Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து முதல் திருமொழி - வண்ண மாடங்கள் ...

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு) கலிவிருத்தம்

13 வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. 1

14
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2

15 பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3

16 உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4

17 கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5

18 கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6

19 வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7

20
பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8

21
கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9

22 செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. 10

இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

23 சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. 1

24
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2

25 பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 3

26 உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4

27 பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5

28 மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6

29 இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே. 7

30 வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8

31 அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே. 9

32
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 10

33
நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர். வந்துகாணீரே. 11

34
மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர். வந்துகாணீரே. 12

35
வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 13

36 எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 14

37 நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர். வந்துகாணீரே. 15

38 விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர். வந்துகாணீரே. 16

39 பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே. 17

40
மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18

41
முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர். வந்துகாணீரே. 19

42 அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 20

43 சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. 21

மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)
கலித்தாழிசை

44 மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. 1

45
உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய். அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே. தாலேலோ. 2

46
என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3

47
சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4

48 எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே. தாலேலோ. 5

49
ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய். தாலேலோ
சுந்தரத்தோளனே. தாலேலோ. 6

50
கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே. அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7

51
கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய். தாலேலோ
நாராயணா. அழேல்தாலேலோ. 8

52
மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா. அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே. தாலேலோ. 9

தரவு கொச்சகக் கலிப்பா
53 வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. 10

நான்காம் திருமொழி - தன் முகத்து
(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)
கலிநிலைத்துறை

54
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. 1

55
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2

56
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3

57
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4

58 அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5

59 தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6

60
பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7

61 சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8

62 தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9

63 மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. 10

ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

64 உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.1

65 கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.2

66 நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.3

67 வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.4

68 மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.5

69 காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.6

70
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.7

71 உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.8

72 பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.9

73
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.10

74 அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே.11

ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
(கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

75
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே. சப்பாணி. 1

76
பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2

77
பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே. சப்பாணி. 3

78 தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4

79
புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி
பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5

80 தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே. சப்பானி. 6

81 பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7

82
குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே. சப்பாணி. 8

83 அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே. சப்பாணி. 9

84
அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10

85
ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. 11

ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

86
தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. 1

87
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2

88
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3

89
கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4

90
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5

91
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6

92
படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7

93
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8

94
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9

95
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10

96
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11

எட்டாம் திருமொழி -- பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை

97
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 1

98
செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2

99
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ
ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3

100
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய். அச்சோவச்சோ
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4

101
கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை
அழலவிழித்தானே. அச்சோவச்சோ
ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5

102
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே.
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6

103
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே. அச்சோவச்சோ
சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7

104
என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே. அச்சோவச்சோ
வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8

105
கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ
மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9

106
துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே. அச்சோவச்சோ
அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10

107
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. 11

ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால்வந்த கலித்தாழிசை

108
வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். 1

109
கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2

110
கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3

111
நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4

112
வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5

113
சத்திரமேந்தித் தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான். 6

114
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7

115
மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8

116
கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9

117
ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்

வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. 10

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top