ஒரு பயணம் உங்கள் கண்களைக் கட்டிப்போட்டுவிடும் என்றால் நம்புவீர்களா? ஒரு பயணம் உங்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடும் என்றால் நம்புவீர்களா? ஒரு பயணம் உங்களை குழந்தையாக மாற்றி குதூகலிக்கச் செய்யும் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். மல்ஷெஜ் மலைப்பாதையில் பயணித்தால் இதெல்லாம் நடக்கும். அப்படியொரு அற்புதம் அந்த இடம்!
ஒரு மலைப்பாதையே சுற்றுலாத்தலமாக உள்ளது இங்கு மட்டும்தான். மல்ஷெஜ் மலைத்தொடரின் பசுமை பாதை முழுவதும் நிறைந்திருக்கும். அதைப் பார்க்கவே கண்கள் போதாது. ஆனாலும் அந்த அழகை மேலும் பிரமிப்பாக மாற்றுகிறது ஒவ்வொரு
திருப்பத்திலும் மலைமீது இருந்து கொட்டும் அருவியின் அழகும், நீரின் சலசலப்பும், இருண்ட குகைகளும், பசுமை பள்ளத்தாக்குகளும். மெய்மறக்க வைக்கிறது. இதுபோக ஐந்தரை அடி உயரம்கொண்ட ஃபிளெமிங்கோ பறவைகள் ஆங்காங்கே தென்படுவது மேலும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.
ஃபிளெமிங்கோ பறவைகள்
மலையின் உயரத்தில் இருக்கும் மல்ஷேஜ், மற்ற ஹில்ஸ்டேஷன்கள் போல் புகழ் பெறவில்லை. ஆனாலும் இந்த மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவேயில்லை. இங்கு பயணிப்பவர்கள் கட்டுச்சோறுக் கட்டிக்கொண்டுதான் பயணிக்க வேண்டும். ஏனென்றால், இங்கு ஹோட்டல்கள் இல்லை. அதனால் கட்டுச்சோறுதான் பசியைப் போக்கும்.
மல்ஷெஜ் மலைத்தொடரில் பயணிக்கும்போது மறக்காமல் எடுத்துப்போகவேண்டிய சில பொருட்கள் இருக்கின்றன. இவைகள் இருந்தால்தான் உங்கள் பயணம் இன்னும் இனிதாகும். பைனாகுலர், கேமரா கட்டாயம் இருக்கவேண்டும். கூடவே எக்ஸ்ட்ரா மெமரிகார்டும், ஃபுல் பேட்டரி சார்ஜும் இருக்கட்டும். கேமராவில் படமாக்க அவ்வளவு இடங்கள் ங்கிருக்கின்றன.
சொந்தக் காரில் நீங்களே செல்ஃப் டிரைவ் செய்து போவதைவிட வாடகைக் காரில் ஜம்மென்று அமர்ந்து போவதுதான் இங்கு நல்லது. சாலையில் கவனம் வைத்து காரை ஓட்டும்போது பல இயற்கை அற்புதங்கள் உங்கள் கண்களில் படாமலே போய்விடும். இந்த பிரமாண்ட அழகாய் ரசிக்க நீங்கள் கார் ஓட்டக்கூடாது. அமர்ந்து ரசித்து வரவேண்டும்.
காரின் கண்ணாடிகளை ஏற்றிவிடுங்கள். பல இடங்களில் அருவிக்குள் புகுந்துதான் கார் போகவேண்டியிருக்கும். சாலை ஓரங்கள் முழுவதும் அருவிகள் இருப்பதால் பல அருவிகளில் ஆசைதீர குளிக்கலாம். அதுவும் ஒரு பரவசம்தான்.
அருவிக் குளியல் அதிகமான பசியை தூண்டிவிட கையோடு கொண்டு வந்த கட்டுச்சோற்றை சுவைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே அலாதிதான்.
மலையின் உயரே இருக்கும் மல்ஷெஜ்ஜில் தங்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. மஹாராஷ்டிரா சுற்றுலாத் துறை இங்கு வருபவர்கள் தங்குவதற்காக 'ஃபிளெமிங்கோ ரிசார்ட்' என்ற ஒன்றை நடத்தி வருகிறது. முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டு போனால் இங்கு தங்கலாம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.1,100-ல் இருந்து தொடங்குகிறது. (போன்: 022-22845678, 22852182)
மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் புனே மாவட்டத்தில் மல்ஷெஜ் காட் உள்ளது. இங்கிருந்து 40 கிமீ தொலைவில் ஷிவ்னெரி கோட்டை உள்ளது. இதுதான் மராட்டிய மாவீரன் சிவாஜி பிறந்த இடம். அதனையும் பார்க்க மறவாதீர்கள்.
வாழ்வில் மறக்க முடியாத அற்புதமான அனுபத்தை இந்த பயணம் தரும்.
நன்றி : கூட்டாஞ்சோறு பிளாக்கர்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON