Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: காபி உருவான வரலாறு / History of coffee
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
குடும்பப் பெண்கள் எவரும் காபி கடைகளுக்கு வரமாட்டார்கள். அங்கே பரத்தையர்கள் மட்டுமே வருவார்கள் ’ என்ற சூழ்நிலை நிலவியதால் பல காபி ஹவுஸ்களி...
குடும்பப் பெண்கள் எவரும் காபி கடைகளுக்கு வரமாட்டார்கள். அங்கே பரத்தையர்கள் மட்டுமே வருவார்கள்என்ற சூழ்நிலை நிலவியதால் பல காபி ஹவுஸ்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 'ஆண்கள் நேரம் போவது தெரியாமல் காபி குடித்துக்கொண்டு, வேசிகளுடன் அரட்டை அடித்துப் பொழுதைப் போக்குகிறார்கள். இதனால், இரவு தாமதமாக வீடு திரும்பும் ஆண்களின் செக்ஸ் ஆசை குறைந்துவிட்டதுஎன மனைவிகள் போர்கொடி தூக்கினார்கள்.

காபி கடைகளுக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். காபி குடிப்பதால் ஆண்மை பறிபோகிறது என வழக்கு மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிவிசாரணை நடைபெற்றது. இன்னொரு பக்கம், ஜெர்மனியில் அறிமுகமான காபி கடைகளில் அதிகம் பெண்கள் கூடுகிறார்கள் என்பதால், ஆண்களுக்கு இடம் கிடைக்காமல் போனது. காபி கடைகள் காதலர்களின் மையமாக உருவானது. ஆரம்பக் காலங்களில் காபி விற்பனையை அதிகப்படுத்த வேண்டி அதை மருந்துப்பொருள் என விற்பனை செய்ய ஆரம்பித்தனர். சுவையூட்டும் பானமாக மட்டுமின்றி, நரம்புகளுக்குப் புத்துணர்வு தரும் மருந்து எனவும் விற்பனை செய்யப்பட்டது. ஆகவே, காபி மருந்துகடைகளில் வைத்து விற்கப்பட்டது.
 
                                        காபி கடை
17-ம் நூற்றாண்டில் டச்சு வணிகர்கள் மூலம் காபி ஜப்பானுக்கு அறிமுகமானது. அங்கே காபி பெரிய வரவேற்பு பெறவில்லை. 1888-ல்தான் டோக்கியோவில் முதன்முறையாக ஐரோப்பிய காபி கடை ஒன்று திறக்கப்பட்டது. அதற்கு முறையான வரவேற்பு இல்லாமல் போனதால், நான்கு வருடங்களில் மூடப்பட்டது. ஆனால், 1930-களுக்குப் பிறகு ஜப்பானில் மீண்டும் காபி மோகம் தலைதூக்கியது. 30 ஆயிரம் காபி கடைகள் நாடு முழுவதும் உருவாகின. மரபாக தேநீர் அருந்துகிற நாடாக இருந்தபோதும், இன்று ஜப்பான் உலகில் அதிகம் காபி குடிக்கும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.

காபி தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஒரு மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டார்கள். கரிபீயத் தீவுகளில் காபி விளைவிக்க அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போலவே காபி தோட்டங்களிலும் அடிமை முறை பரவலாக இருந்தது. இன்றும் சிக்மகளூரில் உள்ள காபி தோட்டங்களில், பழங்குடி மக்கள் கட்டாய உழைப்பு செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.

1615-ல் காபி ஐரோப்பாவுக்கு அறிமுகமானபோது, அது உடலையும் மனத்தையும் கெடுக்கும் பானம் என, அதை தடை செய்யும்படியாக போப் ஆண்டவரிடம் கத்தோலிக்கப் பாதிரிகள் முறையிட்டார்கள். ஆனால் அவர் காபியை தடை செய்ய மறுத்துவிட்டார்.

சீனாவுக்கு ஜெசுவிட் பாதிரியார்கள் மூலம் காபி 1800-களில் அறிமுகமானது. ஆரம்ப நாட்களில் சீனர்கள் எவரும் காபி கடைகள் வைப்பதற்கு முன்வரவில்லை என்பதால், இந்தக் கடைகளை மேற்கத்திய வணிகர்களே நடத்தினார்கள். சீன காபி ஐரோப்பிய காபிகளைப் போலின்றி வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்டு புதிய நறுமணத்துடன் புகழ்பெறத் தொடங்கிய பிறகே, சீனர்கள் காபி கடைகளைத் தொடங்கினார்கள். இன்று உலகெங்கும் சீன காபி கடைகள் புகழ்பெற்று விளங்குகின்றன.

எத்தியோப்பியாவில் காபி குடிப்பது என்பது ஒரு சடங்கு. வீட்டுக்கு யாராவது விருந்தினர் வந்தால், அவர்களுக்கு என விசேஷமாக காபி தயாரிப்பார்கள். இதற்காக, காபி கொட்டைகள் வறுத்து அரைக்கப்பட்டு சூடாக காபி தயாரிக்கப்படும். இந்த காபி தயாரிக்க ஒரு மணி நேரமாகும். அப்படித் தயாரான காபியை உடனே குடித்துவிடக் கூடாது. விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குடித்து முடிக்க ஒன்றிரண்டு மணி நேரமாகும். குடிக்கக் குடிக்க காபியை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். இதனால், ஒரு வீட்டுக்கு காபி குடிக்கப் போய்வருவதாக இருந்தால், நான்கு மணி நேரம் தேவைப்படும். அந்த அளவுக்கு காபி குடிப்பது எத்தியோப்பியாவில் பண்பாடாக மாறியிருக்கிறது.

உடனடியாகக் குடிப்பதற்கு ஏற்றார்போல இன்ஸ்டன்ட் காபி பவுடர் தயாரிப்பது 1771-ல் பிரிட்டனில் அறிமுகமானது. 1853-ல் அமெரிக்காவில் கேக் வடிவில் காபி பவுடர் தயாரிக்கப்பட்டது. நியூசிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஸ்ட்ராங் என்பவர் உடனடி காபித் தூளை சந்தையில் அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் காபி விளைச்சலில் கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முதன்மையாக உள்ளன. இன்று இந்தியாவில் 25 ஆயிரம் காபி விளைவிப்போர் இருக்கிறார்கள். இவர்களில் 98 சதவிகிதம் பேர் சிறிய உற்பத்தியாளர்கள். 10 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் காபி விளைவிப்பவர்கள். இந்தியாவில் 3,46,995 ஹெக்டேர் பரப்பில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
காபி விற்பனையை ஒழுங்குமுறை செய்வதற்காக இந்திய காபி வாரியம் உருவாக்கப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் காபி உற்பத்தி நடைபெறுகிறது. இது போலவே காபி உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கம் மூலம் இந்தியா முழுவதும் காபி கடைகள் திறக்கப்பட்டன.
 

இந்தியன் காபி ஹவுஸ் எனப்படும் இந்தச் சங்கிலித்தொடர் காபி கடைகள் 1957-ல் அறிமுகமாகின. இந்தியன் காபி ஹவுஸ் கடை புதுடெல்லியில் அக்டோபர் 27, 1957-ல் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரி, திருச்சூர், லக்னோ, நாக்பூர் மும்பை, கொல்கத்தா, பூனே, சென்னை என இந்தியா முழுவதும் காபி கடைகள் திறக்கப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றன. இன்று கேரளாவில் மட்டும் 52 இந்தியன் காபி ஹவுஸ்கள் செயல்படுகின்றன.

யுத்த காலத்தில் காபியின் விலை உயர்ந்த காரணத்தால், சிக்கரி கலந்து குடிக்கும் பழக்கம் உருவானது. சிக்கரி எனப்படும் தாவரம் பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஒடிசா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதன் வேரில் இருந்தே சிக்கரி பொடி தயாரிக்கிறார்கள். சிக்கரியில் காஃபீன் கிடையாது. அதை காபியுடன் கலந்தால், வாசனை தூக்கி நிற்கும். அதனால் சிக்கரி கலந்த காபியை பலரும் விரும்புகின்றனர்.

நீராவி மூலம் காபி தயாரிக்கும் எக்ஸ்பிரஸோ இயந்திரம் காபியைப் பிரபலப்படுத்தியது. எக்ஸ்பிரஸோ இயந்திரம் டூரின் நகரத்தைச் சேர்ந்த ஆஞ்சலோ மோரியோன்டோவால் 1884-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இயந்திரத்தை சற்று மாற்றி, நவீனமாக வடிவமைப்பு செய்தவர் லூயி பெஸிரா. இவர் மிலனை சேர்ந்தவர். இவரது தயாரிப்பை பேவோனி நிறுவனம் விலைக்கு வாங்கிச் சந்தையில் அறிமுகப்படுத்தியது.
ஃபில்டர் காபி தயாரிக்கும் மெஷின் 1908-ல் அறிமுகமானது. ஜெர்மனியைச் சேர்ந்த மெடில்டா என்ற பெண்மணி ஃபில்டர் காபி தயாரித்தார். இந்த ஃபில்டர் மெஷினை மெடில்டா குடும்பத்தினரே சந்தைப்படுத்தினார்கள்.

1833-ல் தானியங்கி காபி இயந்திரத்தை டாக்டர் எர்னெஸ்ட் தயாரித்தார். இன்று காபி கடைகளில் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிரஸோ மெஷின்களை உருவாக்கியவர் அக்கிலஸ் ககியா.

இன்று பெரும்பான்மை சாலையோரக் கடைகளில் பேப்பர் கப்களில் காபி தருகிறார்கள். பேப்பர் கப்களில் காபி குடிப்பது தவறானது. காரணம், மெழுகு பூசப்பட்ட கப்பில் சூடான காபி நிரப்பப்படும்போது, சூட்டில் மெழுகு உருகி காபியுடன் கலந்துவிடுகிறது. அதைக் குடித்தால் வயிற்றுவலி உருவாக வாய்ப்பு அதிகம்.
காபி தயாரிக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி ஒரு பக்கமும், ஊடகங்களில் தரப்படும் விளம்பரங்கள் மறுபுறமுமாக, காபியை முக்கிய விற்பனைப் பொருளாக்கியுள்ளன.

காபி கடைகளில் விற்பனை செய்வதற்கு என்றே விசேஷ கேக்குகள், ரொட்டிகள் உருவாகின. காபி கடைகளில் படிப்பதற்கென, காபி டேபிள் புக்ஸ் எனும் அழகிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டன. காபி குடிப்பது நம்பிக்கையின், புத்துணர்வின் அடையாளமாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. அது ஒரு மாயையே. இன்றைய காபி மோகத்தின் பின்னால் வணிக நிறுவனங்களின் 50 ஆண்டு இடைவிடாத விளம்பரங்கள் காரணிகளாக உள்ளன.

இன்றைக்கு எது நல்ல காபி என்பதைவிட, அது எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் காபி என்பதை நோக்கி கவனம் திருப்பப்பட்டிருக்கிறது. அதுதான் வணிகத்தின் தந்திரம்.

'காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?
கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

இந்தத் தலைமுறைக்கு, பாரதிதாசனையும் தெரியாது, சுக்கு காபியும் பிடிக்காது. பிராண்டட் காபி ஷாப் ஒன்றில், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அதில் 86 சதவிகிதம் இளைஞர்களே வாடிக்கையாளர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

எதிர்காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் சம்பளம் ஒரு காபியின் விலையாக இருக்கும் என்கிறார்கள். காலம் போகிற போக்கைப் பார்த்தால், அது நடந்துவிடும் என்றே தோன்றுகிறது.



15 Sep 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...