இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது.
இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.அமைவிடம் சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அருகில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது. தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையின் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் சன்னதி அமைந்துள்ளது.
ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதான் கோவிலைச் சென்றடைய முடியும். மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி என்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நான்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ என்றால் நான்கு, ‘கிரி’ என்றால் மலை. சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. இவற்றையெல்லாம் தாண்டித்தான் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றின் போக்கிடமாக உள்ளது.
பொய்கைகள் (சிறு சிறு நீர்சுனைகள்) நிறைந்துள்ள சதுரகிரியில் முன்பின் அறியாத சுனைகளில் நீர் அருந்துவது தவறு,
அப்படி குடித்தால் அவர்கள், அங்குள்ள சிறு சிறு கூழாங்கற்களாகி விடுவார்கள் என்ற செவி வழி செய்தியும் உண்டு.
சிறு சிறு தவளைகள் பலவித வண்ணங்களில் காணக் கிடைக்கும், அவைகளை ஏதோ ஒரு சித்தர் பெருமானின் விளையாட்டு என்பார்கள்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.