Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கர்ப்பிணி வடிவில் கன்னி மேரி - செயின்ட் தாமஸ் மவுண்ட் என்கிற பரங்கிமலை - St Thomas mound parakeimalai chennai
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
                                                                      பரங்கிமலை முகடு சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் ஒவ்வொர...

                                                                      பரங்கிமலை முகடு
சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளும். தூரத்தில் தெரியும் செயின்ட் தாமஸ் மவுண்ட் என்கிற பரங்கிமலை ஏதோ ஒரு விதத்தில் என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.
  

                                                          அடிவாரத்தில் செயின்ட் தாமஸ் சிலை
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வரைபடத்தை தயாரிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அந்த வேலைக்கு "தி கிரேட் இண்டியன் ஆர்க்' என்று பெயரும் இட்டது. கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் இந்த மகத்தான பணிக்காக நியமிக்கப்பட்டார். அவர் இந்திய நில அளவைப் பணியைத் தொடங்கிய இடம் தாமஸ் மவுண்ட். 1802-ல் ஆரம்பித்து 40 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு அலைந்து வரைபடத்தை உருவாக்கிய லாம்டன் தனது 70-வது வயதில் மஹாராஷ்டிரத்தில் இறந்து விட்டார்.
அவருக்குப் பின் அந்தப் பணி தாமஸ் எவரெஸ்ட் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த எவரெஸ்ட் தான் சர்வே பணியில் உலகிலேயே உயரமான மலை சிகரத்தைக் கண்டறிந்தார். அதுவரை ஆண்டீஸ் சிகரம்தான் உலகிலேயே உயரமான சிகரம் என்று நம்பி வந்தார்கள். அந்த நம்பிக்கையை உடைத்து உலகின் உயரமான சிகரம் இந்தியாவின் இமயமலையில் இருக்கிறது என்ற உண்மையை ஆதாரத்தோடு தாமஸ் எவரெஸ்ட் முன் வைத்தார்.
   

                                                                       கர்னல் வில்லியம் லாம்டன்
எவரெஸ்ட் தலைமையிலான சர்வே குழு இந்த சிகரத்தைக் கண்டுபிடித்ததால் அந்த சிகரத்திற்கு மவுண்ட் எவரெஸ்ட் என்று அவர் பெயரே வைக்கப்பட்டது. இந்த சர்வே மூலம் இந்தியா எவ்வளவு பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு. ஒவ்வொரு இடமும் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வெள்ளையர்கள் இந்திய மன்னர்களோடு போரிட்டு வெற்றி பெற இந்தியாவின் நில அமைப்பு குறித்த துல்லியமான வரைபடமே காரணமாக இருந்தது.

நிலத்தை  சர்வே எடுத்து மேப் வரைவது அன்றைக்கு சுலபமான விஷயமில்லை . எல்லாவற்றையும் காகிதங்களிலே குறித்தாக வேண்டும். "தியோடலைட்' என்ற ஒரேயயாரு கருவி தான் சர்வே பணிக்காக உருவாக்கப்பட்டிருந்தது. 500 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த கருவியை காடு மேடு மலைகள் என்று கழுதைகளும் இந்திய அடிமைகளும் தூக்கிச் சென்றனர். இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் கருவியை முதன் முதலாக தாமஸ் மவுண்ட் உச்சிக்கு கொண்டு போய் சென்னை நகரை வரைபடமாக்கினார் லாம்டன். அதன் நினைவாக கருவி வைக்கப்பட்ட இடத்தில் கர்னல் வில்லியம் லாம்டனுக்கு மார்பளவு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
   

சிறுவயதிலேயே படித்திருந்த இந்த வரலாற்று நினைவுகள்தான் என்னை பரங்கிமலை பக்கம் இழுத்ததற்கு காரணம். பரங்கிமலையில் ரயில் நின்றது. அங்கிருந்து வழி கேட்டேன். 3 கி.மீ. தொலைவு என்றார்கள். சீதோஷ்ணம் இதமாக இருந்ததால் நடந்தேன். மெட்ரோ ரயிலுக்கான பணிகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தன. அதைக் கடந்து சென்றேன்.

பரங்கிமலையை நெருங்க நெருங்க ஏதோ ராணுவ முகாமுக்குள் வந்தது போல் உணர்வு ஏற்பட்டது. ராணுவ அலுவலர்கள், பணியிடங்கள் சாலையின் இடது பக்கமும், ராணுவ குடியிருப்புகள் சாலையின் வலது பக்கமும் இருந்தன. ராணுவத்திற்கே உரித்தான நிசப்தமான அமைதி எங்கும் நிலவியது. தூரத்தில் யாரோ ஒரு கமாண்டர் தனது குழுவுக்கு 'சவுதான்', 'வீஷ்ரம்', 'பாயேமூட்', ' ஹினே மூட்' என்று டிரில் எடுத்துக் கொண்டிருந்தார்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி எடுக்கும் 'ஆபீஸர் ட்ரெய்னிங் அகாடமி'யை கடந்து தாமஸ் மலையின் அடிவாரத்தில் வந்து நின்றேன்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதமாக இருந்த வெயில் இப்போது அதன் உச்சப்பட்ச உக்கிரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. என் உடையெல்லாம் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது. இன்னும் மலைமீது ஏற வேண்டும்.
   

                                                                                       பாதையோர சிற்பங்கள்
சிறிய மலைதான்! ஆனால் வெயிலின் வீச்சு மலைப்பைத் தந்தது. ஆனாலும் பாதை சுலபமாகத் தான் இருந்தது. மரங்களின் நிழல்கள் இதம் தந்தன. மலைப்பாதையின் வழியில் படிகளில் ஏறினேன். மொத்தம் 134 படிகள். இயேசு நாதர் சிலுவையில் அறைய கொண்டு சென்ற காட்சிகள் சிலைகளாக செதுக்கப்பட்டிருந்தன. அதனாலே இந்த மலைப்பாதை புனிதப் பாதை என்ற பெயர் பெற்றுள்ளது.
இந்த மலைக்கு நிறைய காதல் ஜோடிகள் வந்திருப்பார்கள் போல் தெரிகிறது. ஏனென்றால் வழி நெடுகிலும் 'இது புனிதப்பாதை. காதலர்கள் சங்கமிக்கும் இடமல்ல' என்ற பலகைகள் அதிகம் இருக்கின்றன. நான் சென்ற நேரத்தில் ஒரு காதல் ஜோடி கூட கண்ணில் படவில்லை என்பது புனிதத்திற்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தது.

300 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சிக்கு வந்த போது 'அவர் லேடி ஆஃப் எக்ஸ்பெக்டேஷ-ன்' தேவாலயம் நம்மை வரவேற்றது. கன்னிமேரி கர்ப்பிணி தோற்றத்தில் வீற்றிருப்பது இங்கு மட்டுமே பார்க்கக்கூடிய அபூர்வ காட்சி. பாலகன் இயேசுவின் வரவுக்காக கருவை சுமந்தபடி  காத்திருக்கும் மேரிமாதாவின் தேவாலயம் இது.  
  

                                       அவர் லேடி ஆஃப் எக்ஸ்பெக்டேஷ¬ன்' தேவாலயம்
இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனிதர் தாமஸ் உயிர் நீத்த இடம் இது. அதனால் தான் இந்த மலைக்கு புனித தாமஸ் மலை என்று பெயர் வந்தது. கிறிஸ்துவ மதத்தை இந்தியாவுக்கு முதன்முதலில் கொண்டு வந்தவர் இவர்தான். கேரளா வழியாக தமிழகம் வந்த இவர் கேரளாவில் 6 தேவாலயங்களையும் தமிழ்நாட்டின் திருவிதாங்கோட்டில் ஒரு தேவாலயமும் என்று மொத்தம் 7 தேவாலயங்களை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி அருகில் உள்ள சின்ன முட்டம் பகுதியிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார்.
  

                                                 புனிதர் தாமஸ் செதுக்கிய சிலுவை
புனிதர் தாமஸ் இந்த மலையில் உள்ள ஒரு பாறையில் தனது கைப்படவே ஒரு சிலுவையை செதுக்கி அதனை வணங்கி வந்தார். ஒருநாள் சிலுவையை வணங்கி கொண்டிருக்கும்போது ஒருவர் ஈட்டியால் குத்தி தாமஸை கொன்று விட்டார்.

தாமஸின்  ரத்தம் சிந்திய சிலுவை தேவாலயத்தில் இருக்கும் ஆல்டரில் உள்ளது. இப்போதும்கூட  அந்த சிலுவையில் ரத்தமும் வியர்வையும் தோன்றி மறைவதாக சொல்லப்படுகிறது. ரத்தம் சிந்திய மலை என்பதால் இது புனிதத்துவம் பெறுகிறது. தாமஸ் கொல்லப்படும் சித்திரத்தை தேவாலயத்திற்குள் பார்க்கலாம். தாமஸ் மட்டுமல்ல, இயேசுவின் 12 சீடர்களின் படங்களும் அவர்கள் கொலை செய்யப்பட்ட விதங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இந்த தேவாலயம் 1523-ல் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. அவர்கள் இயேசுவை விட அவரது தாய் கன்னி மேரியையே தெய்வமாக வணங்குவார்கள். கருவுற்றிருக்கும் மேரி மாதா தனது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கும் விதத்தில் 'அவர் லேடி ஆஃப் எக்ஸ்பெக்டேஷ¬ன் தேவாலயம்' கட்டப்பட்டது.

இந்த தேவாலயம் 16-17 ம் நூற்றாண்டுகளில் கடலில் பயணம் செய்து வரும் போர்த்துக்கீசியர்கள், ஆர்மீனியர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக வும் இருந்திருக்கிறது.
   

                                                          கர்ப்பிணி வடிவில் கன்னி மேரி
புனித தாமஸ் இறந்ததாக கருதப்படும் இடத்தில் 'ஆல்டர்' வைக்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மேரி மாதா ஓவியத்தை இங்கு பார்க்க முடியும். குழந்தை இயேசுவை கையில் ஏந்தியபடி இருக்கும் மேரி மாதா உருவம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் நேரில் பார்த்து செயின்ட் லூக் என்பவர் வரைந்தது. கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்தை செயின்ட் தாமஸ் கடைசி வரை தன்னுடனே வைத்து வழிபட்டு வந்தார். அந்த ஓவியம் ஆல்டர் அருகே வைக்கப்பட்டுள்ளது.
   

                                    மேரி மாதா உயிரோடு இறந்தபோது வரைந்த ஓவியம்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட செயின்ட் தாமஸ் மவுன்ட் கிறிஸ்துவ மதத்தினருக்கு மட்டுமல்ல, சுற்றுலாவாசிகளும் பொருத்தமான இடம். மலையின் மீதிருந்து பார்த்தால் ஒரு பகுதியில் சென்னை நகரத்தைப் பார்க்கலாம்.

மறுபக்கத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் வந்து இறங்கும் ரன்வேவையும் விமானத்தில் பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கலாம். ஒருநாள் பிக்னிக்கிற்கு ஏற்ற இடம்.
தேவாலயத்தின் சார்பாக மதியம் இங்கு வரும் யாத்ரிகர்களுக்கு 'அன்புணவு' என்கிற பெயரில் அன்னதானம் நடைபெறுகிறது.

தேவாலயத்திற்குள் புனித தோமையர் உபயோகித்த 115 பொருட்கள், உடல் உறுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் புனிதத்தின் சின்னங்களே. செயின்ட் தாமஸ் மவுண்ட் ஒரு ஆவணப் பெட்டகம்!

இங்கு சென்று திரும்பினால் மன திருப்தி ஏற்படுவதை தவிர்க்க முடியாது!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top