Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூன் 21 புனிதர் அலாய்சியஸ் கொன்ஸாகா (St. Aloysius Gonzaga)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூன் 21  புனிதர் அலாய்சியஸ் கொன்ஸாகா  (St. Aloysius Gonzaga) இயேசு சபை துறவி : (Member of the Society of Jesus) பிறப்...
இன்றைய புனிதர் ஜூன் 21 புனிதர் அலாய்சியஸ் கொன்ஸாகா (St. Aloysius Gonzaga)
இயேசு சபை துறவி : (Member of the Society of Jesus)
பிறப்பு : மார்ச் 9, 1568 கஸ்டிக்லியோன் டெல் ஸ்டிவியேர், மான்ட்டுவா, தூய ரோம பேரரசு (Castiglione delle Stiviere, Duchy of Mantua, Holy Roman Empire)
இறப்பு : ஜூன் 21, 1591 (வயது 23) ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Romem, Papal States)
புனிதர் பட்டம் : டிசம்பர் 31, 1726 திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 
(Pope Benedict XIII)
முக்கிய திருத்தலங்கள் : புனித இஞ்ஞாசியார் ஆலயம், ரோம், இத்தாலி
(Church of Sant' Ignazio, Rome, Italy)
நினைவுத் திருவிழா : ஜூன் 21
புனிதர் அலாய்சியஸ் கொன்ஸாகா, இத்தாலிய உயர்குடியில் பிறந்து, பின்னாளில் தமது குடும்பத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இயேசு சபையில் சேர்ந்து துறவியானவர். ரோம் நகர கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே, தொற்று நோயாளிகளுக்கு சேவை செய்கையில் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இவரது தந்தை, வட இத்தாலியிலுள்ள “கஸ்டிக்லியோன்” (Marquis of Castiglione) எனும் மாநிலத்தின் கோமான் ஆவார். அவரது பெயர் “ஃபெர்ரன்ட் டி கொன்ஸாகா” (Ferrante de Gonzaga) ஆகும். தாயார் “மார்த்தா டனா சன்டேனா” (Marta Tana di Santena) ஒரு சீமான் குடும்பத்துப் பெண்ணாவார். அலாய்சியஸ், தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் மூத்த குழந்தை ஆவார்.
இவரின் தந்தை, பிற்காலத்தில் இவர் பேரும் புகழும் உள்ளவராக திகழ வேண்டுமென விரும்பி, அலோசியசிற்கு நாலு வயதிலேயே இராணுவ பயிற்சியளித்தார். ஆனால் அதே வேளை, அவர் மொழிகள் மற்றும் கலைகள் சம்பந்தமான கல்வியும் பெற்றார். அவர் பெற்ற பயிற்சிகளைக் கண்டு அவரது தந்தை மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட அதே வேளை, அவரது தாயாரும் ஆசிரியர்களும் அதிக மகிழ்ச்சி கொள்ளவில்லை.
மறுமலர்ச்சி இத்தாலியில் வன்முறை மற்றும் மிருகத்தனங்களின் மத்தியில் அவர் வளர்ந்தார். அவரது சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதையும் நேரில் கண்டார்.
                      Church of Sant' Ignazio, Rome, Italy
கி.பி. 1576ம் ஆண்டு, தமது 8 வயதில் இளைய சகோதரருடன் “ஃப்ளோரன்ஸ்” (Florence) நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே, பெரிய பிரபுவின் அரசவையில் சேவையாற்றுவதும் மேற்கொண்ட கல்வியுமே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், சில நாட்களிலேயே அவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தமது வாழ்நாள் முழுதும் அந்நோயால் அவதியுற்றார். தாம் நோயுற்ற காலத்தில், புனிதர்களைப் பற்றி படிப்பதிலும் செபிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். தமது ஒன்பது வயதில் அவர் தூய்மை மற்றும் கற்பு நிலைக்காக தனிப்பட்ட பிரமாணமும் வார்த்தைப்பாடும் எடுத்துக்கொண்டார். வாரத்தில் 3 நாட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். பல கடுமையான ஆன்மீக தவ முயற்சிகளையும் செய்து வந்தார். கி.பி. 1579ம் ஆண்டு, நவம்பர் மாதம், இவர் தமது சகோதரர்களுடன் “மான்ட்டுவா” (Duke of Mantua) பிரபுவிடம் அனுப்பப்பட்டனர். அங்கேயுள்ள வன்முறைகள் மற்றும் அற்பமான வாழ்க்கைமுறை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
                        Church of Sant' Ignazio, Rome, Italy
தமது சொந்த ஊரான “கஸ்டிக்லியோன்“ (Castiglione) திரும்பிய அலாய்சியஸ், அங்கே “கர்தினால் சார்ள்ஸ் பொறோமியோ” (Cardinal Charles Borromeo) என்பவரைச் சந்தித்தார். அவரிடமே கி.பி. 1580ம் ஆண்டு, ஜூலை மாதம், 22ம் நாளன்று, புதுநன்மை பெற்றார்.
இவ்வேளையில் இயேசு சபையினர் இந்தியாவிற்கு சென்று நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபாடு பற்றிய நூல் ஒன்று கிடைத்தது. அதை வாசித்த அலாய்சியஸ், தாமும் ஒரு மறைப் பணியாளராக எண்ணினார். அவர் ஏழைச் சிறுவர்களுக்கு கோடை விடுமுறை காலங்களில் மறைக் கல்வி கற்பிக்க ஆரம்பித்தார். “கஸால் மோன்ஃபெர்ரட்டோ” (Casale Monferrato) நகரிலுள்ள “கப்புச்சின்” மற்றும் “பர்னபைட்ஸ்” (Capuchin friars and the Barnabites) துறவியரைக் காண அடிக்கடி சென்றார்.
“தூய ரோமப் பேரரசி மரியா’வுக்கு” (Holy Roman Empress Maria of Austria) அரசவையில் உதவுவதற்காக இவர்களது குடும்பம் கி.பி. 1581ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டுக்கு அழைக்கப்பட்டது. அவர்கள் கி.பி. 1582ம் ஆண்டு, மார்ச் மாதம், “மேட்ரிட்” (Madrid) நகர் சென்றடைந்தனர். அலாய்சியஸ், கப்புச்சின் சபையில் சேருவதைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்க தொடங்கினார். ஆனால், அங்கே அவருக்கு அறிமுகமான இயேசு சபை ஒப்புரவாளர் ஒருவர், இவரை இயேசு சபையில் சேர ஆலோசனை வழங்கினார். இவரது தாயார் இதற்கு சம்மதித்தார். ஆனால் தந்தையோ கடும் கோபமுற்றார். சீற்றமுற்ற தந்தை இவருக்கு தடை விதித்தார்.
             Tomb Aloysius Gonzaga Church of Sant' Ignazio, Rome, Italy
கி.பி. 1584ம் ஆண்டு, ஜூலை மாதம், அவர்களது குடும்பம் இத்தாலி திரும்பியது. அலாய்சியஸ் இப்போதும் தாம் ஒரு கத்தோலிக்க குருவாக வேண்டுமென தீவிரமாக எண்ணினார். அவரது உறவினர்கள் அவரது மனதை மாற்றிக்கொள்ளும்படி அவரை நிர்பந்தித்தனர். ஆனால், எவ்வித முயற்சியும் பலிக்காது போகவே, அவர்கள் அவரை ஒரு “மதச் சார்பற்ற” (Secular priest) துறவியாகுமாரும், அவ்வாறானால் அவருக்கு ஆயர் பதவி நியமனம் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். இயேசு சபையில் மறைப் பணியாளராக சேர்ந்தால் தமது சொத்து சுகம் அனைத்தையும் விட்டுவிட நேரிடும் என்றும் பயமுறுத்தினர். ஆனால் அவர்களது அத்துணை முயற்சிகளும் தோல்வியுற்றன.
ஆன்மீக வாழ்க்கை :
கி.பி. 1585ம் ஆண்டு, நவம்பர் மாதம், அலாய்சியஸ், தமது சொத்து சுகம் மற்றும் சமூகத்தில் தமக்குள்ள அனைத்து பதவிகள் மற்றும் உரிமைகளை விட்டு விடுவதாக அறிவித்தார். அதனை பேரரசர் உறுதி செய்தார். ரோம் பயணித்த அவர், தமது மகத்தான பிறப்பின் காரணமாக திருத்தந்தை “ஐந்தாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus V) அவர்களை காணும் சந்தர்ப்பம் கிட்டியது. கி.பி. 1585ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் நாளன்று, இயேசு சபையின் புகுநிலை (Novitate) துறவியாக இணைந்தார்.
அலாய்சியஸின் உடல்நிலை அதிக பிரச்சனைகளை தந்துகொண்டேயிருந்தது. அவருக்கு ஏற்கனவேயிருந்த சிறுநீரக பிரச்சினையுடன் தோல் வியாதி, நாள்பட்ட தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற நோய்களும் சேர்ந்துகொண்டன. கி.பி. 1590ம் ஆண்டின் இறுதியில் அவர் “திருத்தூதர் கேபிரியலி’ன்” (Archangel Gabriel) திருக்காட்சியைக் கண்டதாகவும், அவர் அலாய்சியஸிடம், “நீ இன்னும் ஒரு வருடமே உயிருடன் இருப்பாய்” என்று சொன்னதாகவும் கூறப்படுகின்றது.
பின்னர் குரு மாணவராக படிக்கும்போதே, கி.பி. 1591ம் ஆண்டு, ரோம் நகரில் பிளேக் நோய் பரவியது. இயேசு சபையினர் விரைந்து ஒரு மருத்துவமனையை உருவாக்கினர். நோயாளிகளையும், நோயால் மரித்துக்கொண்டிருப்பவர்களையும் தெருக்களிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கி வந்தார். நோயாளிகளை கழுவி சுத்தப்படுத்தி மருந்து கொடுத்து சேவை செய்தார். நோயாளிகளுக்கு சேவை செய்து, தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டார். அச்சூழலில் கொடிய பிளேக் நோயால் தாக்கப்பட்டு தமது 23ம் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் இறந்தார். இளம் வயதிலேயே ஏராளமான புண்ணியங்களை செய்து வான்வீட்டிற்கு தயார் நிலையில் தன்னை ஆக்கிக்கொண்டார்.
இயேசு சபையில் புனிதராகவும், மறைவல்லுநராகவும் வாழ்ந்த புனிதர் இராபர்ட் பெல்லார்மின்’தான் (Robert Bellarmine) இவரின் ஆன்மீக குருவாக இருந்தார். இவர் ஒருமுறை அலாய்சியஸிடம், ஓர் ஆன்மா உத்தரிக்கும் வேதனை அடையாமலேயே நேராக பேரின்பம் பெறமுடியும் என்று கூறினார். இதை கேட்ட அலாய்சியஸ் பரவசமடைந்தார். அந்நேரத்தில் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு பின்னர் தான் இறக்க போவதாக உணர்ந்தாராம். அவ்வாறே மரணப் படுக்கையிலிருந்த அலாய்சியஸ், தமது கைகளிலிருந்த சிலுவையை இமைக்காமல் பார்த்திருந்தார். இயேசுவின் பெயரை உச்சரிக்க முயற்சித்தபடியே தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.
அலாய்சியஸ் தனது 23 ஆண்டுகால வாழ்வில் ஒருமுறை கூட சாவான பாவத்தில் விழவில்லை என்று அவரின் ஆன்மீக குரு கூறியுள்ளார்.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top