சிதறால் மலைக் கோவில் (Chitharal Jain Monuments) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இருக்கும் மிகப் பெரிய குகைக்கோவிலாகும். நாகர்கோவிலிருந்து 45 கட்டை (கிலோமீட்டர்) தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாடண்டு பழமை வாய்ந்த இந்த சமண மதக் கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது, இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது
சிதறால் மலை கோவில் செல்லும் பாதையின் அழகு
திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது
ஆண்டுதோறும் அரசு சார்பாக சுற்றுலா விழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 2009-ம் ஆண்டு ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட மலைக்கோயில் சுற்றுலா விழா, 2010ம் ஆண்டு முதல் 3 நாள் விழாவாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள சமண குடைவரைக் கோயில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பலகலைகழகம் ஒன்று இங்கே இருந்த்தாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற அரசி நிபந்தமாக சொத்துக்களை அளித்தது பற்றிய ஒரு கல்வெட்டு அங்கே உள்ளது. அந்த கல்வெட்டு தமிழ்-பிராமி மொழியில் உள்ளது
சிதறால் மலை
உச்சிக்கு செல்ல, கீழே இருந்து ஒரு கிலோ மீட்டர் நடைதான். ஆனால்
புறவெளியை பார்த்தபடி ஏற ஏற மனவெளியில் ஏற்படும் மாற்றங்கள் அளவீடுகளின்
பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவை. தொடுவானைத் தூக்கிப் பிடித்தபடி தூரத்தில்
தெரியும் மலை முகடுகளில் கண் வைத்தால், விசாலத்தின் உணர்வு மனது முழுவதும்
ஏறத்துவங்கி
சுமார் அரை மணி நேரம் கடந்தபின், அடர்ந்து பெருத்து ஆங்காங்கே தன் உருவத்தை அசைத்தபடி
அமர்ந்திருக்கும் அடிவேர்கள் செறிந்து ஆண்டுகள் பல கண்ட மரமொன்றின் பின்னே
காலத்தின் கனத்தை ஒன்றன் தோள் சாய்ந்து மற்றொன்று தாங்குவது போன்ற இரண்டு பாறைகள்
சட்டென்று நம் கண்ணில் பட்டு கவனத்தை ஈர்த்தால் நாம் குடைவரையின் முகப்பை அடைந்து
விட்டோம் என்று அர்த்தம்.
அந்தப்
பாறைகளின் இடையே உள்ள பிளவின் வழியே நுழைந்து மறுபுறம் அடைந்தால் ஆயிரம்
ஆண்டுகளின் சுவடாய் சுவரில் படிந்திருக்கிறார்கள் தீர்த்தங்கரர்கள்.குன்றின்
உச்சியை அடைந்ததன் குறியீடாய் காற்று உடம்பை கிழித்தெறியும் வேகத்தில்
துளைத்தெடுத்தது. தொன்மையின் வீரியம் அந்த இடம் முழுவதும் விரவியிருந்தது.
தீர்த்தங்கரர்களின் சிலைகள் வடிக்கப்பட்ட பாறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்களில்
கல்லாகிப் போய் கண் மூடிக் கிடந்தது காலம். “ஆயிரத்து ஐநூறு வருஷம்!” என்று எனக்குள்
நானே சொல்லிப் பார்த்தேன். காலம் அங்கு ஆயிரம் வருடங்களைக் கடந்து அமைதியாக
அமர்ந்திருந்தது.
சிதறால் மலை
குறித்து சுவையான சரித்திரம் உண்டு. கி.மு 298ஆம் ஆண்டு சந்திரகுப்த மெளரியர், தனது குருவாகக்
கருதிய பத்ரபாகு என்னும் சமண முனியுடன்
வடக்கிலிருந்து சிரவணபெளகுளா [இன்றைய கர்நாடகத்தில் இருக்கும் இடம்]
வந்தாராம். பத்ரபாகுவின் சீடர்கள் அப்பகுதி முழுவதும் சமணம் பரப்பும் பொருட்டு
குழுவாக பிரிந்து சென்றனர். பத்ரபாகுவின் சீடர் விசாகா என்பவர் தலைமையில் பாண்டிய
சோழ நாடுகளுக்கு வந்த ஒரு பெருங்குழு, சிதறால் மலையை தியானத்திற்கு உகந்ததாக தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். இவ்வாறாக “திருச்சரணத்து
மலை” உயிர்த்து
எழுந்தது என்கின்றன குறிப்புகள்.
தீர்த்தங்கரர்கள்
செதுக்கப்பட்டிருக்கும் பாறைகளை பார்த்தபடி வந்தால், அது நம்மை ஒரு மண்டபத்தில் போய் நிறுத்துகிறது.
இதுவே குடைவரை கோயில். கருவறை மண்டபம், வராண்டா போன்ற
ஒரு வெளி மற்றும் ஒரு பலிபீடம் என மூன்று பகுதிகளை கொண்டது இது. கருவறை மண்டபம்
மூன்று அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றில் மகாவீரரும் மற்றொன்றில் பகவதி
அம்மனும் மூன்றாவதில் பர்ஸவதனா என்ற தீர்த்தங்கரரும் வீற்றிருக்கிறார்கள். சமணமும்
இந்து மதமும் ஒரே கருமண்டபத்தில் இருப்பது விசித்திரமாக இருக்கிறது இல்லையா? சமணம் அழிந்து
பல காலம் பாழ்பட்டுக் கிடந்த இந்த இடத்தை, இரண்டாம் ராஜராஜன் பகவதி அம்மனை எழுப்பி இந்து
கோயிலாக புதுப்பித்தான் என்று கேள்வி. காலத்தின் அமானுஷ்ய குரல் போல
சுழன்றடிக்கும் காற்றுக்கும் இவர்கள் இங்கமர்ந்த காலத்திற்கும் இடையே நம்மை
பொருத்திப் பார்க்க தோதாக இருக்கும் மண்டப படிக்கட்டுக்களில் நாம் அமர்ந்தால், மனம் மெல்ல
மெல்ல எடையற்ற பொருளாகி எங்கெங்கோ பறப்பதை அமைதியாக நாம் பார்க்கும் தருணங்கள்
கிட்டும். காலத்துகள்களின் சஞ்சார பிம்பம்தானே உலகமும் அதன் உயிர்களும்?

கோயிலின் முன்னே
ஒரு சிறிய தடாகம். தடாகம் என்ற சொல்லுக்குள்ளேயே தாகம் இருப்பது தற்செயலான
சொல்லாக்கமாக இருக்க முடியுமா? பாறையிலேயே படிகள் வெட்டப்பட்டு அந்த தடாகத்தில்
இறங்கின. பாறைகளின் சரிவில் அமர்ந்து கொள்ளலாம் என்று சொன்னது மனது. இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு சமணத் துறவி அந்த பாறையில் அமர்ந்திருக்கலாம் என்ற
எண்ணம் அந்த பாறையில் கால் வைக்கத் தயக்கத்தை ஏற்படுத்தியது. இதே பாறையில் அமர்ந்த
படி விசும்பின் விளிம்பு நோக்கி அவர் தியானித்திருக்கலாம்.
இடத்தின்
மயக்கம், தயக்கத்தை தள்ளி வைக்க, பாறையில் அமர்ந்தேன். ஆயிரம் வருடங்களின்
ஆழத்தில் கால் வைத்ததன் சிலிர்ப்பு சில்லிட்ட பாறையின் வழி காலில் ஏறியது. சற்றே
சாய்ந்து அமர்ந்தால் பாறையில் தலை சாய்க்கும்படியாகவும், பார்வைக்கு
வானம் முழுவதும் தெரியும் விதமாகவும் வசதியான வார்ப்பில் இருந்தது பாறை. கண் மூடச்
சொன்னது காற்றின் உன்மத்தமான தழுவல். காற்றின் வழியே மழையின் வாசனை மூச்சு முட்ட
உள்ளே இறங்கி நரம்பு மண்டலமெங்கும் வலம் வருவது போன்ற ஒரு நறுமணம். மழையை தன் மீது
பூசிக் கொண்டு பூரித்த தாவரங்கள் குன்றெங்கும் ஏதேதோ வாசனையை வழிய விட்டன. கொட்டத்
துவங்கியது பெருமழை. அருகில் உள்ள கல் மண்டபத்துக்குள் நுழைந்தேன். விடாமல் பின்னே
நுழைந்தது மழை.
குன்றிலிருந்து
இறங்கி அருகிலிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளே நுழைந்தேன். “என்ன சார்
இப்படி தொப்பலா வரீங்க?” என்றார் அங்கு அமர்ந்திருந்த, மனிதர்.
சிரித்தேன். “இந்த இடமே இப்படித்தான்” என்றார் பதிலுக்கு சிரித்தபடி. அவர் சொன்னதில்
குறைந்தது இரண்டு அர்த்தங்களேனும் இருப்பது போலத் தோன்றியது எனக்கு. உங்களுக்கு?
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.