Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது ...
மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு

அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.

கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.


தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.

இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள். அந்த சடங்கின் பெயர் 'பெண் சுன்னத்'. உலக சுகாதார மையம் இதை 'பெண்ணுறுப்பு சிதைவு' என்கிறது.

அந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கொடுமை போற்றுதலுக்குரிய புனிதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாடுகளில் வாழும் 13 கோடி பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது  நடத்தப்படுகிறது.

எதனால் இப்படி..?

அவர்கள் புனிதமாக கருதும் கலாச்சார விதி, 'பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும். அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்.' என்கிறது.

மேலும்  யோனி வெட்டும் முறையும் அதில் கூறப்படுகிறது. இதனாலே இது பெண்களின் மறுக்க முடியாதா சம்பிரதாயமாக முக்கியத்துவம் பெறுகிறது.
   


பெண்களின் 4 வயது முதல் 10 வயதுக்குள் இதை செய்து விடுகிறார்கள். இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலுமாக அழிந்துவிடும். மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும்.

இயல்பாக பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியும், எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவதில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். செக்ஸ் உணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே இருக்கிறது.
  


சரி, அப்படி என்னதான் நடக்கிறது இந்த சடங்கில்...???

இதை ஆங்கிலத்தில் 'பீமேல் ஜெனிடல் மியுட்டிலேஷன்' என்பார்கள். தமிழில் பெண்ணுறுப்பு சிதைவு. பெண்ணுறுப்பில் 'க்ளிட்டோரியஸ்' என்ற பகுதிதான் உணர்ச்சி மிகுந்தது. ஆணுக்கு உடலில் எந்த இடத்தில் ஆணுறுப்பு இருக்குமோ, அதே இடத்தில் பெண்ணுக்கு இருக்கும் ஆணுறுப்பின் எச்சம்தான் 'க்ளிட்டோரியஸ்'.

ஆணுறுப்பில் எந்தளவுக்கு உணர்ச்சி இருக்குமோ அதே அளவு உணர்ச்சி சிறியதாக மொட்டுப் போல் இருக்கும் க்ளிட்டோரியசிலும் அப்படியே இருக்கும். உணர்வு ததும்பும் இந்த பாகத்தை வெட்டி எடுப்பதுதான், பெண்ணுறுப்பு சிதைவின் முதல் பகுதி.




இந்த வெட்டும் வேலையை செய்வது டாக்டர்களோ அறுவை சிகிச்சை நிபுணர்களோ இல்லை. வயது முதிர்ந்த கிழவியோ அல்லது பெண்ணின் தாயோ தான். எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் கதற கதற ரண வேதனையோடு அறுத்தெரிவதுதான் முதல் நிலை. மருத்துவத்தில் இதற்கு 'க்ளிட்டோரிடேக்டமி' என்று பெயர்.

சடங்கின் இரண்டாம் நிலை, யோனியின் பக்கவாட்டில் இருக்கும் உதடுகளை வெட்டி எடுப்பது. இந்தப் பகுதிதான் உறவின்போது பெண்ணுக்கு இன்பத்தை அதிகப்படுத்துவது. அதையும் பிளேடால் அறுத்து எடுத்துவிடுவார்கள். இதனை 'லேபியாபிளாஸ்டி' என்று மருத்துவம் சொல்கிறது.


அதன்பின் மூன்றாம் நிலை, பெண்ணுறுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடிவிடுவது. சிறுநீர், மாதவிலக்கு திரவம் வெளியேற சின்னதாக இரண்டு துளை மட்டும் ஏற்படுத்தி விடுவார்கள். இதற்கு 'வெஜைனாபிளாஸ்டி' என்ற மருத்துவப் பெயரும் உண்டு.

 இதை செய்வதற்கு வீட்டில் உள்ள கத்தி, பிளேடு, கண்ணாடி துண்டு, கத்திரி, சாதாரண ஊசி நூலையே பயன்படுத்துகிறார்கள்.




மூன்று நிலையும் முடிந்த பின்னே பெண்ணின் தாய் உறவினர்களிடம் வந்து 'என் மகள் பெண்ணாக மலர்ந்துவிட்டாள்' என்று மகிழ்ச்சியோடு சொல்வார். உடனே மதுவோடு விருந்து டாம்பீகமாக நடக்கும். உள்ளே வீட்டின் பின்புறத்தில் ஒரு மூலையில் இரண்டு காலையும் சேர்த்துக் கட்டிய நிலையில் தாங்கமுடியாத வேதனையோடு பெண்ணாக மலர்ந்த சிறுமி கதறி அழுது கொண்டிருப்பாள். இனி அந்தப் பெண் உணர்ச்சியற்ற ஜடம்.

 காயங்கள் ஆறுவதற்காக 40 நாட்கள் கால்களை சேர்த்தே கட்டிப்போட்டு விடுவார்கள். கொடுமைகள் நிறைந்த இந்த சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, அதிர்ச்சி, பலவிதமான உடல் சார்ந்த நோய்களை பெண்ணுக்கு கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான பெண்கள் இதற்கு பின் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து செய்து கொள்வதற்கு காரணம் அசைக்க முடியாத மத மற்றும் மூட நம்பிக்கைதான். இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும். உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப்படுகின்றன.

பெண்ணுக்கு திருமணமானவுடன் கணவன்தான் பெண்ணுறுப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னிதான் என்பதற்கான சாட்சி அந்த தையல்தான்.

பெண்ணுறுப்பின் வாசலை குறுக்கி தையல் போடுவது உடலுறவின் போதும் குழந்தை பிறப்பின் போதும் தாங்க முடியாத வலியையும் சிக்கலையும் உருவாக்குகிறது. இதனால் பிரசவத்தின் போது குழந்தை இறப்பதோ தாய் இறந்து போவதோ அதிகமாக நடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் முட்டாள்தனமான சடங்குதான் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

எகிப்து நாட்டில் ஒரு 12 வயது சிறுமிக்கு இந்த சடங்கு செய்யும் போது வலி தாங்க முடியாமலும் அதிக உதிரம் வெளியேறியதாலும் இறந்துவிட்டாள். அது அங்கு பெரிய போராட்டமாக வெடித்தது. அதை தொடர்ந்து 2007-ம் ஆண்டு இந்த சடங்கை எகிப்து அரசு தடை செய்தது. ஆனாலும் மற்ற நாடுகளில் இந்த கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.




சிறு வயதில் இந்த சடங்கை செய்து கொண்டு பின்னாளில் மிகப் பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியப் பெண் இதை 'தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்' என்கிறார்.

சிறுவயதில் அவருக்கு நடந்த சடங்கை இப்படி சொல்கிறார், "நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.

பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.

பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

த்துப்..

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.

வாரிஸ் டேரி

நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அடுத்த நொடி

பர்ர்க்என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.

அய்யோ…!’ -நரக வேதனை.

அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’

ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.


                                                வாரிஸ் டேரி
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.

தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன."

என்ன கொடூரம்..! அதோடு நிறுத்தவில்லை வாரிஸ், இந்த சடங்கால் தனது செக்ஸ் உணர்வு முற்றிலும் காணமல் போனதை இப்படி சொல்கிறார்.

"செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.


வாரிஸ் டேரி
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூர்மையான பாறைக் கற்கள்தான்.

நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?


பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்துக்கு இவரைத்தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6-ம் நாளை உலக பெண்ணுறுப்பு சிதைவு எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அவனே ஓரிடத்தில் நிலையாக தங்கி சொத்து சுகங்களை சேர்த்தப் பின் தனது வாரிசில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் பெண்ணை படுத்திய பாடு இருக்கிறதே..

உலகம் உள்ள வரை ஆணிணத்துக்கு பெண்ணிடம் இருந்து மன்னிப்பு கிடைக்காது. இத்தனை பாவம் செய்த ஆண் என்ன பரிகாரம் செய்து அந்த பாவங்களை கழுவப் போகிறானோ தெரியவில்லை.

இதை எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள பெண்களுக்கு கல்வியறிவோ பொருளாதார சுதந்திரமோ இல்லை. அதனால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னமும் இந்த சடங்கு செய்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் அந்த நாட்டு ஆண்களை என்ன செய்வது..??!!


ஐ.நா. சபை இதை மனித உரிமை மீறல் என்று சொல்லியும் குறைந்த பாடில்லை..




18 Apr 2015

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...