Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் ஊட்டச்சத்து மாவு !!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உங்கள் செல்லக் குழந்தை நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டுமா.. ? எக்ஸ்ட்ரா பிரெய்ன்... எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்க வேண்டுமா.. ? நெடுநெடு...
உங்கள் செல்லக் குழந்தை நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டுமா..? எக்ஸ்ட்ரா பிரெய்ன்... எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்க வேண்டுமா..? நெடுநெடுவென உயரமாக வளர வேண்டுமா..? பருகுவீர்...! என டி.வி.யில் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன ஆரோக்கிய பான விளம்பரங்கள்!

இவற்றால் ஈர்க்கப்பட்ட நுகர்வோரின் மாதாந்திர பட்ஜெட்டில் தவறாமல் இடம் பிடித்து விட்டவைதான் இந்த ஊட்டச்சத்து பவுடர்கள். நாளடைவில் இந்த பானத்தை குடித்தால்தான், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என நுகர்வோரை மூளைச் சலவை செய்து விட்டதன் விளைவுதான் இது..! வசதி வாய்ப்புள்ளவர்கள் அதிக பணம் செலவழித்து இந்த ஊட்டச் சத்து பவுடரை வாங்கிவிடுகின்றனர். ஆனால், மற்றவர்கள்..?

இந்நிலையைத் தவிர்க்க, அதைவிட சத்துமிக்க ஊட்டச்சத்து பவுடரை குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரிக்கலாம். ""சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஊட்டச்சத்து பவுடர்கள் கால் கிலோ விலை ரூ. 100-க்கு மேல்! கிலோவுக்கு ரூ. 400-க்கு மேல் ஆகிறது. குழந்தைகள் வளர ஊட்டச்சத்து அவசியம்தான். அந்தக் காலத்தில் இயற்கையான உணவை உண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக வளர்ந்தன.

தற்போது நம்முடைய உணவுப் பழக்க, வழக்கமே மாறிப் போய் விட்டது. இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க இதுபோன்ற உணவு அவசியமாகிறது. 
இல்லத்தரசிகள் நேரத்தை கொஞ்சம் செலவிட்டு, முயற்சி செய்தால் கிலோ ரூ. 500 கொடுத்து வாங்கும் ஊட்டச் சத்து பவுடரை, வீட்டிலேயே ரூ. 50 முதல் ரூ. 70 செலவில் தயாரித்து விடலாம்!

இதைத் தயாரிப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல, கொஞ்சம் முயற்சி; கொஞ்சம் பயிற்சி தேவை. வீட்டிலேயே தயாராகும் அருமையான பானம், குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் சத்தான பானமாக இருக்கும்.

பொதுவாக தனியார் நிறுவனத் தயாரிப்புகளில் பார்லி, சிறிதளவு கோதுமை மாவு, பால் பவுடர், சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் கலக்கப்பட்டிருக்கும். ஆரோக்கிய பானத்தில் 22 முதல் 24 வகையான சத்துகள் உள்ளதாக விளம்பரப்படுத்துகின்றனர்.

நாம் தயாரிக்கும் ஊட்டச்சத்து பானத்திலும் அதே 24 வகையான சத்துகள் உள்ளன.  
எந்த ஒரு தானிய வகை உணவும், பருப்பு வகை உணவும் 4:1 என்ற விகிதத்தில் கலந்து சாப்பிட்டாலே இந்த 24 வகையான சத்துகளும் உடலுக்குக் கிடைத்துவிடும்.

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி1, பி2, நையாசின், பி6, போலிக் ஆசிட், கோலின், வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின், மாலிப்டினம் ஆகியவையே மேற்குறிப்பிட்ட சத்துகளாகும்.

நாம் தயாரிக்கும் இயற்கையான ஊட்டச்சத்து பவுடரில் முளைவிட்ட கம்பு, சம்பா கோதுமை, சோளம், முளைவிட்ட கேழ்வரகு, பொட்டுக்கடலை, சிறிதளவு கடலை சம அளவில் எடுத்துக் கொண்டு, தீய்ந்து போகாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் சுவைக்காக பாதாம் பருப்பு, பார்லி, ஏலக்காய், ஜவ்வரிசி, முந்திரிப்பருப்பை கொஞ்சம் கொஞ்சம் எடுத்து நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்தக் கலவையை மொத்தமாகக் கலந்து பவுடராக அரைத்து பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால் "சத்துமாவு' தயார்.

காலையிலும், மாலையிலும் சூடான பாலிலோ, தண்ணீரிலோ நாம் தயாரித்து வைத்துள்ள சத்து மாவை தேவைக்கேற்ப கலந்து மிதமான தீயில் தீய்ந்து விடாமல் சூடாக்கி சர்க்கரை சேர்த்து பருகக் கொடுக்கலாம்.

இதன் சுவையாலும், மணத்தாலும் நாளடைவில் ஈர்க்கப்படும் குழந்தைகள் விரும்பிக் குடிக்க ஆரம்பிப்பார்கள். கடைகளில் வாங்கும் ஊட்டச்சத்து பவுடர்கள் காலாவதியானதோ..? கலப்படமோ..? என்று அச்சப்படத் தேவையில்லை.

- என்ன இல்லத்தரசிகளே..! நீங்களும் ரெடியாகி விட்டீர்களா.. ஊட்டச்சத்து மாவு தயாரிக்க..!

ஊட்டச்சத்து மாவு செய்யும் முறை
வீட்டிலேயே ஊட்டச் சத்து மாவு தயாரிக்கலாம் என்று கூறியிருந்தோம். அதனை செய்யும் முறை குறித்துக் கூற வேண்டாமா? இங்கே அதற்கான வழிமுறைகள்...

ஊட்டச்சத்து மாவு செய்முறை :
தேவையான பொருள்கள்:
 கேழ்வரகு 150 கிராம், கம்பு 150 கிராம், சோளம் 100 கிராம், சம்பாக்கோதுமை 100 கிராம், மக்காச்சோளம் 100 கிராம், புழுங்கல் அரிசி 75 கிராம், ஜவ்வரிசி 25 கிராம், பார்லி 50 கிராம், பாசிப்பயறு 100 கிராம், பொட்டுக்கடலை 100 கிராம், சோயாபீன்ஸ் 20 கிராம், நிலக்கடலை 20 கிராம், முந்திரிப் பருப்பு 5 கிராம், பாதாம் பருப்பு 5 கிராம், ஏலக்காய் 2 கிராம்.

செய்முறை:
 கேழ்வரகு, கம்பு, சோளம், பாசிப் பயறு ஆகியவற்றைச் சுத்தம் செய்து நீரில் ஒருநாள் ஊற வைக்கவும். பின்னர் துணியில் முடித்து முளைக்கட்ட வைக்க வேண்டும். (ஓரிருநாளில் முளைகட்டி விடும்) சம்பா கோதுமை, மக்காச் சோளத்தை 2 நாள் ஊறவைத்து, பின்னர் வெயிலில் ஓரிருநாள் காயவைக்க வேண்டும்.

அதன்பின் எல்லாப் பொருள்களையும் தனித்தனியாக மிதமான சூட்டில் தீய்ந்துவிடாமல் வறுக்க வேண்டும். அதன்பின் மொத்தமாக மாவாக அரைத்துக் கொள்ளலாம்.

பானம் தயாரிக்கும் முறை:
 பவுடர் 20 கிராம், 150 மி.லி. பால் அல்லது தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை கலந்து அடுப்பில் வைத்து கூழ் பதத்துக்கு காய்ச்சி, மிதமான சூட்டில் பருகலாம். இதில் பால்பவுடர் கொஞ்சம் கலந்துகொண்டால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

குறிப்பு: முதியோருக்கு இந்த பானத்தைக் கொடுப்பதாக இருந்தால் கேழ்வரகு, சோயாபீன்ஸைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக வரகைச் சேர்த்துக் கொள்ளலாம்



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top