Home
»
HISTORY HEROES
»
வரலாற்று நட்சத்திரங்கள்
» பார்வையற்றோர் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய லூயிஸ் பிரெய்லி / louis braille
1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி
லூயில் பிரெய்லி பிரான்ஸில் பிறந்தார். இவர், தனது 3 வயதில் ஊசியை வைத்து விளையாடும்போது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதற்கு
போதிய சிகிச்சை எடுக்காததால் அந்தக் கண் பார்வையிழந்தது. மேலும், பரிவுக்கண் நோய் காரணமாக மற்றொரு கண்ணிலும் பார்வையிழப்பு ஏற்பட்டது.
லூயிஸின் பெற்றோர் தவித்தனர். தங்கள்
செல்ல மகனின் வாழ்வு இருண்டு விட்டதே என்று துடித்தனர். ஆனாலும் கடவுளின் மேல்
பாரத்தைப் போட்டுவிட்டு, அமைதியாய் இருக்க
மறுத்தனர்.
ஏதேனும் செய்தாக வேண்டும், தங்கள் மகனின் எதிர்கால வாழ்விற்கு, கண் பார்வை ஒரு தடுப்புச் சுவராய் மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று எண்ணினர்.
அப்பொழுதுதான் அவர்களுக்கு, பாரீஸ் நகர, கண் பார்வை
அற்றவகளுக்கானப் பள்ளி பற்றித் தெரிய வந்தது. அக்காலத்தில் கண் பார்வை
அற்றவர்களுக்காக, உலகில் இருந்த ஒரே பள்ளி அதுமட்டும்தான். Royal
Institute for Blind Youth.
ஆண்டு 1815.
பாரீஸ் நகரில் அமைந்த பள்ளி அது. சிறுவன் லூயிஸை அந்தப்
பள்ளியில்தான் சேர்க்க வேண்டும், அந்தப் பள்ளியால்
மட்டும்தான், தன் மகனின் எதிர்கால வாழ்வை, ஒளிமயமானதாக உருவாக்க முடியும் என்று, லூயிஸின்
தந்தை திடமாக நம்பினார். செலவைப் பற்றிக் கவலையில்லை. என்
மகனுக்காக, என் மகனின் எதிர்கால நலனுக்காக,
இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கத் தயார். உள்ளூர் பாதிரியார்
ஒருவர் உதவிட, லூயிஸுக்கு அப்பள்ளியில் இடம் கிடைத்தது. அது
ஒரு தனித்துவமான பள்ளி. உலகிலேயே, அக்காலத்தில் இருந்த,
அதுமாதிரியான பள்ளி, அது ஒன்று மட்டும்தான்.
லூயிஸ் அந்தப் பள்ளியில் காலடி எடுத்த
வைத்த, அந்த நொடி முதல், அந்த பள்ளியே
அவன் உலகமாக மாறிப்போனது. பாடங்களைப் படித்தான், இசை கற்றுக்
கொண்டான். கணக்குப் போட்டுப் பழகினான். உலகில் கற்றுக் கொள்வதற்கு இவ்வளவு
செய்திகள், தகவல்கள் உள்ளனவா? என்று
நாள்தோறும் வியந்து போனான்
ஒவ்வொரு நாளும், புதுப்புதுச் செய்திகள், தகவல்கள்,
நாட்டு நடப்புகள், அறிவியல் முன்னேற்றங்கள் என
அனைத்தும், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் மூளையில் பதிவாகி,
அவனை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைத்தது, லூயிஸ்
கற்றுக் கொண்டே இருந்தான், அவனுக்காக அவனது தந்தை, ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருந்தார்.
அப்பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள்
அனைத்தையும், ஒரே மூச்சில் படித்து, கரைத்துக் குடித்துவிட வேண்டும் என்பதே, அவனது
தணியாத தாகமாய் இருந்தது. ஆனால் பிரச்சினையே அவனுக்குப் புத்தக
வடிவில்தான் காத்திருந்தது. ஒரு பக்கத்திற்கு ஒரு வார்த்தை அல்லது இரு
வார்த்தைகள்தான் இருக்கும். பத்து இருபது பக்கங்கள் சேர்ந்தாலே, புத்தகம், ஒரு பெரிய பெட்டி
அளவிற்குத் தடிமனாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியவில்லை? எப்படி எல்லா நூல்களையும் படித்து முடிப்பது என்று அச்சிறுவனுக்குப்
புரியவில்லை.
லூயிஸ் அப்பள்ளியில் சேர்ந்து, பல ஆண்டுகள் கடந்த நிலையில், அப்பள்ளிக்கு
ஒரு சிறப்பு விருந்தினர் வருகை தந்தார். அவர் ஒரு இராணுவ வீர்ர். பல போர்க்களங்களில்
முன்னனியில் நின்று போராடிய தீரர். அந்த இராணுவ வீரர், மாணவர்களிடைய உற்சாகமூட்டும் வகையில் பேசினார்.
சிறுவன் லூயிஸ் மெதுவாக அந்த இராணுவ வீரர் அருகில் சென்றான்.
இந்தியஅரசாங்கம் வெளியிட்ட தபால் தலை ==>>
உங்கள் பெயர் என்ன?
சார்லி, பதில் கூறிய இராணுவ வீர்ர், குனிந்து, லூயிஸின் தலைமுடியைக்
கோதியவாரே கேட்டார். தம்பி, உன் பெயர் என்ன?
லூயிஸ், சிறுவன் லூயிஸ் அடுத்துக் கேட்டக்
கேள்வியில், அவ்வீரர் கலங்கித்தான்
போய்விட்டார். உங்களைத்தொட்டுப் பார்க்கலாமா?
அடுத்த நொடி, சிறுவனின் கரங்களைப் பற்றித் தன் கண்ணத்தில் வைத்துக்
கொண்டார்.
லூயிஸ், சிறிது நேரம் சார்லியின் கண்ணத்தை வருடியபடியே மெய்மறந்து நின்றான். பிறகு
கேட்டான்.
நீங்கள் நிஜமாகவே சண்டைக்கெல்லாம்
போயிருக்கீங்களா?
என்னுடைய வேலையே அதுதானப்பா என்றவர்
கேட்டார் உனக்கு சண்டை என்றால் ரொம்ப்ப்
பிடிக்குமா?
ஓ, பிடிக்குமே. நீங்க சண்டை போட்ட கதையை எல்லாம், எனக்குச்
சொல்லுங்களேன்,
இராணுவ வீரருக்குக் கண்கள் கலங்கிக்
குளமாகிவிட்டது. என்ன குற்றம் செய்தான் இச்சிறுவன்? ஏன் இவனுடைய பார்வை பறிபோய்விட்டது? ஒருவாறு, தன்னைத் தேற்றிக் கொண்டு, கதை
சொல்லத் தொடங்கினார். மாணவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
லூயிஸ்
குறுக்கிட்டுக் கேள்வி கேட்டான். நீங்க இரவிலும் சண்டை போடுவீர்களா?
<<== இந்தியஅரசாங்கம் வெளியிட்ட நாணயம்
ஆமாம். நாங்கள் இரவிலும் சண்டை
போடுவோம். இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, நாங்கள்
ஒரு புதுமையான இரகசிய எழுத்து முறையே வைத்திருக்கிறோம் தெரியுமா?
லூயிஸ் நிமிர்ந்து உட்கார்ந்தான். தன்
காதுகளைத் தீட்டிக் கொண்டான்.
சார்லி ஒரு காகிதத்தைத் தன் சட்டைப்
பையில் இருந்து எடுத்தார்.
இந்தத் தாளில் மொத்தம் பன்னிரண்டுச்
சின்னச் சின்னப் பொட்டுக்கள், அதாவது புள்ளிகள் இருக்கிறது. இந்தப் பன்னிரெண்டு புள்ளிகளையும், விதவிதமாக மாற்றி மாற்றி அமைத்தால், வெவ்வேறு
எழுத்துக்கள் வரும். துளி கூட வெளிச்சம் இல்லாத, அமாவாசை
இரவில் கூட, நாங்கள் இந்தப் புள்ளிகளைத் தொட்டுப் பார்த்துத்
தகவல்களைச் சுலபமாக படித்து விடுவோம்.
சிறுவன் லூயிஸின் உள்ளத்தில் ஓர்
எரிமலை வெடித்துச் சிதறியது. இதுவரை அறிந்திராத ஓர் வர்ண ஜாலம், வான வேடிக்கை, திடீரென்று மனதில்,
ஓராயிரம் மின்னல்கள், ஒரே நேரத்தில்
தோன்றியதைப் போன்ற ஒரு வெளிச்சம்.
இனி தான் பயணிக்க வேண்டிய பாதை, தனது இலக்கு, அச்சிறுவனின் மனக்
கண்ணில் தெரிந்தது. புறக் கண் போனால் என்ன, லூயிஸின் அகக்
கண் திறந்தது.
சிறுவயது நினைவலைகள், அலை அலையாய் உள்ளத்தில் ஆர்ப்பரித்து எழுந்தன. சிறு
வயதில், தனது தந்தையார், எழுத்துக்களை,
தனக்கு அறிமுகம் செய்து வைத்த விதம் நினைவிற்கு வந்தது.
லூயிஸின் அப்பா, ஒரு மரப்பலகை, நிறைய ஆணிகளை
எடுத்துக் கொள்வார். மரப் பலகையில் ஆணிகளை எழுத்து வடிவில் வரிசையாக அடிப்பார். லூயிஸின் விரல்களைப் பற்றி, ஆணிகளை ஒவ்வொன்றாக வருடச் சொல்வார். லூயிஸ் அந்த
எழுத்துக்களை ஒவ்வொன்றாகத் தடவிப் பார்ப்பான். லூயிஸ் ஒவ்வொரு எழுத்தாகத் தடவத்
தடவ, அந்த எழுத்தின் பெயரினை அவனது தந்தை கூறுவார்.
லூயிஸ், இந்த எழுத்து உனக்குப் புரியுதாப்பா? புரிகிறது அப்பா. நான் உங்கள் கையில்
இந்த எழுத்தை எழுதிக் காட்டவா? மகிழ்ச்சியுடன் தந்தை கை நீட்டுவார்.
ஆணியில் வருடிப் பார்த்த அதே எழுத்தை, அதே வடிவத்தை, அப்படியே, தந்தையின்
கையில் எழுதிக் காட்டுவான். எழுதி முடித்ததும், தந்தை தன் மகனை அப்படியே வாரி அணைத்துக் கொள்வார். இப்படித்தான், லூயிஸ், பிரஞ்சு எழுத்துக்கள்
ஒவ்வொன்றையும், ஆணிகளின் துணையோடு, தனது
தந்தையிடம் கற்றுக் கொண்டான்.
எழுத்துக்களை மட்டுமன்றி, தன்னைச் சுற்றிலும் கேட்கிற ஒலிகளை, வாசனைகளை, மாறுகின்ற பருவ காலங்களை, இயற்கை, செயற்கைப் பொருள்களை எல்லாம் தொட்டுப்
பார்த்து, கேட்டு, முகர்ந்து பார்த்து
உணர்ந்து கொண்டான். மெல்ல மெல்ல பார்வைத் தேவைப்படாமலேயே, உலகத்தைப்
புரிந்து கொண்டான்.
இராணுவ வீரர் சார்லி, பள்ளிக்கு வந்து சென்ற நாள் முதல், லூயிஸ் ஆழ்ந்த சிந்தனையில் அழ்ந்தான். இருபத்து நான்கு மணி நேரமும்
சிந்தனை, சிந்தனை, சிந்தனைதான். வெறும் பன்னிரெண்டு புள்ளிகளைப்
பலவிதமாக மாற்றி, மாற்றி, எல்லா எழுத்துக்களையும் உருவாக்கிட முடியும் என்பது லூயிஸுக்கு பெரிய
அதிசயமாக இருந்தது.
இதுமட்டுமல்ல, இந்தப் புள்ளிகளை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி,
சிற்சில மாற்றங்கள் செய்தால், இராணுவ வீரர்கள்
மட்டுமன்றி, எல்லோரும் இதைப் பயன்படுத்தலாம் என்று
எண்ணினான். தன் போன்ற பார்வை இழந்த,
ஏராளமான மாணவர்களுக்கு, இம்முறை மிகுந்த பலன்
கொடுக்கும் என நம்பினான்.
அன்றிலிருந்து, இதுவே லூயிஸின் முழுநேர அலுவல் ஆகிப் போனது.
புள்ளிகளை பலவிதமாக மாற்றி, மாற்றி அமைத்து, பரிசோதனை செய்து, இரவு பகலாகப் பாடுபட்டு, பார்வை இழந்தவர்கள் எளிமையாகப் பயன்படுத்தக் கூடிய, படிக்கக்
கூடிய, எழுதக் கூடிய, ஒரு புதிய மொழியை
உருவாக்கினான் லூயிஸ்.
இராணுவத்தினர் பயன்படுத்தும்
பன்னிரெண்டு புள்ளிகளுக்குப பதில், ஆறே ஆறு புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, இந்த மொழியில், பள்ளிப் பாடங்கள், சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள், கணக்குகள், இசைக் குறிப்புகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள்,
ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட எழுதலாம், படிக்கலாம்.
நண்பர்களே, 1824 இல், இம்மாபெரும் சாதனையை
செய்து காட்டியபோது, லூயிஸின் வயது வெறும் பதினைந்துதான்.
லூயிஸின் முழுப் பெயர் : லூயிஸ் பிரெய்லி. (louis braille)
அவன் உருவாக்கிய எழுத்து முறைதான் : பிரெய்லி எழுத்து முறை.
லூயிஸ் பிரெய்லின் கையெழுத்து ===>>
பார்வையற்றோர் வாழ்வில்
ஒளிவிளக்கேற்றிய பிரெய்லியைப் போற்றுவோம்
About Author

Advertisement

Related Posts
- சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ - Fidel Alejandro Castro Ruz Real Life History29 Nov 20160
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) cuba (கூபாவ...Read more »
- காரல் மார்க்சு (ஹெர்ஷல் மார்க்ஸ்) வரலாறு - karl marx History20 Jun 20170
பிறப்பு: 05-05-1818. தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ். தாய்: ஹென்ரிட்டா. பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும்...Read more »
- உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் - Oppeheimer02 Jul 20170
(1904-1967) அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி! அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது...Read more »
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வரலாறு27 Aug 20170
தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ப...Read more »
- குமரித் தந்தை மார்ஷல் நேசமணி வரலாறு - marshal A. nesamony History27 Aug 20170
தென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்த...Read more »
- இறப்பதற்கு முன் பிரபல மனிதர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்!28 Mar 20200
இறப்பதற்கு முன் பிரபல மனிதர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்! இறப்பதற்கு...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.