Home
»
18 சித்தர்கள்
»
சித்தர்கள் உலகம்
» பாம்பாட்டி சித்தர் வரலாறு ஜீவ சமாதி பீடம் சங்கரன்கோவில் பாம்பாட்டி சித்தர் பீடம் மருதமலை | pambatti siddhar history in tamil
பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரது குரு சாட்டைமுனி ஆவார். படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால் இப்பெயர் அமைந்தது. யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.
மருதமலைப் பகுதியில் உள்ள வனங்களில் ஏராளமான விஷப் பாம்புகள் அப்போது இருந்தன. ஜோகி என்ற மலைவாழ் இனததைச் சேர்ந்த அந்த இளைஞனுக்குச் சிறுவயதிலிருந்தே
ஏனோ பாம்புகளின்
மேல் ஓர் ஈர்ப்பு. பாம்புகளைப் பிடிப்பதும்
அடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. ஊருக்குள் நுழைந்துவிடும்
விஷப்பாம்புகளைப் பிடிப்பதில்
அவன் கைதேர்ந்தவனாக
விளங்கினான். மூலிகை வைத்தியத்தால் பாம்பு கடித்தவர்களைப்
பிழைக்க வைக்கும் ஔடதமும் எப்படியோ அவனுக்குக் கைவரப் பெற்றது.
பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் சங்கரன்கோவில் திருநெல்வேலி
பாம்பாட்டி சித்தர் கோவில் மருதமலை கோயம்பத்தூர்
மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர். உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.
திருக்கோகர்ணத்தில் பிறந்தார் என்றும் மருதமலையில் உள்ள பழங்குடியினர் மரபில் பிறந்தார் என்றும் பாம்பாட்டிச் சித்தரின் பிறப்பு பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. 'போகர் -2000' என்ற நூலில் சித்தர் போகர், இவர் 'ஜோகி' என்ற இருளர் வம்சத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறார். சித்தர் ஞானக் கோவை' நூலோ இவர் 'கோசாயி' என்னும் மலைவாழ் பழங்குடி இனம் எனக் குறிக்கின்றது.
ஒரு பாம்புப் பிடாரனாக, பாம்புக் கடி வைத்தியனாக 'பாம்பாட்டி' என ஊர்மக்களிடையே அவன் பிரபலமாகியிருந்தான். பொதுமக்கள் மட்டுமன்றி மூலிகை ஆராய்ச்சிகளுக்காக அந்தப் பகுதிக்கு வரும் வைத்தியர்கள்
மற்றும் சித்தர்களிடையேயும் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் பாம்பு விஷம், அதை முறிக்கும் மூலிகைகள் குறித்து செய்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென பாம்புகளைப்
பிடித்துக் கொடுப்பது - அடர் காட்டுக்குள் கிடக்கும் மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து கொடுப்பது என அவன் அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.
கொடிய பாம்புகளை எளிதாக வசியம் செய்து அவன் பிடித்து விடுவதையும்,
ஆராய்ச்சிக்குத் தேவைப்படும்
பாம்பு விஷத்தை முறையாக எடுத்துக் கொடுப்பதையும்
பார்த்த அவர்கள் அவனிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக தங்களுக்குள் வியப்பை ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டனர். மருதமலை பாம்பாட்டியின்
வசியத்துக்கு சில மலைப்பாம்புகளும் கட்டுப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருநாள்... பாம்பு விஷ முறிவு ஆராய்ச்சிக்கென அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், பாம்பாட்டியிடம் ஒரு ஆச்சர்யமான தகவலைச் சொன்னார் "பிடாரா! மருதமலை உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும்
நாகலிங்க மரத்தடியில்
நவரத்ன பாம்பு ஒன்று வசித்து வருகிறது. உருவத்தில் மிகவும் சிறியதும் வயதில் மிகவும் மூத்ததுமான அந்தப் பாம்பு சாதாரணமாக மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாது. அதன் தலையில் ஓர் அபூர்வமான மாணிக்கம் உள்ளது. அந்த மாணிக்கத்தின் ஒளியில் இரவில் மட்டுமே அது இரைதேடி, தன் இருப்பிடப் புற்றை விட்டு வேட்டைக்கு வெளியே வரும்! பகலில் மறைந்து விடும்! அந்த நாகமாணிக்கம் பல அபூர்வ சக்திகளைக் கொண்டது! அதன் விஷமே அற்புத அருமருந்து! அதை பத்திரமாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார்! பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம்! ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான்! அந்த நாகம் சாதாரண பாம்பல்ல!"
பாம்புகளை தன் விளையாட்டுப் பொம்மைகளாகவே நினைக்கும் அவன் சிரித்துக்கொண்டே "அந்த மாணிக்கப் பாம்பை இன்று இரவே பிடித்து வருகிறேன். காத்திருங்கள்'' என்று கூறிவிட்டு, மலை உச்சியில் உள்ள நாகலிங்க மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
Coimbatore-maruthamali-temple
அந்த மலை உச்சியை அடைந்து பக்கத்திலிருந்த
ஒரு புதருக்குள்
பதுங்கியபடி, பாம்பு வரும் இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்... பாம்பாட்டியின் நடமாட்டத்தை
பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உணர்ந்து பழகிய பல பாம்புகளும்,
வழக்கம் போல் பயந்து நடுங்கி புதர்களில் பதுங்கத் தொடங்கின. பூச்சிகளின் ரீங்காரமும்
விலங்குகளின் சத்தமும் காட்டையே அதிர வைத்துக்கொண்டிருந்தன. அன்று அமாவாசை என்பதால் எங்கும் கும்மிருள் அப்பிக் கிடந்தது. புதரில் மறைந்த பாம்பாட்டி, நாகலிங்க மரத்தடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது மரத்தடியிலிருந்து ஒரு சிறு வெளிச்சம் ஊர்ந்து வருவது தெரிந்தது. பாம்பாட்டி தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கினான்.
அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாம்பாட்டிக்கு
சற்றே வியப்பும் பயமும் மேலிட்டன! இப்போது அந்த மலைவனமே அதிரும்படி ஓர் உரத்த சிரிப்பொலி எழுந்து அடங்கியது! பாம்பாட்டி பயந்து ஒரு புதருக்குள் பதுங்கினான்.
சிறிய பாம்பு எப்படி இப்படிச் சிரிக்க முடியும் என்ற குழப்பம் அவனுக்குள் பயமாகப் பரவிக்கொண்டிருந்தது...
"பயம் வேண்டாம் பிடாரா! வெளியே வா! நான் மாணிக்க நாகம் அல்ல. உன்னைப்போல் ஒரு மானிடனே!" என்ற குரல் கேட்டு பயத்தில் உடல் நடுங்க மெள்ளக் கண் திறந்து பாம்பாட்டி அந்த உருவத்தைப் பார்த்தான். ஒளிப் பிழம்பாய் மின்னிய அந்தத் திருமேனியில்
திருநீற்று வாசனை வெளியாகி பாம்பாட்டியின் நாசிகளைத் தீண்டியது. அவன் உடல் சிலிர்த்தான். "அய்யா! நீங்கள் யார்?" என்றான் அச்சம் நிறைந்த குரலில்.
"உன் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம் நான்! சரி, நீ யார்?" என்றார் அவர்.
"நான் ஒரு பாம்புப் பிடாரன். பாம்புக் கடி வைத்தியன். ஓர் அபூர்வ பாம்பைத் தேடி இங்கு வந்தேன்!"
"நீ தேடி வந்த பாம்பு கிடைத்ததா?"
"எப்படி கிடைக்கும்? நீங்கள் சிரித்த சிரிப்பில் சிங்கம் புலியே நடுங்கிப் பதுங்கியிருக்கும்!"
"உன் அறியாமையை எண்ணியே நான் சிரித்தேன்!"
"அபூர்வ சக்திகள் கொண்ட மாணிக்க நாகத்தைத் தேடி வந்தது அறியாமையா?"
"ஓர் ஒற்றை மாணிக்கக் கல்லைச் சுமக்கும் பாம்பைத் தேடி நீ வந்திருக்கிறாய். ஆனால் நவரத்னமும் சுமக்கும் ஓர் அற்புத நாகம் உனக்குள் இருப்பதை நீ இன்னும் அறியவில்லையே!"
பாம்பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. "அய்யா, இந்தப் பாமரனுக்குப் புரியும்படிச் சொல்லுங்கள்!"
என்றான்.
"அந்த அபூர்வ நாகம் உனக்குள் மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு! ஆனால் உன்னைப்போலவே பலரும் அதை உணர்வதில்லை! அதை அறிந்து உணர்ந்து அனுபவித்தவர்கள் சித்தர்கள்! உனக்கு அந்தச் சித்தி கிடைக்கும் நேரம் இப்போது என் வழியாக வந்து விட்டது! இனி பாம்புகளைத்
தேடி வெளியே ஓடாதே! குண்டலினி என்னும் அதி அற்புத நாகத்தைப் பிடிக்க உனக்குள்ளேயே பயணம் செய்! நான் உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள். இனி நீ சாதாரண பாம்பாட்டி அல்ல! பாம்பாட்டிச்
சித்தன்! இது இறைக்கட்டளை! ஏற்றுக்கொள்!" என அவர் பேசியதைக் கேட்டு நெக்குருகி பாம்பாட்டி நெடுஞ்சான் கிடையாக அவர் பாதங்களைத் தழுவினான்.
அவனுக்கு அங்கேயே ஞானோபதேசம் செய்வித்த அவர், கடைசியாக இப்படிக் கூறினார்: ''பாம்பாட்டியே, இனி நீ பாம்பாட்டிச் சித்தன் எனப் போற்றப்படுவாய்! எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய்!
உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி!" எனச் சொல்லிப் புன்னகை வெளிச்சம் அடிக்க சட்டென மறைந்தார் சித்தர் சட்டைமுனி!
பாம்பாட்டிச் சித்தர் தவம் செய்த குகை 'ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் குகை' என்ற பெயரில் மருதமலையில் உள்ளது. பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார்
என்றும் சங்கரன்கோவில்
சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன.
திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான்
என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன.
பாம்பாட்டி சித்தர் மடம் அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டத்தில்
சங்கரன்கோவில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.
சங்கரன் கோயில் ஆலயத்தின் மேற்கு கோபுர வாசல் வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவரின் ஜீவ சமாதி. ஆட்டோவிலும் செல்லலாம்..ஆனால் ஆட்டோகாரரிடம் சித்தர் சமாதி என்று சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆலயத்தின் வாசலில் பூ பழம் விற்பவர்களிடம்
வழி கேட்டாலும் சரியாக சொல்வார்கள்.
கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி என்றும் கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
பாம்பாட்டி சித்தர் பீடம் மருதமலை கோயம்பத்தூர்
Subash
About Author

Advertisement

Related Posts
- கொங்கணர் சித்தர் வரலாறு - கொங்கணர் ஜீவசமாதி திருப்பதி- konganar siddhar history- konganar siddhar jeeva samadhi-Konganar Siddhar Temple22 Sep 20190
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் புளிஞர்...Read more »
- சித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi22 Sep 20190
கொங்கண சித்தர் ! தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்னும் பழமொழியும் பிறந்தது இதிலே...ஊதியூர் (பொன...Read more »
- கமலமுனி சித்தர் வரலாறு- திருவாரூர் கமலமுனி சித்தர் பீடம்- kamalamuni siddhar history- kamalamuni siddhar jeeva samadhi23 Sep 20190
சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூ...Read more »
- சிவனையும் நடுங்க வைத்த கருவூரார் சித்தர் வரலாறு| & ஜீவசமாதி - karuvurar siddhar jeeva samadhi26 Mar 20200
சிவனையும் நடுங்க வைத்த கருவூரார் சித்தர் வரலாறு| & ஜீவசமாதி - karuvurar siddhar jeeva ...Read more »
- நவநாயகர் சித்தர் போகர் வரலாறு ஜீவசமாதி பழனிமலை | Bogar, Boyang Wei china history thomb26 Mar 20200
போகர் (Bogar, Boyang Wei) பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், த...Read more »
- பாம்பாட்டி சித்தர் வரலாறு ஜீவ சமாதி பீடம் சங்கரன்கோவில் பாம்பாட்டி சித்தர் பீடம் மருதமலை | pambatti siddhar history in tamil26 Mar 20200
பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும்...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.