பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி.11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டிணத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.
பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு புத்தருக்கு இணையாக தமிழகத்தில் கருதப்படுகின்றது. அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கவுரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை.
அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்` என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங் களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள்.
அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட மனம் கசிந்து அழுது விடுவார்கள்.
அந்தப் பாடல்கள் பின் வருமாறு..
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தே என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.