Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடு / udumalpet kumily shortest route bike riders
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உடுமலை அருகில் பொள்ளாச்சி , வால்பாறை , பழனி என சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா ...


உடுமலை அருகில் பொள்ளாச்சி, வால்பாறை, பழனி என சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில் குறிப்பிட்ட சில தலங்களுக்கு மட்டும் செல்ல முடியும். மேலும், இந்தப் பகுதிகள் பெரும்பாலும் பயணித்த பகுதிகளாகவே இருக்கும். சரி, அப்ப வேற எங்கதான் செல்வது ?. இந்த கேள்விக்கான பதில்தான் இந்தக் கட்டுரையே. 

வார இறுதி நாட்கள் விடுமுறையில் உடுமலையில் இருந்து குமுளி செல்வது சிறந்த சுற்றுலாவாக இருக்கும். அதிலும், சென்று வரக்கூடிய இடைப்பட்ட பயணத்தில் கூட மேலும் சில சுற்றுலாத் தலங்களை அனுபவிப்பது என்பது கூடுதல் சிறப்பு தானே. உடுமலையில் இருந்து, பசுமை மலைக் காடுகளும், மலைச் சிகரங்களும், நிறைந்த மூணார், குமுளி, கொடைக்கானல் என ஒரே பயணத்தில் அனைத்து அம்சங்களையும் ரசித்து வர இந்த ரூட்டை டிரை பண்ணி பார்க்கலாம். இவை உங்களது பயண நேரத்தைக் குறைத்து, மறக்க முடியா அனுபவங்களையும் தரும். 

உடுமலை - மூணார் 
உடுமலையில் இருந்து மூணாரு சுமார் 86 கிலோ மீட்டர் தொலைவில் கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து மானுப்பட்டி வரையிலான 17 கிலோ முட்டர் மட்டுமே நம் அன்றாட நகரமயமாக்கலைப் பார்க்க முடியும். அடுத்து வரும் சுமார் 70 கிலோ மீட்டர் பயணம் அடர்ந்த வனக் காடுகளும், வன விலங்களும், ஜில்லென்ற காற்றுடனேயே பயணிக்க முடியும். மலையேற்றத்தின் துவக்கத்திலேயே ஆனைமலை புலிகள் சரணாலயமும் உள்ளது. விருப்பமும், நேரமும் இருப்பின் அங்கேயும் சென்று வரலாம். 

சின்னார் பாலம் இந்தப் பயணத்தில் நம் கண்களுக்கு முதலில் விருந்தளிப்பது சின்னார் பாலம் தான். இந்தப் பாலத்தில் இருந்து ஒரு சில மீட்டர் தொலைவிலேயே அமராவதி அணையையும் காண முடியும். மாலை வேளையில் மான்கள் கூட்டம் கூட்டமாக வருவதை இங்கு தெளிவாக கண்டு ரசிக்கலாம். மேலும், இந்த பாலத்தில் இருந்து தான் மலைப்பாதையும் தொடங்குகிறது. அதன் பிறகு வரும் ஒரு சில நிமிடங்களிலேயே தமிழக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் நுழைகிறோம். 

தூவானம் அருவி 
அடுத்த 45 நிமிடங்கள் கடந்து நம் கண்ணில் தென்படுவது தூவானம் அருவி. மலைப் பாதையில் இருந்தபடியே இந்த ஒரு சில கிலோ மட்டர் தொலைவில் கொட்டும் இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும். தொடர்ந்து பயணிக்கையில் பாதையில் செல்ல செல்ல, வானுயர்ந்த காடுகளின் மரங்கள் மறைந்து தேயிலை தோட்டங்களும், அதன் நறுமனமும் நம்மை வரவேற்கும். 

மூணார் 
ஏறக்குறைய சுமார் மூன்று மணி நேர பயணத்திற்குப் பின் நாம் நுழையப் போகும் சிறிய மலை நகரம் மூணார். நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். பருவநிலை எப்போதுமே ரொம்ப ரொமேண்டிக்காக இருக்கும். சுத்தியும் பச்சை மலைகளும் டீ எஸ்டேட்களும் அருவிகளும் cடலையும், மனதையும் குளிரச் செய்திடும். இதனாலேயே தமிழகத்தின் ஹனிமூன் ஸ்பாட்டுகளில் மூணார் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

மூணார் சுற்றுலாத் தலங்கள்
மேட்டுபட்டி அணை மூணாரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேட்டுபட்டி அணை. இதனருகிலேயே இந்தியா - சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு அழகிய மாட்டுப் பண்ணையும் உள்ளது. மாடுப்பெட்டி அணையின் மற்றுமொரு சிறப்பு, நீர் மின் நிலையம் ஆகும். இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

ஆட்டுக்கல் 
அட்டுக்கல் முணார் மட்டும் பள்ளிவாசலுக்கு இடைப்பட்ட தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் அருவிகளும், மலை பிரதேசங்களும் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை. மேலும், மூணாரில் இருந்து 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா என சில சுற்றுலாத் தலங்களும் உள்ளன. 

பள்ளிவாசல் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கவும், பிக்னிக் சிற்றுலா செல்வதற்கும் இந்த பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி தலம் மிகவும் ஏற்றதாக உள்ளது. அன்றாட வாழ்க்கையின் சந்தடியிலிருந்து விலகி பயணிகள் இந்த இடத்தின் அமைதி நிரம்பிய இயற்கைச்சூழலில் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். மூணாரிலிருந்து எளிதில் செல்லும்படியாக அமைந்துள்ள இந்த கிராமத்தை சுற்றிலும் காணப்படும் இதர சுற்றுலா அம்சங்களையும் பார்த்து ரசிக்கலாம். 

டாப் ஸ்டேஷன் 
மூணாறு டவுனிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டாப் ஸ்டேஷன் கடல் மட்டத்திலிருந்து 1700 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மூணாறு - கொடைக்கானல் சாலையில் இருக்கும் மிக உயரமான இடமாகும். மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டாப் ஸ்டேஷனின் வியூ பாயிண்ட்டிற்குச் சென்று அழகிய காட்சிகளையும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் காட்சிகளையும் கண்டு ரசிக்க தவற வேண்டாம். 

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி வெகு தூரத்திலிருந்தே கேட்கும் நீர்வீழ்ச்சியின் ஓசை மற்றும் காட்டின் அமைதி போன்றவை ஆட்டுக்கல் தலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களாகும். ஆட்டுக்கல் பகுதியில் சீயப்பாறா நீர்வீழ்ச்சி மற்றும் வளரா நீர்வீழ்ச்சி போன்ற இதர நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன. அருவியில் நனைந்து குளிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு சீயப்பாறா நீர்வீழ்ச்சி மிகப்பிடித்தமானதாக இருக்கும். 

மூணார் - குமுளி 
ஒரு வழியாக மூணாரின் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களை சுற்றி ரசித்த பிறகு அடுத்து நாம் செல்ல வேண்டிய இடம் குமுளி. மூணாரில் இருந்து எட்டித்தோப்பு சாலை வழியாக 84 கிலோ மீட்டர் பயணித்தால் குமுளியை வந்தடையலாம். வழிநெடுகிழும் அருவிகளும், தேவாலயங்களும் நம்மை வரவேற்ற வண்ணமே இருக்கும். இதன் இடைப்பட்ட தூரத்தில் உள்ள உடும்பன்சோலை வட்டம் பைசன் வேலி, சின்னக்கானல், இரட்டையார், நெடும்கண்டம், பாம்பாடும்பாறை, ராஜக்காடு, சந்தனப்பாறை, கட்டப்பனை, கொன்னத்தடி உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. 

குமுளி 
குமுளி என்றாலே இதன் அருகில் இருக்கும் தேக்கடி தான் முக்கிய சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியுள்ளது. இயற்கை நேசிப்பவர்களுக்கென்றே உள்ள அழகிய இடம் தேக்கடி. தமிழக எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி, இயற்கை எழில் சூழ்ந்த அழகிய வனப்பகுதியை கொண்டது. 

படகு சவாரி 
தேக்கடி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது படகுசவாரிதான். அந்தளவிற்கு பிரசித்தி பெற்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் 14 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். யானை, புலி, மான் என தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை அருகில் கண்டு ரசிக்கலாம். 

பெரியார் வனவிலங்கு சரணாலயம் தேக்கடியில் உள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் பிரசித்தி பெற்றது. 673 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், மான்கள், குரங்குகள், பைசன்கள் என இந்த சரணாலயத்தில் ஏராளமான விலங்குகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.. இங்கு ஓடும் பெரியாற்றில் வனவிலாங்குகள் தண்ணீர் அருந்துவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாகும். 

யானை சவாரி 
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விசயம் யானை சவாரி. கம்பீரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து சரணாலயத்தின் இயற்கை அழகை ரசிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். தேக்கடி வனப்பகுதியில் கிடைக்கும் வாசனைப் பொருட்களையும் நீங்கள் நினைவாக வாங்கி வரலாம். 

குமுளி - தேனி 
குமுளியைத் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டால் கம்பம், குச்சனூர் மலைக் குடியிருப்புகளின் வழியாக 59 கிலோ மீட்டர் பயணத்தில் நாம் அடுத்து செல்வது தேனி ஆகும். தமிழக எல்லைப் பகுதியில் தமிழ்நாட்டின் இளமையான மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் செல்லக்குழந்தையாய் வனப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வைகை அணை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, மேகமலை, போடி மெட்டு, வெள்ளிமலை என பல சுற்றுலாத் தலங்களை நிறைந்துள்ளன. 

மேகமலை 
தேனி நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒய்யாரமாக மேகமலை காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார் என பல இன விலங்குகளையும் காண முடியும். 

சுருளி அருவி 
தேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும, இப்பகுதியில் காணப்படும் 18 குகைகளும் உங்களது பயணத்தில் புதுவிதமான அனுபவத்தை தரும். 


போடி மெட்டு 
தேனியில் அமைந்திருக்கும் போடி மெட்டு பகுதியை போடிநாயக்கனூர் சென்று அங்கிருந்து அடைய வேண்டும். போடி மெட்டு ஒரு தனித்தன்மையான சுற்றுலாத் தலமாகும். மேலும் பல்வேறு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை உடைய போடி மெட்டு பகுதி வன உயிர் மற்றும் தாவரங்களை அதிகமாக பெற்றுள்ள இடமாகும். 

தேனி - கொடைக்கானல் 
தேனியில் சுற்றுப் பயணத்தையும், ஓய்வையும் முடித்துவிட்டு பயணத்தை துவங்கினீர்கள் என்றால் பெரியகுளம், பூலத்தூர் வழியாக கொடைக்கானல் மலைப் பிரதேசத்தை அடைந்து விடலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் மேல்மங்கலம் என்னும் பகுதியில் வைகை அணையும், பூலத்தூர் முன்னதாக மஞ்சளார் அணையும் சுற்றுலாத் தலங்களாக அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக் காற்று தழுவ பயண சோர்வும் பறந்து போகும். 

தென்னிந்தியாவின் கிரீடம் கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய தலம். 

சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலைச் சுற்றிலும் கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள் என பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் ஒரே நாளில் சுற்றிப் பார்ப்பது என்பது கடினமானது. அதனால் நேரத்திற்கு ஏற்ப முக்கிய தலங்களை தேர்வு செய்வது சிறந்தது. 

தூண்பாறை 
கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் தூண்பாறையும் ஒன்று. இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. 

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி 
பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சியினை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் பயணத்தில் அடைந்துவிடலாம். இயற்கை விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும். பருவக்காலத்தின் போது எழில்மிகுந்து காணப்படும் இந்த அருவிக்கு செல்லும் வழியிலேயே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வெகு அருகில் காண முடியும். 

தற்கொலை முனை 
தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு எந்த அளவிற்கு ஆழகான தோற்றத்தைக் கொண்டுள்ளதோ அந்தளவிற்கு மிகவும் ஆபத்தானதும் கூட. இந்த பள்ளத்தாக்கு சுமார் 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 6 கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. வைகை அணையை இங்கு இருந்தே கண்டு ரசிக்கக் கூடிய வாய்ப்பு கூடுதல் சிறப்பாகும். 

கொடைக்கானல் - உடுமலை 
கொடைக்கானல் சுற்றுலாவை முடித்துவிட்டு அந்திசாயும் முன் பயணத்தை தொடங்குனீர்கள் என்றால் அடுத்த 65 கிலோ மீட்டரில் பழனியையும், அங்கிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உடுமலையையும் அடைந்து விடலாம். இருள் சூழ்வதற்குள் கொடைக்கானலில் இருந்து மலை இறங்குவது நல்லது. இரண்டாம் முடிவிலேயே உடுமலையை அடைந்து விடலாம்.


22 Jul 2018

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...