கோவை:””பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,” என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மைதா மாவினால் தயாரிக்கப்படும் “பரோட்டா’ உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட படி நடந்து வந்தனர்.
இதுகுறித்து ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி முதன்மை செயலாளர் அஜீத்குமார் லால்மோகன் கூறியதாவது: சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் மட்டுமில்லை; சாப்பிட கூடாத உணவைச் சாப்பிடுவதாலும் பல்வேறு நோய்கள் உண்டாகி வருகின்றன. மக்களுக்கு தங்கள் சாப்பிடும் உணவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. கடைகளில் புதிய பெயரில் எந்த உணவை விற்றாலும், அதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. அதனால், உடலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இன்றைக்கு பெரும்பாலான உணவு வகைகள், மைதா மாவில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்களில் மைதா மாவில் தயாரிக்கப்படும் “பரோட்டா’தான் அதிகளவில் விற்பனையாகிறது. மைதா மாவு, ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது; மைதா இயல்பாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்; அதை வெண்மையாக மாற்ற, “பென்சாயில் பெராக்ஸைடு’ மற்றும் “அலாக்ஸான்’ என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது; இதனால், மைதா வெள்ளை நிறமாகவும், மிருதுவான தன்மையுடனும் மாறுகிறது.இந்த “பென்சாயில் பெராக்ஸைடு’ என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். “அலாக்ஸான்’ என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் “அலாக்ஸான்’ கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது.
இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது. மைதா “பரோட்டா’ சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நடத்திய ஆய்வில், “பரோட்டாவில் “கார்போஹைடிரேட்’ அதிகம் இருப்பதும், நார் சத்து இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விலை குறைவு என்பதால் “பரோட்டா’ உள்ளிட்ட மைதாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்; இதனால், பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த பல நோய்கள், ஏழைகளுக்கும் வர வாய்ப்புள்ளது; எனவே, “பரோட்டா’ சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அஜித்குமார் லால்மோகன் கூறினார்.
இது விலங்குகளுக்கான உணவு…!
மைதா மாவினால் தயாரிக்கப்படும் “பரோட்டா’ குறித்த வேறு சில தகவல்கள்:
* மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.
* மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.
* இன்றைக்கு மைதாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக அளவில் தயாரிக்கப்படுவது புரோட்டா மட்டுமே.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.