவர் 1890-களில் நாய்களுக்கு என மாமிசம் கலந்த விசேஷ ரொட்டிகளைத் தயார் செய்து விற்றுவந்தார். அந்த நாட்களில் நாய்களுக்கான சிறப்பு உணவு வகைகள் தயாரிப்பது காப்புரிமை பெற்றிருந்தது. அதை மீறி ஜேம்ஸ்பிராட் நாய்கள் உணவைத் தயாரித்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஜேம்ஸ் பிராட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை, அவர் அமெரிக்காவுக்கு சென்று அங்கே தனது நாய் ரொட்டிகளை விற்பனை செய்யத் தொடங்கி பிரபலமானார்.
1908-ல் பென்னட் என்பவர் இறைச்சி கடை ஒன்றில் மீதமான இறைச்சிகளை அரைத்து அதை கோதுமை மாவுடன் சேர்த்து ரொட்டி செய்து நாய்களுக்குப் போடுகிறார்கள் என்பதை அறிந்து, அதே பாணியில் நாய்களுக்குப் பிடித்தமான எலும்புத்துண்டு வடிவ பிஸ்கட்டுகளை தயாரிக்கத் தொடங்கினார்.

வளர்ப்பு பிராணிகளுக்காகப் பணம் செலவிட விரும்பிய வசதிபடைத்தவர்கள் இந்த நாய் பிஸ்கட்டுகளை விரும்பி வாங்கத் தொடங்கினார்கள். 1910-ல் இதற்கென தனி நிறுவனத்தைத் தொடங்கிய பென்னட், உலகின் முக்கியமான நாய் உணவு தயாரிப்பு நிறுவனமாக உருமாற்றினார்.


இந்தியாவின் முதல் பிஸ்கட் கம்பெனியாக அறியப்படும் பிரிட்டானியா, 1892-ல் கல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூபாய் 295 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது, 1910-ம் ஆண்டு மின்சாரவசதி கிடைக்கவே பிரிட்டானியா பிஸ்கட் தன்னை தொழில்நிறுவனமாக வளர்த்துக்கொள்ளத்தொடங்கியது. இதன் காரணமாக இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பிஸ்கட்டுகளை தயாரித்து விநியோகம் செய்வதற்கு இந்த நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. இன்று பிஸ்கட் சந்தையில் 4,000 கோடி வர்த்தகம் செய்யும் பிரமாண்ட நிறுவனமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.

மக்ரோன் எனப்படும் நாவில் இட்டால் கரைந்துவிடும் பிஸ்கட் வகையை அறிமுகப்படுத்தியவர்கள் பெர்ஷியர்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் புகழ்பெறத் தொடங்கிய மக்ரோன் பாரீஸில் புது ருசி கொண்டது. பிரபல கேக் தயாரிப்பாளரான மெய்சன் லாடுரே தயாரிப்பில் உருவான மக்ரோன்கள் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றிருந்தன. இன்றும் பிரெஞ்சு மக்கள் மக்ரோனை விரும்பி உண்ணுகிறார்கள்.

இது போலவே ஐபோன் குக்கி எனப்படும் புதுவிதமான பிஸ்கட் ஒன்று மேற்கு ஜப்பானில் இப்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. குமிகோ கு‌டோ என்ற பேக்கரி தயாரிப்பாளர் ஐபோன் வடிவ பிஸ்கட்டைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஒரு ஐபோன் பிஸ்கட்டின் விலை 33 அமெரிக்க டாலர். அதாவது 1,985 ரூபாய், இந்த பிஸ்கட்டுக்காகப் பலரும் முன்பதிவு செய்து இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள்.
முழுவதும் எண்ணெய்யில் பொறித்த சமோசா, பஜ்ஜி, வடை போன்றவற்றுக்கு மாற்று என்ற அளவில் பிஸ்கட்டுகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் ஓட்ஸ் மற்றும் ராகியில் செய்த பிஸ்கட்டுகள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.
பிஸ்கட் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து பிஸ்கட் மட்டுமே சாப்பிடுகிறவர்களுக்கு வயிற்று உபாதைகள் உருவாகின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால், அதை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மாறிவரும் உணவுச் சூழலில் பாக்கெட்டுகளில் அடைத்த பிஸ்கட்டுகளை விடவும் சிறுதானியங்களில் செய்த ரொட்டி, சுண்டல், அடை போன்றவை ஆரோக்கியத்துக்கான உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள். பிஸ்கட் அறிமுகமாவதற்கு முந்தைய காலங்களில் நமது மூதாதையர்கள் அவற்றைத்தானே சாப்பிட்டு வந்தார்கள்?




15 Sep 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...