இளவரசனின் உத்தரவை ஏற்று படை வீரர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் பெரிய ஏரியை வெட்டுகிறார்கள். வெட்டி முடித்ததும் தன்னுடைய தந்தையின் புனைப் பெயரான "வீரநாராயணன்" என்று பெயர் வைக்கும் படி கூறிவிட்டுச் போருக்குச் சென்றுவிடுகிறான். சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய ஏரியை பல மாதங்களாக உயிரை கொடுத்து அந்த படை வீரர்கள் வெட்டி முடிக்கிறார்கள். வெட்டிய அந்த ஏரியை பார்க்க அவர்களின் இளவரசன் உயிரோடு இல்லை. போருக்கு சென்ற இளவரசன் எதிரிகளிடம் வீரமாக போரிட்டு யானை மீது இருந்தவாரே இறந்து விடுகிறான். ஆனால் அவன் வெட்டுவித்த ஏரி இன்றும் உள்ளது, ஏரி வெட்டப்பட்டு 1100 ஆண்டுகள் ஆகின்றது, சென்னையில் வாழும் ஒன்றரை கோடி பேருக்கு இன்றைக்கும் குடிக்க நீரை தந்துகொண்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல ஊர்களுக்கு குடிநீரை விநியோகிக்கின்றது. இந்த ஏரியின் மூலமாக அந்த மாவட்டமே பயிர் செய்து பிழைகின்றது. ஆம் அது தான் "வீராணம் ஏரி" என்கின்ற "வீரநாராயணன் ஏரி". வெட்டச் சொல்லி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டவன் தக்கோலப் போரில் வீர மரணமடைந்து "யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "ராஜாதித்தன்". வெட்டியது சோழர்களின் படை!.
ஒவ்வொரு குலத்திற்கு/ஏரிக்கு பின்னும் இது போன்ற ஒரு கதை இருக்கின்றது, அது கோயில்களுக்கு சம்மந்தப்பட்ட குளங்கள் என்றால் இன்னும் சுவாரசியமான சம்பவங்கள் அதன் பின் இருக்கும். அன்றைக்கு இறைவனின் திருமேனிகளை அபிஷேகம் செய்யவும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்கவும் பயன்பட்ட குளங்களின் நிலைமை இன்றைக்கு பரிதாபமாக உள்ளது. இவற்றிற்கு மட்டுமா குளங்கள் பயன் பட்டது? இல்லை கோயில் குளங்கள் நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டது. குளங்கள் அந்த பகுதியின் நிலத்தடி நீரை உயர்த்த உதவியது, குளத்தில் நீர் நிறைந்திருந்தால்,அந்த பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் கிணறுகளிலும் நீர் நிறைந்திருக்கும்.
கோயில்கள் உயரச் செல்லச் செல்ல, கற்களை எப்படி மேலே கொண்டு செல்வது? மண்ணை குவித்து, அதன் மீது யானைகளை வைத்து கற்களை உருட்டி உயரம் எடுத்துச் சென்றிருப்பார்கள். அப்படிப்பட்ட சாரங்கள் அமைக்க எக்கச்சக்கமான மண் தேவைபட்டிருக்கும் அப்படி மண் எடுக்க தோண்டப்பட்ட இடங்களை கூட குளங்களாக மாற்றி இருக்கிறார்கள், ஆனால் அன்றைய அரசர்கள் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும் வார்த்தையில் சொல்லி மாளமுடியாத அளவிற்கு மோசமான நிலையில் இன்றைக்கு உள்ளது, வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் "மகேந்திர வாடி" என்ற ஊரில் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தன்னுடைய குடவரைக் கோயிலுக்கு எதிரே "மகேந்திர வர்மன்" வெட்டிய "மகேந்திர தடாகம்" என்கின்ற ஏரி ஆயிரத்து நானூறு வருடங்கள் கழித்து இன்றும் ஏழு கிராமத்திற்கு குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் பயன் பட்டுக்கொண்டிருக்கின்றது!
கோயிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒவ்வொரு குளங்களையும் உற்று நோக்கினால், அந்த குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஒரு வழி, அந்த குளம் நிரம்பி விட்டால் அந்த நீர் வெளியேறுவதற்கு ஒரு வழி என ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அவர்கள் திட்டமிட்டு கட்டியுள்ள வித்தை நம்மை வியக்கச் செய்யும். ஆனால் இந்த வழிகள் அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளாலும், நீர் செல்லும் வழியை ஆக்ரமிப்பதாலும் அந்த குளங்கள் இன்றைக்கு நிரம்புவதே இல்லை. நீர் நிலையின் பாதையை அடைப்பது என்பது நமக்கு நமக்கு நாமே சமாதி கட்டிகொள்வது என்பதை நாம் உணரவேண்டும். நீர் நிலைகளை அடைப்பதை விட மோசமான செயல் வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.
அந்நியர்கள் தமிழ் நாட்டின் மீது படை எடுத்த போது அவர்கள் கைக்கு நம்முடைய விலைமதிக்க முடியா சிலைகளும், நாணயங்களும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அந்த சிலைகளை மறைத்து வைக்க இது போன்ற குளங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். மறைத்து வைத்தவர்கள் போருக்கு பின் உயிரோடு இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் அவற்றை வெளியே எடுத்திருப்பார்கள், அது இன்னும் சில இடங்களில் புதைந்து இப்போது தோண்டும் போது கிடைக்கிறதென்றால் இன்றைக்கு கிடைக்கும் சிலைகளும் நாணயங்களும் அவர்கள் உயிரை கொடுத்து காப்பாற்றியவை என்பதை தான் உணர்த்துகின்றது. குளங்களை தூய்மையாய் வைத்திருப்போம். நீர் நிலைகளை காப்பாற்றுவோம். "நீரின்றி அமையாது உலகு".
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.