பாரிவேளை சூழ்ச்சியின் மூலம் கொல்ல முடிவெடுத்த மூவேந்தர்கள் ஒரு பெளர்ணமி நாளில் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.
தந்தையின் மரணத்தில் அங்கவையும் சங்கவையும் வேதனையால் துடித்தனர். செய்தியறிந்து விரைந்து வந்த கபிலர் கதறினார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ ? தன்னைத் தேற்றிக்கொண்ட கபிலர், பாரிமகளிரை ஆறுதல்படுத்தினர். அத்துடன் நில்லாமல் பருவம் எய்திய அந்நங்கைகளுக்கு மணம் முடித்துவைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
பாரி கொலையுண்ட முன்னாள் போலவே நிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. பாரிமகளிருக்கு தந்தையின் நினைவு மேலோங்கியது. அப்போது அவர்கள் பாடிய பாடல்
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறம் – 112)
விளக்கம்: மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்.
பாரிவேளைப் பற்றியும் கபிலரைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த ஒளவைப் பிராட்டியாருக்கு அச்சமயம் பாரிமகளிர் ஒரு அந்தணர் பொறுப்பிலிருப்பது தெரியவந்து அங்கு சென்றார். ஒளவையைக் கண்டதும் அங்கவையும் சங்கவையும் ஆற்றாமையால் அழுது புலம்பினர். தங்களால் கபிலர் பட்ட இன்னல்களையும் தற்போது தாங்கள் அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் இருப்பதையும் கூறித்தேம்பினர். அதைக்கேட்ட ஒளவை “கண்மணிகளே ! கலங்காதீர்கள். எல்லாம் வல்லான் வகுத்தபடிதான் நடைபெறும். கவலைப்பட வேண்டாம். பாரியையும் கபிலரையும் எம்மால் மீண்டும் கொண்டுவர இயலாது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற உங்களை நான் நல்லறமாம் இல்லறத்தில் நிலை நிறுத்துவேன்” என்று அன்பொழுக ஆறுதல் கூறினார்.
அந்நாளில் திருக்கோவலூரைத் தலைநகராய்க் கொண்ட மலாடு என்கிற மலையமான் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த தெய்வீகன் என்பவன் மணமாகாதவன், நல்ல பண்பாளன் என்றறிந்த ஒளவையார் அங்கு சென்றார். குறுநில மன்னனான அவனை வாழ்த்தி தன் எண்ணத்தைக் கூற அவ்வரசனும் பழுதிலாப்புகழ் பாரியின் இரு பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.
பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலிருந்தது ஒளவையாருக்கு ! அவரே முன்னின்று சேர, சோழ, பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பினார். அவர்கள் முன்னிலையில் செல்விகள் அங்கவை சங்கவைக்கும் மலாடு நாட்டரசனான மலையமான் தெய்வீகனுக்கும் சீருற சிறப்புற திருமணம் நடைபெற்றது. பாரியின் பெற்ற கடமை, கபிலரின் நட்புகொண்ட பொறுப்பு இரண்டும் ஒளவையாரால் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள கபிலர் குன்று (கபிலக்கல் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது ) என்ற இடத்தில் கபிலர் உயிர் துறந்தார் என்று ஆராய்ச்சிகளால் உறுதி செய்துள்ளார் ஆநிரைக் காவலன் என்ற அறிஞர் அவரின் முயற்சிக்குப் பின் தமிழக அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடமாக பராமரிக்கப்படுகிறது.
தனித்த பாறையும், அதன் மேல் சிறு கோவில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடமும் கொண்டது கபிலர் குன்று. குறுகிய படிக்கட்டுகள் வழியாக இக்குன்றை அடையலாம்.கோயிலின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. இக் கட்டிடம் 16 ம் நூற்றாண்டு கட்டிட பாணியைச் சேர்ந்தது என தொல்லியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேல்புறம் நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சுவாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேற்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன.
-நன்றி ஐந்தாம் தமிழ் சங்கம்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.