Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சித்தர் ராமதேவர் ஜீவசமாதி தந்த சிலிர்ப்பான அனுபவம்! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பனிக்காற்றில் மிதந்து வந்த ' மார்கழித் திங்கள் ' பாடல் அதிகாலையை அழகாக்கிக்கொண்டிருந்தது . ' பழமுதிர்ச்சோலை ' எனும...
பனிக்காற்றில் மிதந்து வந்த 'மார்கழித் திங்கள்' பாடல் அதிகாலையை அழகாக்கிக்கொண்டிருந்தது. 'பழமுதிர்ச்சோலை' எனும் அழகர் மலையில் 'நூபுர கங்கை' தீர்த்தத்துக்கு மேலே 8 கி.மீ மலைப் பாதையில் அமைந்துள்ளது சித்தர் ராமதேவரின் தேவரின் ஜீவசமாதியைக் காண நான் புறப்பட்ட நாள் மார்கழி ஒன்று. அழகர் மலைக் கோயிலுக்கு முன் ஏராளமான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நின்றிருந்தன. கோயிலுக்கு முன் ஏராளமான பக்தர்கள் கூட்டம்.
                                                                            ராக்காயி கோவில்
கோயிலைக் கடந்து நண்பர்களுடன் சித்தர் ராமதேவரின் ஜீவசமாதி இருக்கும் மலைப்பாதையில் நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரத்தில்
.
ராக்காயி தீர்த்தத்திற்கு செல்வோம். ராக்காயி கோவில் வரை மட்டுமே பொதுவாக மக்கள் செல்வார்கள்.ராக்காயி தீர்த்தம் அடுத்து மேலே சென்றால் வனப்பகுதியில் செல்லலாம் இரண்டு சுனைகள். பக்தர்கள் குளிப்பதும், பிளாஸ்டிக் கேன்களில் நூபுர கங்கை தீர்த்தத்தைப் பிடிப்பதுமாக இருந்தனர். அடுத்து ஒரு மைல் தூரம் கொஞ்சம் சமதரையாக மலைப்பாதை வளைந்து சென்றது. எதிரில் நிறைய குரங்குகள் கடந்து சென்றன. மலையடிவாரத்தில் ஏதேனும் உணவு கிடைக்குமா என்று கண்களால் தேடியபடி அவை எதிராக நடந்துகொண்டிருந்தன.
அதற்குப் பிறகு மலைப்பாதையில் எந்த நடமாட்டமும் இல்லை. சிறிது தொலைவு சென்றதுமே, எங்கள் செல்பேசித் தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. மெள்ள மெள்ள அகலம் குறுகத் தொடங்கிய பாதை செங்குத்தாக ஏறியது. இரு மருங்கிலும் புதர்க்காடுகள். சிறு மரங்களையும் கொடிகளையும் பற்றியபடி நடக்கத் தொடங்கினோம். சட்டென பாதை, மலையின் விளிம்புப் பகுதிக்கு மாறியது. மேலே கால்கள் ஒற்றையடி வழித்தடத்தில் தத்தித் தத்தி ஏறத் தொடங்கின. மலைப் பாறைகளில் ஆங்காங்கே செல்லும் வழியைக் குறிப்பிடும் மஞ்சள் நிற அம்புக் குறிகளைப் பார்த்தபடி மலையில் ஏறிக்கொண்டிருந்தோம்.
சமதரையிலேயே நடந்து பழகிய கால்கள் சற்று தடுமாறியபடியே ஏறிக்கொண்டிருந்தன.
மஞ்சள் நிற அம்புக்குறிகளைத் தவிர, கடக்கவேண்டிய தூரம் குறித்த குறிப்புகளோ தகவல் பலகைகளோ எங்கும் இல்லை. சற்று தூரத்துக்கு ஒருமுறை ஒரு சிறு இளைப்பாறல். மூச்சிரைப்பு சற்று தணிந்ததும் மீண்டும் நடை. பெரும்பாலும் புதர்க்குகை போன்ற பாதை. அதனால், அம்புக்குறிகளைப் பின்தொடர்ந்தபடியே நடந்துகொண்டிருந்தோம். இரண்டு மணி நேரப் பயணத்தில் கையிருப்பில் இருந்த ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலும் தீர்ந்து போனது. அதற்குப் பிறகு மலையின் விளிம்புப் பகுதியில் மேலும் செங்குத்தாக மேலேறியது பாதை. எதிரில் - தூரத்தில் தெரிந்த மலையின் உயரத்தைக் கண்டு, நாங்கள் ஏறிய மலையின் உயரத்தைக் கண்களால் கணக்கிட்டபோது கொஞ்சம் உள்ளுக்குள் அச்சம் சூழ்ந்தது.
எதிரிலோ, பின் தொடர்ந்தோ எங்களை எவருமே அதுவரைக் கடக்கவில்லை. சிறிய கற்கள், சிறு மரக் கிளைகள், பெரிய கொடிகள் சூழ்ந்த பாதையில் தயங்கித் தயங்கியபடியே கால்கள் நடந்தன. அங்கு நேரமே தூரமாகி இருந்தது. சிறிய பறவைகளின் சத்தம், பூச்சிகளின் சத்தம் இன்னும் திகிலூட்டியது. ஓரிடத்தில் முன்னால் நடந்துகொண்டிருந்த சதீஷ் சட்டென நின்று என்னைத் திரும்பி நோக்கினார். அவரின் விழிகள், என்னை அவருக்கு முன்பக்கம் பார்க்கும்படி கோரின. ஒரு பெரிய மலைப்பாறையின் விளிம்பில் கால்கள் பதிக்கும் அளவுக்கு வெட்டப்பட்டிருந்தது பாதை. இடப்பக்கமிருந்த அந்தப் பாறைக்கு வலப்பக்கம் திரும்பிப் பார்த்தால் பெரும் பள்ளத்தாக்கு.
 ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அல்லது வார்த்தைகள் வெளிவரவில்லை. அந்த இடத்தை எப்படிக் கடப்பது என கண நேரம் யோசித்தபோது உடம்பு ஜில்லிட்டது. ஆனால், சட்டென சதீஷ் பாறையை அணைத்தபடி மெள்ள அந்த விளிம்பில் கால்பதித்து பாறைக்கு அந்தப் பக்கம் போனார். அதற்கு மேல் நானும் யோசிக்கவில்லை. ராமதேவரை மனதுக்குள் தியானித்தபடி அவர் போன பாதையில் நிதானமாகப் பின்தொடர்ந்து அந்த அபாயகரமான பாறையைக் கடந்தேன். திரும்பி வரும்போது இந்த இடத்தை எப்படிக் கடக்கப்போகிறோமோ என்ற அச்சமும் அப்போது உள்மனதில் துளிர்த்தது!
கரடுமுரடான, ஏற்ற இறக்கமான பாதையில் நடந்து நடந்து உடல் முற்றிலும் களைத்துப் போனது. மூன்று மணி நேர நடைப்பயணத்தில் சட்டையும் ஜீன்ஸ் பேன்ட்டும் வியர்வையில் முற்றிலுமாக ஊறியிருந்தன. உடலில் களைப்பு ஏற ஏற, மனதில் 'அந்த இடம் வந்து விடாதா?' என்ற எண்ணம் ஓடியபடியே இருந்தது. குறுகலான பாதை சட்டென கொஞ்சம் சமதரையாக அகல வாக்கில் விரிந்ததும் மனம் கொஞ்சம் ஆசுவாசமானது. அது சிறிது தூரம்தான். அதற்குப் பிறகு ஆளுயுரம் தாண்டிய உயரத்தில், நெடிய கோரைப் புல் காடு... உள்ளே செல்லும் ஓர் ஒற்றையடிப்பாதை. சூரிய வெளிச்சத்தை முற்றிலும் மறைத்தன, கோரைப்புல் புதர்கள். டிஸ்கவரி சேனலிலும் பி.பி.சி எர்த் சேனலிலும் பார்த்த புலிகளின் வாழ்க்கை படங்களில் வரும் அடர்ந்த புல்காடு என் நினைவில் வந்துபோனதுஅந்தக் கோரைப் புல் காட்டைக் கடந்து வெளியேறிய பின் கொஞ்சம் சமவெளிக்குப் போனோம். விரைவில் ராமர்தேவர் சமாதியை அடையப் போகிறோம் என உள் மனசு சொல்லியது.
மீண்டும் வளைந்து நெளிந்த பாதை தொடங்கியது. முடிவதுபோல் இருக்கும் பாதை தொடர்ந்தபடியே இருந்தது. அப்போது சட்டென வானம் கறுக்கத் தொடங்கியது. மழை பெய்தால், அந்தப் பாதையில் நடப்பது என்பது நடக்கவே நடக்காதுஅடுத்த ஓர் அரை மணி நேரப் பயணத்துக்குப் பின்னர் ஓரிடத்தில் சில தண்ணீர் பாக்கெட் பாலிதீன் உறைகள், பிஸ்கட் பாக்கெட் உறைகள் கிடந்தன. ஓரிடத்தில் கற்களைக் குவித்து நெருப்பு மூட்டிய சாம்பல் தடங்கள். ராமதேவரை நெருங்கிவிட்டோம் என்று நினைத்தேன். சிறிது வளைவான பாதை சட்டென ஓரிடத்தில் முற்று பெற்றது... இலக்கை அடைந்துவிட்டோம்!
ஒரு பாறையில் 'பகவான் ராமதேவர் ஜீவசமாதி பீடம்' என பெயின்ட்டால் எழுதப்பட்டிருந்தது. மனம் கொஞ்சம் ஆசுவாசமானது. இரண்டு மலைப்பாறைகள் சம அளவில் லிங்கத்தின் விஷ்ணுபாகம் போன்ற தோற்றத்தில் நிற்க, அதன் கீழே அமைந்துள்ளது ராமதேவரின் சமாதி பீடம். ஒரு சிறு பிள்ளையார், சிவலிங்கம் அந்தச் சிறிய குகைப் பகுதியில் உள்ளன. சிறிது நேரம் பீடத்தில் அமர்ந்து தியானித்தோம். அதுவரை வந்த களைப்பு எங்கு போனது என்றே தெரியவில்லை. மனதில் சூழ்ந்திருந்த சிறு அச்சமும் குழப்பமும் மறைந்தோடிப் போயின. கண் திறந்தபோது உடம்பும் மனதும் புதிதானது போலிருந்தது. சூரியனை மூடிய கருமேகம் கலைந்து மீண்டும் வெளிச்சம் பரவியது. மெல்லிய காற்று வந்து முகம் வருடியது. அந்தக் காலமே உறைந்தது போன்ற ஒரு பேரமைதி.
                               ராமதேவர் ஜீவசமாதி
இனமறியாத இந்த அமைதிதான் ஜீவசமாதிகளின் சூட்சும ஆனந்தம். அதை அனுபவிப்போரே உணர முடியும். அமைதி தவழும் அந்த பீடத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசம் செய்துகொண்ட பின்னர் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம். மலையில் ஏறும் வழிகாட்டிகளாக மஞ்சள் நிற அம்புக்குறிகள் இருந்ததுபோல் இறங்கும் வழிகாட்டிகளாக காவிநிற அம்புக்குறிகள் அதே பாறைகளில் இடப்பட்டிருந்தன. அம்புக்குறிகளைப் பின்தொடர்ந்தபடியே இருந்தபோது, ஒரு மணி நேரப் பயணத்தில், ஓரிடத்தில் காவி நிற அம்புக்குறிகளைக் காண முடியவில்லை. மஞ்சள் நிற அம்புக்குறிகளையும் காணோம்! என்ன இது சோதனை என நினைத்தபடியே சுற்றுமுற்றும் இருவரும் தேடியும் நாங்கள் ஏறிவந்த பாதையைக் காண முடியவில்லை. பாதையில் நாங்கள் தொலைந்தோமா அல்லது பாதை எங்களை தொலைத்ததா என்று அறிய முடியவில்லை.
திக்குத்தெரியாத காட்டில் திகைத்து நின்றோம்!  சற்று நேரம் அங்கேயே அமர்ந்தேன்.  ''சார், அங்கே வேற ஒரு ஒத்தையடிப் பாதை கீழே இறங்குது சார்!" என்றார் சதீஷ். "ம்! அதுதான் நாம் இறங்கவேண்டிய பாதை! போகலாம்!" என்று  அந்தப் பாதையில் கீழிறங்கி நடக்கத் தொடங்கினோம். எவ்வளவு செங்குத்தாக அந்த ஏறுபாதை இருந்ததோ அதைவிட, நெட்டுக்குத்தாக கீழிறங்கியபடி இருந்தது அந்தக் குறுகலான இறங்கு பாதை!

சிவப்பு மண்ணும் சிறுசிறு மஞ்சள் சரளைக் கற்களுமாக நிறைந்திருந்த பாதையில் காலூன்றி நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு மூன்று இடங்களில், ஒரு மலை விளிம்பில் கற்கள் சறுக்கிவிட  வேர்களை, கொடிகளைப் பற்றிப் பிடித்து உயிர் பிழைத்தோம். ஏறிய பாதையைவிட இறங்கும் பாதை மிகவும் கடினமாக இருந்தது.

சாப்பிடாத களைப்பு ஒரு பக்கம். தண்ணீர்கூட இல்லை. மனதில் உறுதி மட்டுமே வழித்துணையாக இருந்தது. மிகுந்த சிரமங்களுடன் மூன்று மணி நேரம் இறங்குமுகமாக நடந்தோம்இறுதியாக அந்தப் பாதை மலையடிவாரத்தில் இருந்த கருப்பசாமி கோயில் அருகில் எங்களை ஒருவழியாகக் கொண்டு வந்து சேர்ந்தது!
                             கருப்பசாமி கோயில்
உண்ணா நோன்பை முடிப்பதுபோல் இருவரும் ஆளுக்கொரு பழச்சாற்றை வாங்கிப் பருகி சக்தியை மீட்டோம். ஆனால் இரவோ, மறுநாளோ எனக்கு காலிலோ உடலிலோ அந்தப் பயணத்தின் களைப்பு பெரிதாகத் தெரியவே இல்லை. கால்கள் நம்முடையவை எனினும், பாதையும் பயணமும் அவனுடையவை அல்லவா! 'சித்தர்களின் ஜீவசமாதி தரிசனத்தில்' எனக்கு இது சிலிர்ப்பான ஓர் அனுபவம். இன்னும் என்னவோ? நடக்கத் தயாராக இருப்பது மட்டுமே நம் கடன்! பாதையையும் பயணத்தையும் தீர்மானிப்பவன் அவனே!
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top