18/05/2014 Subash Kumar
‘இவ்வளவு நாளும் ஓடி ஓடி உழைச்சாச்சு. போதும் என்று ஆகிவிட்டது. இனி வீட்டோடை கிடக்கப் போறன். இதுவரை பார்க்காத ரீவி சீரியலுகளைப் பார்த்து நெட்டிலும் உலாவுவன். கட்டிலும் கதிரையும் எண்டு சந்தோசமாக இனி இருக்கப் போறன்.’ மனைவியும் ஒத்துப் பாடினா ‘ஓம் பாவம் அவர். வேலை வேலை என்று ஓடித் திரிஞ்சார். பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு. இனியாவது பேசாமல் ஓய்வா வீட்டை இருக்கட்டும்’ என்றாள்.
அவர் ஒரு முதியவர். ஆனால் தளர் வயசு அல்ல. வயசு 65 தான் ஆகிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவருக்கு இனி முழு ஓய்வு தேவையா? வீட்டோடு பேசாது கிடந்தால் மகிழ்ச்சியும் நலமான வாழ்வும் கிட்டுமா?
“இல்லை” என்கிறார்கள் சுவீடிஸ் தேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
ஆண் பெண் என 3800 பேரை 12 வருடங்களாக அவதானித்த ஆய்வு இது. Swedish School of Sport and Health Sciences ; the Karolinska Institute, in Stockholm இணைந்து செய்த ஆய்வு இது. அவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 1937, 1938 ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்.
அந்த வயதினருக்கும் உடற் பயிற்சி அவசியம். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டுமாயின் அவர்கள் வாழாதிருக்கக் கூடாது. வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வது, தரையை மொப் பண்ணுவது கூட்டுவது போன்ற ஏதாவது உடலுழைப்புடன் கூடிய வீட்டு வேலைகளில் தினமும் கட்டாயம் ஈடுபட வேண்டும்.
அவ்வாறு உற்சாகமாக சுறுசுறுப்புடன் சிறு சிறு வேலைகள் என்று செயற்பட்டுக் கொண்டே இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
- எதுவும் செய்யாது வாழாதிருப்பவர்களை விட பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் குறைவாகும்.
- அத்துடன் அவர்கள் எந்தக் காரணத்திலாவது மரணமடைவதற்கான சாத்தியம் 30 சதவிகிதம் குறைவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
செயற்பட்டுக் கொண்டே இருப்பதானது சும்மா இருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. சும்மா இருத்தல் என்று சொல்லும்போது கதிரையில் உட்கார்ந்திருப்பதையே குறிப்பிடுகிறேன். பல வயதானவர்கள் வீட்டோடு முடங்கிவிடுகிறார்கள்.
நகர்ப்புற வாழ்க்கை முறையும் காரணம் என்பது உண்மையே. சிறிய வீடுகள். அதற்குள்ளேயே சமையல் குளியல், சாப்பாடு, பொழுதுபோக்கு என எல்லாமே அடங்கிவிடுகிறது.
டெலிபோனில் ஓடர் கொடுத்தால் பத்திரிகை முதல், மளிகைப் பொருட்கள், தேவையானால் உணவு என எல்லாமே டெலிவரி ஆகிவிடுகிறது. கடைக்குப் போக வேண்டியதும் இல்லை. பத்திரிகை படிக்க வாசிகசாலை செல்ல வேண்டியதில்லை. டெலிபோன் லைட் பில்லுகளை ஒன் லைனிலேயே செட்டில் பண்ணிவிடலாம்.
எனவே பொழுது போக்கு என்பது ரீவி பார்ப்பது, அல்லது கணனியில் மூழ்குவது என்றாகிவிட்டது. அதுவும் இல்லையானால் போனில் அலட்ட வேண்டியது. ரீவி சனலை ரிமோட்டிலேயே மாற்றிவிடலாம். டெலிபோன் பேச எழுந்து செல்ல வேண்டியதில்லை கைபேசிகள் கைவசம் உண்டு.
அவ்வாறு சும்மா இருந்தால் சுகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் உள்ளுற நோய் பெருகி மரணம் நெருங்கி வரும். அதைத் தடுப்பதற்காகவே தாத்தாக்களும் பாட்டிகளும் சோர்ந்துவிடலாகாது.
இவ்வாறு சோர்ந்து விடாது செயற்பட்டுக் கொண்டே இருப்பதானல் கிட்டும் நன்மைகளாவன, அவர்களது வயதைப் பொறுத்த வரையில் முறையான உடற் பயிற்சிகள் செய்வதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் அர்த்தம் உடற் பயிற்சிகள் அவசியமில்லை, சும்மா இருக்காது செயற்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமே போதும் என்பதாக அர்த்தப்படுமா?. இல்லை.
“எமது ஆய்வின் பிரகாரம் தினசரி உடற்பயிற்சிகள் செய்வதுடன், சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் மாரடைப்பு போன்றவை வரக் கூடிய சாத்தியங்கள் மேலும் குறைவாகும்” என்கிறார் ஆய்வாளரான Ekblom-Bak.
தினசரி உடற் பயிற்சியானது எவருக்கும் அவசியமானதே. வேகநடை, யோகாசனம், சைக்கிள் ஓடுதல், நீச்சல், போன்ற பலவும் நல்லவையே. ஆனால் அவற்றில் நாம் 30 நிமிடங்கள் முதல் 1 மணித்தியாலயம் போன்ற குறுகிய நேரம் மட்டுமே செலவழிக்கிறோம். மிகுதி நேரம் சும்மா இருப்பதை விட ஏதாவது வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கும்.
உண்மையில் மனித உடலானது சும்மா இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல. அது தொடர்ந்து செயற்படுவதற்கவே உருவமைக்கப்பட்டது. எனவே அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் முதுகுவலி, முழங்கால் தேய்வு, தசைகள் சுருங்குதல் போன்ற இன்னும் பல இயற்கைத் தேய்மானப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
பொதுவாக வயதாகும்போது உடலின் செயற்பாடுகள் சற்று குறையவே செய்யும். நடையின் வேகம் குறையும். வேறு வேலைகளும் துரிதமாக நடக்காது. ஆனால் அதற்காக சோர்ந்து முடங்கிவிடக் கூடாது.
“இவவுக்கு வேலை ஒன்றும் கிடையாது. சும்மா சமைக்கிறது, வீடு துப்பரவு பண்ணுவதும் உடுப்புத் தோய்ப்பதும்தான்” என ஒரு கணவன் குறை கூறினார். உண்மையில் காரில் ஏறி வேலைக்குப் போய் அங்கை கதிரையில் இருப்பதைவிட இவரது மனைவி கூடுதலாக வேலை செய்கிறாள்.
“கதிரையில் பொதி போல உட்காரந்திருப்பதை விட வீடு துப்பரவு செய்யும் வேலையின் போது ஆறு மடங்கு அதிகமான கலோரி செலவாகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வுக் கட்டுரையானது British Journal of Sports Medicine சஞ்சிகையின் அக்டோபர் 28 இதழில் வெளியாகியுள்ளது.
எத்தகைய நாளாந்த செய்ற்பாடுகள் உதவும் என்பதைப் பற்றியும் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
- டெலிபோன் பேசுவதற்கு எழுந்து சென்று ரிசீவரை எடுப்பது
- ரீவி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் எழுந்து அங்கும் இங்கும் நடப்பது நல்லது. நிகழ்ச்சிகளின் போது இல்லாவிட்டாலும் விளம்பர இடைவேளைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
- மணித்தியாலயத்திற்கு ஒரு தடவையாவது இருக்கையை விட்டு எழுந்து ஐந்து நிமிட நேரத்திற்கு குறையாது, நின்ற நிலையில் துள்ளிக் குதிப்பது, முழங்காலை மடித்து கீழே இருந்து எழும்புவது போன்ற சிறு பயிற்சிகளைச் செய்யலாம்.
- இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவையாவது ஒரு மாடிக்கு ஏறி இறங்குவது
- வீட்டைக் கூட்டுவது, தரையை மொப் பண்ணுவது
போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவை இங்குள்ளவர்களுக்கும் பொருந்தும். இவை தவிர ஒவ்வொருவரும் தங்கள் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற ஏதாவது வேலைகளைச் செய்து தங்கள் உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும்.
“இவை எல்லாம் எனக்கு எதற்கு வீடு போ போ, காடு வா வா என்கிற வயது” என்று சொல்லாதீர்கள். அவ்வாறு எண்ணவும் கூடாது. எந்த வயதானாலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதுவும் மற்றவர் உதவியை எதிர்பாராது தனது காலில் தங்கியிருப்பதைப் போல வருமா?
சுதந்திரமும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த முதுமை வாழ்வு வேண்டுமானால் சோர்ந்துவிடல் ஆகாது தாத்தா பாட்டிகளே.
பிள்ளைகளுக்கும் ஒரு வார்த்தை.
“சும்மா இருக்கக் கூடாது என்று டொக்டர் சொல்லிப்போட்டார். வீட்டைக் கூட்டுங்கோ. பானையைக் கழுவுங்கோ. மேசையைத் துடையுங்கோ” என்று எல்லா வேலைகளையும் அவர்கள் தலையில் சுமத்தி விடாதீர்கள்.
சும்மா இருப்பது இள வயதினருக்கு நல்லது எந்த ஆய்வும் சொல்லவில்லை. உற்சாகமும் சுறுசுறுப்பும் என இயங்கிக் கொண்டே இருப்பது எந்த வயதினருக்கும் அவசியமானதே.
நன்றி
Dr. எம்.கே.முருகானந்தன்.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிதுவை இட்டு செல்லுங்கள்
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிதுவை இட்டு செல்லுங்கள்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON