Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் வரலாறு
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான , இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆகும...
வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆகும். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். மேலும் இராமாயணம் இதிகாச நூலை இயற்றியவரான வால்மீகி ஒரு வடயிந்திய ஆரிய மரபினர் என்பதால், ஆரிய மரபினரை உயர்த்தி, இராமனை கடவுளாகவும்; திராவிட மரபினரை தாழ்த்தி, இராவணனை அசுரனாகவும் சித்திரித்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அதே இதிகாசத்தில் இராமனுக்கு துணைப்புரியும், தென்னிந்தியர்களை குரங்குகளாக (வானரர்) சித்தரிக்கப்பட்டிருப்பதன் தவறையும் பலர் சுட்டிக்காட்டுக்கின்றனர். வால்மீகி முனிவரின் ஆசிரமம் தமசா நதிக்கரையில் அமைந்து இருந்தது.

ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு, வால்மீகி முனிவர் அவரை நோக்கி, "நாரதரே, இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான், சத்தியம் தவறாத, வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா?" என்று கேட்டார். அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின், வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார். நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில், எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி, அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, "இதயமற்ற அரக்கனே! என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட, அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில், பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி வினயத்துடன் நின்ற போது, பிரம்மா, "வால்மீகி, என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும்!" என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். அதைப் படித்து மகிழாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
வால்மீகி வரலாறு வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர். வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிடும். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சமர்த்தன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்...காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன். ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் 'நாராயண, நாராயண' என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து 'யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்' என்றான்.

முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. 'அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்' என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன். 'தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவு எல்லோரும் இன்று நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப் போக உம்மை தயார் செய்து கொள்ளும்' என்று கடூரமாகச் சொன்னான். இதற்குள் முனிவருக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. இவன் நின்று பேசுகிறான். பேசிப் பேசி இவன் மனதை நல்வழிக்கு திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார். 'அப்பா...நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம்' 'சீக்கிரம் கேட்டுத் தொலையும்' ' நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ' 'வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.' 'உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத்தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? சொல்.' 'என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை.

முற்றும் துறந்தவரான உமக்கு அதெல்லாம் புரியாது'. 'அது இருக்கட்டும் அப்பா. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார்'. 'அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்'. 'அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?' 'இல்லை. அதற்குத் தேவையும் இல்லை'. 'அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா?' 'ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது'. 'இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.' கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான். திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து 'சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்' என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். 'என்னப்பா நடந்தது'. 'சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் 'எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். 

அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை' என்று கூறிவிட்டார்கள்' 'அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை'. 'ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும்' 'நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே' 'சுவாமி. என்ன நாமம் அது?' 'ராம நாமம்' 'என் வாயில் நுழையவில்லையே சுவாமி' 'கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?' 'இதுவா சுவாமி. இது மரா மரம்'. 'நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்'. 'ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே' 'என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்'. 'நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்' என்று வணங்கி நின்றான். நாரதரும் தன் வழியே சென்றார். அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து 'மரா மரா மரா' என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது 'ராம ராம ராம' என்று ஒலித்தது. நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் 'வால்மீகி' என்று அழைக்கப் பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் அந்த கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்ட வால்மீகி முனிவர்.

இந்த வரலாற்றை இந்த பாடலில் உதாரணமாகக் காட்டுகிறார் நாயகி சுவாமிகள்.
நிச்சு ச்ரீஹரி பஜன கார் மொந்நு நீ:
துஸர்வாட் மோக்ஷிக் (நிச்சு)
நிச்சு ச்ரீஹரி பஜன காரி
ஹெச்சுவாடேஸ் லோகுரு ச்ரீ
அச்யுதா கோவிந்தா மெநி தெ
ரெச்சஸெரொ லாஜு ஸொடி நிக்ளி (நிச்சு)
கித்க தபஸுன் கரெதி கைநீ:ரே
ஹரி பஜன ஸொட்டி கித்க தபஸுன் கரெதி கைநீ:ரெ
லெ:க்கொ ஸேகி வால்மீகு கரெ பாப்
அஸ்கி கோந் நமம் ஹால் ஜியெஸ்தெ
தெக்கி தெல்லெரெ திக்கு துஸர்நீ:
உக்காம்புமவெ ஹரிக்யேஸ் ஹோயெஸ்தெ (நிச்சு)
நிச்சு ச்ரீ ஹரி பஜன கார் மொந்நு - மனமே! நீ தினமும் ச்ரீ ஹரியின் நாமத்தைச் சொல்லி பஜனை செய்.
நீ: துஸர் வாட் மோக்ஷிக் - நம் பாவ புண்ணியங்களிடமிருந்து விடுதலை அடைய வேறு வழியில்லை
நிச்சு ச்ரீ ஹரி பஜன காரி - தினமும் ச்ரீ ஹரி பஜனை செய்வாய்
ஹெச்சு வாட் யேஸ் லோகுரு - சிறந்த வழி இதுதான் இந்த உலகத்தில்
ச்ரீ அச்யுதா கோவிந்தா மெநி தெ ரெச்ச ஸெரொ லாஜு ஸொடி நிக்ளி - ச்ரீ அச்யுதா கோவிந்தா என்று நீ கூச்சத்தை விட்டு வெகு சத்தமாய் அவன் நாமத்தைச் சொல்.
கித்க தபஸுன் கரெதி கைநீ:ரே - எத்தனைத் தவங்கள் செய்தாலும் பயனில்லை
ஹரி பஜன ஸொட்டி கித்க தபஸுன் கரெதி கைநீ:ரே - ஹரி பஜனையை விட்டு எத்தனைத் தவங்கள் செய்தாலும் பயனில்லை.
லெ:க்கொ ஸேகி வால்மீகு கரெ பாப் - கணக்கு உண்டா வால்மீகி செய்த பாவங்கள்?
அஸ்கி கோந் நமம் ஹால் ஜியெஸ்தெ - எல்லாம் எந்த நாமத்தால் போனது?
தெக்கி தெல்லெரே திக்கு துஸர்:நீ - பார்த்து அவன் நாமத்தைப் பிடித்துக் கொள்ளடா. வேறு கதி இல்லை.
உக்காம்பும் அவெ ஹரிக்யேஸ் ஹோயெஸ்தெ - தூணில் இருந்து (ப்ரஹலாதனைக் காப்பாற்ற நரசிங்கமாய்) வந்த ஹரி இவன் தான்.
நிச்சு ச்ரீ ஹரி பஜன கார் மொந்நு - தினமும் ச்ரீ ஹரி பஜனை செய் மனமே!

இராமாயண காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர் என்பதை நாமறிவோம். இராமாயண நிகழ்வோடு தொடர் புடைய பல தலங்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. முதன் முதலில் இராமாயண காவியத்தை இராமன் திருமுன்பே பாடியவர்கள்- அவரின் திருக் குமாரர்களான லவனும் குசனுமே. இராமாயண மகாகாவியத்தை எழுதிய வால்மீகியே சீதாராமனை ஒன்று சேர்த்தார் என்ற பெருமையையும் கொண்டதாக அமைந்து விட்டது. வால்மீகி சீதாதேவியைத் தன் ஆசிரமத்தில் வைத்துக் காப்பாற்றினார். அங்குதான் லவ- குசர்களை சீதா பிராட்டி பெற்றெடுத்தாள். வால்மீகியின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க்கப்பட்டு, சிறந்த கல்விமான்களாகவும் வில் வித்தையில் சிறந்தும் விளங்கினர். இராமர் தன் தந்தை எனத் தெரியாமலேயே, லவ-குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் இராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவ-குசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவைக் காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்ததும் இராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர் அப்போது ஒரு யாகக்குதிரை லவ-குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றைக் கட்டிப்போட்டு விட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி இராமனும் அங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ-குசர்களிடம், இராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களின் அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை இராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். தந்தையை எதிர்த்ததால் லவ-குசருக்கு பித்ருதோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர்.
ஸ்ரீராமர் அனுப்பிய அஸ்வமேத யாகத்துக்கான குதிரையை, குசனும் லவனும் பிடித்து இரும்புவேலிக்குள் அடைத்து விட்டார்களாம். (கோ = வேந்தன்) கோ அனுப்பிய குதிரைகளை (அயம் = இரும்பு) அயத்தினால் செய்த பேடில் (பேடு = வேலி) அடைத்த இடம் என்பதால் கோ+அயம்+பேடு= கோயம்பேடு. என்ற ஒரு குறிப்பு உண்டு. இத்தலத்திற்கு ராகவபுரம் என்ற பெயரும்; கோயட்டி என்ற குருட்டு நாரைக்கு இத்தலத்தில் சிவலோக பிராப்தி கிடைத்ததால் கோயட்டிபுரம் என்ற பெயரும் அமைந்து, காலப்போக்கில் கோயம்பேடு என்று அழைக்கப்படலாயிற்று என்று தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. என்று இப்படி ஒரு செய்தியும் உள்ளது. 


வால்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த இடமே தற்போது சென்னை மாநகரிலுள்ள கோயம்பேடு என்று அழைக்கப்படும் இடமாகும். தன் சிறிய தந்தையரை அழித்த பாவம் தீர லவ-குசர், வால்மீகியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட வைகுண்டவாசப் பெருமாளின் அருளாணைப்படி ஈஸ்வரப் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்கள். இப்படி கோயம்பேடு பகுதியே இராமாயண காவியத் தொடர்புடையதாகவும், வால்மீகி ஆசிரமமாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்குவதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக்கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலுக்கும் பொதுவாக ஒரே திருக்குளம் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதும் தனித்தன்மையானது. பொதுவாக வைகுண்ட வாசப் பெருமாள் பல தலங்களில் அமர்ந்த நிலையிலேயே காட்சியளிப்பார். உற்சவமூர்த்தி சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். இதிலும் ஒரு விசேஷ அம்சம், வலக்கை அபய ஹஸ்தமாகவும் இடத் திருக்கரம் ஆஹ்வான ஹஸ்தமாகவும் (அழைத்து அருளும் பாவம்) அமைந்துள்ளது. தனிக்கோவிலில் கனகவல்லித் தாயார் கம்பீரமாகவும் கருணை மிகுந்தவளாகவும் அருட்காட்சி தருகிறாள்.

ஆண்டாள் தனிச் சந்நிதியில் அழகு மிளிரக் காட்சியளிக்கிறாள். தல புராணப்படி சீதையும் இராமனும் ஒன்று சேர்ந்த இடமாக இது இருப்பதால், இத்திருக்கோவிலில் தனிச்சந்நிதியில் சீதா-இராமன் காட்சியளிக்கிறார்கள். அதிலும் ஒரு கலையம்சமும் கருத்தும் விளங்குகிறது. ஸ்ரீராமனும் சீதையும் வனவாச கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். மரவுரி தரித்த மன்னனாக இராமனும் சாதாரண நிலையில் தலையில் கோடாலி முடிச்சுடன் சீதையும் காட்சியளிக்கிறார்கள். இத்திருக்கோவிலில் வால்மீகி முனிவருடன் லவ-குசர்கள் காட்சியளிக்கிறார்கள். அதே போன்று சிவன் கோவிலான குறுங்காலீஸ்வரர் ஆலயத்திலும் அசுவமேத யாக குதிரையைப் பிடித்தபடி லவ- குசர்கள் இருப்பது போன்ற பல சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து! பெருமாள் கோவிலுக்கு எதிரே சிறிய திருவடியும் ராமபக்தனுமான அனுமனின் சந்நிதி அமைந்துள்ளது. அனுமனின் சந்நிதியைச் சுற்றியுள்ள சுவர்களில் ஆஞ்சனேயர்களின் பல விசேஷக் காட்சி. இப்படி நாராயணனும் நமசிவாயனும் அருகருகே கோவில் கொண்டு அருளும் இத்தலத்திற்கு அன்பர்கள் விஜயம் செய்து, சீதா ராமனின் திருவருளுக்கும், “சரணமானால் தன் தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரானானவைகுண்ட வாசப் பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாக வேண்டும். அன்பர்கள் இத்தலத்துக்கு வருகை தந்து ஸ்ரீராமபிரானின் திருவருளுக்கு இலக்காகலாம்.

10 Mar 2017

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...