கை, கால் குடைச்சல் என்றாலே வயதானவர்களின் உபாதை என நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல
மணிநேரம் வேலை செய்பவர்களுக்கும் இப்பிரச்னை வரும் என்கிறார் மூளை மற்றும்
நரம்பியல் சிறப்பு மருத்துவர் கண்ணன். கை, கால் குடைச்சலுக்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை
முறைகள் குறித்து பேசுகிறார் அவர்.
ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் வரலாம். ரத்த
சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை, கால் நரம்புகள் பாதிப்புக்கு
உள்ளாதல்,
வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக
இருத்தல் போன்றவையும் காரணமாகலாம்.
இந்த உபாதை 30 வயதுக்குஉட்பட்டவருக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே
வேளையில்,
சுமைதூக்கும் தொழிலாளிகள், தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வரலாம்.
பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு
போன்றவை காரணங்கள்.இது பரம்பரையாகத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. கை, கால்களில் ஒருவருக்கு குடைச்சல் உள்ளது என்பதை உடலில் தோன்றும்
அறிகுறிகளை வைத்தேதெரிந்துகொள்ள முடியும். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல்
தோன்றும்... படிப்படியாக முழங்கால் வரை அதிகமாகும்.
இரவு நேரங்களில் தூங்கும்போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடைச்சல்
ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.
இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு இடுப்பு வலிமற்றும் தலைவலி இருக்கும். சிலருக்கு
தூக்கமின்மை வரலாம். அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு,முடி உதிர்தல் போன்றவையும்
சேர்ந்து கொள்ளும்.
Gabapentin,
Pregabalin மற்றும் வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி
சாப்பிடுவதாலும், மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்தலாம். வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்கள் செய்வதும் அவசியம்.
எளிதில் செரிக்கும் புழுங்கலரிசி
உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால்
பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது நன்மை தரும். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்
ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு கூடாது. மருத்துவர் ஆலோசனை
இல்லாமல்,
தாங்களாகவே மாத்திரைகள் சாப்பிடக்
கூடாது.
மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை மருத்துவர்
வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். இதனால் தற்காலிக நிவாரணம் கிடைக்க வாய்ப்பு
உண்டு. தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன்
மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியம். பிரச்னைக்கான தக்க காரணத்தை
ஆராய்ந்து அறிந்து நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொண்டால்
இந்த குறைப்பாட்டை சரி செய்யலாம்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON