Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பன்னிரு ஆழ்வார்கள் - Alvarkal
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர்.  கி.பி. 6- ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்த...

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்

பன்னிரு ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகர ஆழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

பேயாழ்வார்
பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.

திருமழிசையாழ்வார்
திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தைம் மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.
இவரது பிரபந்தங்கள்
நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக திருமாலை உயர்வாகச்சொல்லியவை. இவருக்கு முன்தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார்.

திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் சூத்திர குலத்தில் அவதரித்தார்.

நூல்கள்
நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

திருமந்திரம்
ஒம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஒம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஒம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்கு தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதை பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள்

கண்ணி நுண் சிறுத்தாம்பு
நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே.

குலசேகர ஆழ்வார்
இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி அம்சம் பொருந்தியவர். இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர். நாடு:கொங்கு நாடு, ஊர்; கரூர் வஞ்சி, மலை: கொல்லிமலை

பெருமாள்திருமொழி
திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.

பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்

பெரியாழ்வார்
பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.

திருப்பல்லாண்டு பிறந்த கதை
வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைப்பெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு.

பெரியாழ்வார் பெயர்க்காரணம்
இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அரங்கன் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனது.

இலக்கியப் பணி
இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.
கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன.

ஆண்டாள்
ஆண்டாள் தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்
ஒரு குழந்தையாக ஆண்டாள் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும் குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. 

ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

ஆண்டாள் பாடல்கள்
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும் தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம்புகழ் பெற்றது

ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வடமொழி மறைகளுக்கு நிகராக தவறாமல் ஓதப்படுகின்றது.

தொண்டரடிப்பொடியாழ்வார்
தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் பத்தாமவராக வரும் இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.
இயற்றிய நூல்கள் : திருப்பள்ளியெழுச்சி, திருமாலை

வாழ்க்கைக்குறிப்பு
திருவரங்கத்து இறையாகிய அரங்கனுக்காக பூமாலை கைங்கர்யம் செய்வதற்குண்டான நந்தவனம் அமைத்து அன்றலர்ந்த மலர்களை பறித்து அழகான பூச்சரங்களாக தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பித்து வரும் வேளையில் தேவதேவி என்ற சோழநாட்டு கணிகையின் பால் விருப்பம் கொண்டு தன்னையே மறந்தார். கணிகையால் தன் செல்வம் யாவும் இழந்த இவருக்காக அரங்கன் தன் கோயில் வட்டிலைக் கொடுத்துதவ, அதை களவாடிய பழி இவர் மீது வீழ்ந்து அரசன் முன் இவரை இட்டுச்சென்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டதோடு, இவரையும் ஆட்கொண்டது. மீண்டு வந்த இவர் தன் இறுதிவரை அரங்கனுக்கே அடிமைப்பூண்டார்.

தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.

"திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது. இதன் பொருள் யாதெனில் ஆழ்வார் இயற்றிய திருமாலை எனும் நூலை அறிந்திடாதவர் பரமனாகிய திருமாலையே அறிந்திடாதவர்கள் ஆவார் என்பதாம். அல்லது பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் திருமாலை எனும் நூலை படித்தால் போதுமென்பதாம்.

திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.

வாழ்க்கைக் குறிப்பு
இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக்கிரமத்தில் தீண்டாக்குலமானது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார். 

காவிரியிலிருந்து தண்ணீர் குடத்தோடு அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் எனும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரை பலமுறை அழைத்தும் செவிமடுக்காததால் பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். அக்கல் அவரின் தலையில்பட்டு குருதிபெருக, அதைக்கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் பக்தியையும் உயர்வையும் உணர்த்த விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சிக்கொடுத்ததோடு, சாரங்கரரை, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தன் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு பாணருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

அமலனாதிபிரான்
திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.

திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர் முத்தரையர் இனத்தை சார்ந்தவர் . ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்..இவரின் வம்சாவளியினர் இன்று திருச்சியில் வாழ்ந்து வருகின்ற முத்துராஜா மக்களே. இன்னும் இம்மக்களுக்கே இங்கு முதல் மரியாதை இக்கோவிலில் செய்யப்படுகிறது

(வைணவ)க் காதல்
குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.
இலக்கிய பணி : இவர் 1351 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன

திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)
சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)
பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)
திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
பெரிய திருமொழி (1084 பாடல்கள்)


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top