Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மாடி தோட்டம் அமைக்கும் முறை வீடியோ உடன்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உங்க வீட்டுல மொட்டை மாடி இருந்தா , துணி , வடாம் காயப்போடுறதுக்கு... பழைய தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைக்கறதுக்கு... அதிகபட்சமா , ச...

உங்க வீட்டுல மொட்டை மாடி இருந்தா, துணி, வடாம் காயப்போடுறதுக்கு... பழைய தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைக்கறதுக்கு... அதிகபட்சமா, செல்போன் டவர் கட்ட... இப்படித்தான் பயன்படுத்துவீங்க. ஆனா, இருக்கற இடத்துல கத்திரிக்காயோ...
முளைக்கீரையோ நம்ம கையால பயிர் பண்ணி சாப்பிட்டா, தேவையில்லா விருந்தாளியான நோயெல்லாம் ஏங்க நம்மகிட்ட வரப்போகுது''

அடுக்கு மாடி குடியிருப்பு, பரபரப்பு வாழ்க்கை, ஹாரன் சத்தம், தூசு, குப்பை.
இப்படி வாழ நிர்பந்திக்கப்பட்ட நமக்கு, ஆராவாரம் இல்லாத ஓர் இடத்தில் வீடு கட்டி, சுற்றிலும் பச்சை பசேல் என தோட்டம் அமைத்து வாழ வேண்டும் என்ற கனவு இருக்கிறது. காணி நிலம் வேண்டும்... என்ற பாரதியின் பாடலையும் அடிக்கடி முணுமுணுப்போம். ஆனால், இது வெறும் கனவாகவே முடிந்துவிடும். தோட்டத்துடன் கூடிய தனி வீடு சாத்தியமில்லை என்ற நிஜம் முகத்தில் அறையும். ‘‘கவலை வேண்டாம். இந்த கனவை அடுக்குமாடி குடியிருப்பிலும் நிறைவேற்ற முடியும்...’’


விரிவான வீடியோ விளக்கம்
‘‘நாம் தரையில் தோட்டம் அமைப்பது போல் மொட்டை மாடியில் அமைக்க முடியாது. காரணம் கட்டிடத்தின் மேல் தோட்டம் அமைக்கிறோம். எனவே அதிக பளுவை ஏற்றக் கூடாது. ஒரு செடிக்கு குறைந்த பட்சம் இரண்டு கிலோ எடை மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மண் விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. சாதாரண மண், அதிக எடை கொண்டது. எனவே கோகோ பீட் என்று சொல்லக்கூடிய தேங்காய்நாரில் தயாரிக்கப்படும் ஒரு வகையான மண்ணை கொண்டு செடிகளை பயிர் செய்வதே கட்டிடத்துக்கு பாதுகாப்பானது. இதன் எடையும் குறைவு. தண்ணீரையும் நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ளும். இதனுடன், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரத்தையும், இயற்கையான பூச்சி கொல்லி மருத்துகளையும் பயன்படுத்த வேண்டும்.

இன்னொரு விஷயம். செடிகளை வாங்கும்போது பிளாஸ்டிக் கவர்களில் போட்டுத்தான் தருவார்கள். அந்த கவருடன் அப்படியே வளர்க்கக் கூடாது. மாடியின் தரைப் பகுதியை அது சேதப்படுத்தி விடும். தொட்டிதான் என்றுமே பெஸ்ட். செடிகளுக்கு தண்ணீர் விடும் போது அது தொட்டிக்கு கீழேகொஞ்சம் தங்கும். அப்படி தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் தரையில் விரிசல் ஏற்படும்.

எனவே தொட்டிக்கு கீழே ஒரு டிரே போன்ற அமைப்பை வைத்து அதற்கு மேல், செடிகளை வைக்க வேண்டும். தொட்டிக்கும் தளத்துக்கும் இடையே காற்று சுழற்சி இருப்பது முக்கியம். இப்படி செய்ய முடியவில்லை என்றால் வாரம் ஒருமுறை தொட்டியை நகர்த்தி கீழ்ப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்...’’ என்று சொல்லும் உஷா, இயற்கை உரம் மற்றும் இயற்கையான பூச்சி கொல்லி மருந்தை, தானேதயாரிக்கிறார்.

‘‘உரம் தயாரிப்பது ஈசிதான். ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில், ஆங்காங்கே ஓட்டை போட்டு வைக்க வேண்டும். அதில் காய்ந்த இலைகள், காய்கறி கழிவுகள் - அதாவது காய்கறி தோல்கள், புளித்த தயிர் ஆகியவற்றை ஒன்று மாற்றி ஒன்றாக, அடுத்தடுத்த லேயர் ஆக போட்டு வைக்க வேண்டும். காய்கறிகள் மட்கும்போது, அதில் இருந்த தண்ணீர் வெளியேறும். அதற்கு மரத்தூள், காகிதம் போன்றவற்றை போட்டு வைத்தால், அவை நீரை உறிஞ்சு கொள்ளும். இல்லை என்றாலும் பக்கெட்டின் அடியில் சிறிய துவாரமிட்டு அங்கு ஒரு சின்ன கிண்ணம் வைக்கலாம். அதில் சேரும் தண்ணீரையும் செடிக்கு பயன்படுத்தலாம்.

இந்த பக்கெட் நிரம்பி அது உரமாக மாற இரண்டு முதல் மூன்று மாதங்களாகும். இதனை அதிக வெயிலோ, மழையோ இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். இல்லை என்றால் அழுகிய வாசனை வரும். தரமான உரத்தில் இனிப்பு வாசனை வரும். இந்த முறையில் வீட்டிலேயே இயற்கை உரத்தை தயாரிக்க முடியும். இதை செடிகளுக்கு பயன்படுத்தும் போது நன்கு சலித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வேப்பிலை சிறந்த பூச்சி கொல்லி மருந்து. கடல் பாசியும், மீன் உரமும் கடைகளில் கிடைக்கும். இதனை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

அதேபோல் பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாயை ஒன்றாக அரைத்து ஒருநாள் முழுக்க அப்படியே வைக்கவேண்டும். அதன் பிறகு வடிகட்டி ஒரு மில்லிலிட்டருக்கு 5 மில்லி லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். ஆல்பிட் மற்றும் மீலிபக் பூச்சிகளுக்கு புகையிலை சிறந்த மருந்து. புகையிலையை சிறிது எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்கவிடவும். ஒன்றரை லிட்டராக குறைந்தவுடன் அதை ஆற வைத்து, அரைலிட்டர் தண்ணீர் சேர்த்து தெளித்தால் எந்த பூச்சிகளும் செடிகளை அண்டாது...’’ என்று சொல்லும் உஷா, செடிகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் கூட எளிதானதுதான் என்கிறார்.

‘‘முதலில் ஒரு பையில் தேவையான கோகோபிட் மண்ணை நிரப்பி அதில் நாம் பயிர் செய்ய விரும்பும் காய்கறிகளின் விதைகளை விதைக்க வேண்டும். பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும். இது தேங்காய் நார் கொண்டு தயாரிக்கப்படும் மண் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதே போல் பூச்சிச் கொல்லி மருந்தையும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது அவசியம். மண்ணோடு உரமும் கலந்த பயிர் செய்வதால், செடிக்கு தேவையான ஊட்டச் சத்து கிடைக்கும். தொட்டியில் பயிர் செய்யும் எல்லா செடிகளுக்கும் உரம் அளிப்பது அவசியம்.

செடியின் தன்மைக்கு ஏற்ப வளரும் காலம் மாறுபடும். கீரை 20 முதல் 25 நாட்களில் நன்றாக வளர்ந்துவிடும். அதை பயிர் செய்து, அடுத்த விளைச்சல் போடலாம். தக்காளி, கத்தரிக்காய் ஆகியவை வளரவே மூன்று மாதங்களாகும். அதன் பிறகு மூன்று மாத காலம் விளைச்சல் இருக்கும். வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட் எல்லாம் 45 நாட்களில் விளைச்சல் தரும். ஆனால், சென்னையை பொறுத்தவரை தக்காளி, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகளை விளைவிக்க முடியாது. கீரை, வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற காய்களே உகந்தது. வருடம் முழுதும் விளையும் காய் வெண்டைக்காய். தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை மே மாதம் பயிர் செய்தால் ஜூலையில் விளைச்சலைக் காணலாம்.

செடிகளை மொட்டை மாடியில் பயிர் செய்யும்போது நெட் கூரை அமைப்பது நல்லது. காரணம் அதிக வெயில் காரணமாக செடிகள் வாடிப் போகும் வாய்ப்புண்டு. பாகற்காய், அவரைக்காய் போன்றவற்றுக்கு பந்தல் அமைக்கலாம். எல்லாவற்றையும் விட அந்தந்த ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காய்கறிகளை வளர்ப்பதே நல்லது. மழைக்காலம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே செடி வளர்ந்துவிட்டால், மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இன்னொரு விஷயம். மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்க நினைத்தால், எல்லா காய்களையும் ஒரேடியாக போட்டு பயிர் செய்ய வேண்டாம். முதலில் கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சின்ன தொட்டியில் வைத்து பயிர் செய்யலாம். இவை எல்லா காலத்திலும் விளையும். அடுத்து வெண்டைக்காய். பிறகு தக்காளி, கத்தரிக்காய் என ஒன்வொன்றாக பயிர் செய்வதே நல்லது. அடுக்குமாடியில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு பால்கனியிலேயே தக்காளி, பச்சை மிளகாய், கீரை வகைகளை பயிர் செய்யலாம். அல்லது குடியிருப்பில் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து பெரிய அளவில் பயிர் செய்யலாம்...
23 Aug 2017

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...