அரசர் காலத்தின் உன்னத அடையாளங்களாக, நினைவுகளாக, கலாச்சார
சின்னங்களாக, கட்டிடக்கலை அற்புதங்களாக இன்று நம்மிடையே
அரண்மனைகள் மிஞ்சியுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு காலகட்டங்களில்,
பல்வேறு மன்னர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர். அவ்வாறாக விதவிதமான பாரம்பரியங்களும்,
கட்டிட மரபுகளும் இவ்வகை அரண்மனைகளில் பதியப்பட்டிருக்கின்றன. அந்த
வகையில் இந்திய கட்டிடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்கூறும் மனதை
கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள் பற்றி காண்போம்.
ஆகா கான் அரண்மனை, புனே புனே மாவட்டத்தில் அமைந்துள்ள ஆகா கான் அரண்மனை,
முகமது ஷா மூன்றாம் ஆகா கான் என்ற மன்னரால் கட்டப்பட்டது. ஆங்கிலேய
ஆட்சியின்போது பல சுதந்திர போராட்ட வீர்ர்களையும் புரட்சியாளர்களையும் இங்குதான்
சிறை வைத்திருந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்திஜி 1942-ல் நடத்தியபோது அவரும் கஸ்தூரிபா காந்தியும் இங்கு சிறை
வைக்கப்பட்டிருந்தனர்.
சௌமொஹல்லா பேலஸ், ஹைதராபாத் ஹைதராபாத் நிஜாம் அரசர்களின் அரண்மனையான
சௌமொஹல்லா பேலஸ், ஈரான் நாட்டிலுள்ள ஷா மன்னரது அரண்மனை
போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு அரண்மனைகள் என்ற பொருளை குறிக்கும் ‘சஹார்‘ மற்றும் ‘மஹாலத்'
எனும் பர்ஷிய வார்த்தைகளிலிருந்து பெயர் பெற்றிருக்கிறது.
அக்காலத்தில் இந்த அரண்மனை மாளிகையில் நிஜாம் குடும்பத்தினரது பல கொண்டாட்டங்களும்
முடிசூட்டு விழாக்களும் நடைபெற்றுள்ளன.
லால்கர் அரண்மனை, பிகானேர் பிகானேர் நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள லால்கர் அரண்மனை 1902-ஆம்
ஆண்டில் கங்கா சிங் எனும் மன்னரால் சிவப்புக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது.
சிவப்புக்கல்லால் ஆன சரிகைச்சித்திர பின்னல் வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும்
சல்லடைச்சாளரங்கள் இந்த அரண்மனையின் முக்கிய கவர்ச்சி அம்சமாகும். அதேபோல
வெளிநோக்கி நீண்டு காட்சியளிக்கும் அலங்கார பலகணிகள் அவற்றின் கலையம்ச
வேலைப்பாடுகள் மூலம் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன.
ஃபலக்னுமா பேலஸ், ஹைதராபாத் ஹைதராபாத்தின் அடையாளங்களில் ஒன்றாக
திகழும் சார்மினாரிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஃபலக்னுமா
பேலஸ் அமைந்துள்ளது. ஒரு தேளின் உருவம் போன்று இந்த அரண்மனை
வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷமான அம்சமாகும். தேளின் இரண்டு முன்புற
கொடுக்குகளை சித்தரிக்கும்படியாக அரண்மனையின் வெளிப்புற நீட்சிகள் வடக்கு நோக்கி
அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல தேளின் உடல்பகுதியாக அரண்மனையின் பிரதான
உட்கட்டமைப்புகள் மற்றும் சமையல் கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
செட்டிநாடு அரண்மனை இந்தியாவின் ஏழு
அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில்
அமைந்துள்ளது. டாக்டர்.அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார்.
கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள்,
தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும்
ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் அரண்மனை குஜராத்தின்
வதோதரா நகரில் அமைந்துள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை 1890-ஆம் கட்டப்பட்டது. அந்த நாட்களிலேயே எலிவேட்டர் போன்ற நவீன வசதிகளை
கொண்டதாக இந்த அரண்மனை இருந்தது. இதன் தர்பார் ஹாலில் உள்ள பெல்லிஸியின் வெண்கல,
மார்பிள் மற்றும் களிமண் சிற்ப சேகரிப்புகளும், வில்லியம் கோல்ட்ரிங்கினால் வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் காண்பவரை
மகிழ்விக்க காத்துக் கொண்டுள்ள காட்சிகளாகும்.
சிட்டி பேலஸ், ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில்
அமைந்துள்ள இந்த சிட்டி பேலஸ் அரண்மனை ஒரு பிரபலமான பாரம்பரியச் சின்னமாகும்.
முபாரக் மஹால் என்றழைக்கப்படும் வரவேற்பு மண்டபம் இந்த அரண்மனையின் முகப்பில்
அமைந்துள்ளது. தற்சமயம் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மஹாராஜா 2-ஆம் சவாய் மான் சிங்'கிற்காக
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராஜ அணிகலன்கள், பனாரஸ் பட்டு
புடவைகள் மற்றும் பஷ்மினா சால்வைகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதோடு மஹாராணி அரண்மனை எனும் மாளிகையில் வரலாற்றுகால ராஜபுதன
ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு தந்தப்பிடிகளுடன் கூடிய
போர்வாட்கள், சங்கிலி கவச ஆடைகள், போர்த்துப்பாக்கிகள்,
கைத்துப்பாக்கிகள், பீரங்கிகள், விஷப்பூச்சு கொண்ட கத்திகள் மற்றும் வெடிமருந்துப்பைகள் போன்ற பிரமிக்க
வைக்கும் சேகரிப்புகளை பார்க்கலாம்.
அமர் மஹால், ஜம்மு ஜம்முவில் அமைந்துள்ள அமர் மஹால், பிரஞ்சு கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டதால், பிரஞ்சு
நாட்டுப்புற கட்டிடக் கலை பாணியை ஒத்திருக்கிறது. இந்த அரண்மனை தற்போது ஒரு
அருங்காட்சியமாக மாற்றப்பட்டு புத்தகங்கள், சிற்பங்கள்,
ஓவியங்கள், மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவை
பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் பிரதான ஈர்ப்பு 'பஹாரி'
ஓவியங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆட்சியாளர்களின்
ஓவியங்களை கொண்டு அலங்கரிக்கப்பெற்ற ‘தர்பார் ஹால்'.
120 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்ட மகாராஜா ஹரி சிங்கின் அரியணையை
இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே காணலாம். மேலும் அருங்காட்சியகம் உள்ளே அமைந்துள்ள
20,000 புத்தகங்கள் இருப்பு கொண்ட ஒரு நூலகத்தை நீங்கள்
பார்க்கலாம்.
பெங்களூரு அரண்மனை, பெங்களூர் 1862-ஆம் ஆண்டு
இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன், ரெவரெண்ட் காரட் என்பவரால் இது கட்ட
ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது அப்போதைய ராஜாவான உடையார் வம்சத்தை சேர்ந்த சாமராஜ
உடையாரால் 1884-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. 45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க 82 வருடங்கள் ஆயின.
பெர்ன்ஹில்ஸ் பேலஸ் 1844-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெர்ன்ஹில்ஸ் பேலஸ் அந்தக்
காலங்களில் மைசூர் மகாராஜாவின் கோடைக் கால வசிப்பிடமாக இருந்து வந்தது. ஊட்டியில்
அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது பச்சை புல்வெளிகள், அடர்ந்த
காடுகள், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகாக
காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
நால்கு நாடு அரமணே கொடகு மன்னரான
தொட்ட ராஜ வீரேந்திராவால் 1792 - 1794 ம்
ஆண்டுகளில் இந்த நால்கு நாடு அரமணே கட்டப்பட்டுள்ளது. இது தடியண்டமோல் சிகரத்தின்
அடிவாரத்தில் யவகபாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச்சின்னம்
நான்கு கிராமங்களின் அரண்மனை என்ற பொருளில் ‘நால்கு நாடு
அரமணே' என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அமைந்துள்ள 12 தூண்களில் கலையம்ச வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. மேலும் மலை ஏறிகள் இந்த
அரண்மனையில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமாரி
மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில், நாகர்கோவில் நகரிலிருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில்
பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த
அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள
தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கி. பி.1601-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள்
என்பவரால் கட்டப்பட்டது.
மைசூர் அரண்மனை இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும்
ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து மைசூர் அரண்மனை
உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளை கொண்டு சாம்பல் நிற சலவைக் கற்களால்
கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள்
காணப்படுகின்றன. இந்த அரண்மனையின் சுவர்களை பிரபல இந்திய ஓவியர்களான சித்தலிங்க
சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்றோரின்
ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அதோடு இங்கு மரத்தால் ஆன ஒரு யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இப்படி
கலைப்பொக்கிஷமாக திகழும் மைசூர் அரண்மனையில் பொதுவாக எல்லா நாட்களிலும்
வெளிநாட்டவர் கூட்டம் காணப்பட்டாலும், தசரா திருவிழாவின்போது
வெளிநாட்டவர் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
திருமலை நாயக்கர் அரண்மனை மதுரையின்
முக்கிய அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹால் கி.பி. 1636-ஆம் ஆண்டில், மதுரையை ஆண்ட
நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் இந்தோ சராசனிக் பாணியில்
கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனையில் 58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
தரியா தௌலத் பாக், ஸ்ரீரங்கப்பட்டணா ஹைதர் அலியால் துவங்கப்பட்ட இதன்
கட்டமைப்பு அவர் மகன் திப்பு சுல்தானால் கட்டி முடிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள இந்த அரண்மனை திப்பு சுல்தானின் கோடைக்கால அரன்மணையாக
பிரசித்தமாக அறியப்படுகிறது. வண்ண ஓவியங்கள், வார்ப்பு
ஓவியங்கள், கோட்டோவியங்கள் போன்ற பலவிதமான ஓவிய வடிவங்கள்
மற்றும் திப்பு சுல்தான் பயன்படுத்திய அற்புதமான துணிவகைகள் போன்றவற்றை இந்த
அரண்மனையின் முதல் தளத்தில் பயணிகள் பார்க்கலாம். தரைத்தளத்தில் ஆங்கிலேயருக்கு
எதிரான போர் சம்பவங்கள் சுவர் ஓவியமாக தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
தஞ்சாவூர் அரண்மனை தஞ்சாவூர்
அரண்மனையானது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்களின்
வீழ்ச்சிக்கு பிறகு இந்த அரண்மனை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இந்த அரண்மனை வளாகத்துக்குள் தற்போது ராஜா சரபோஜி மெமோரியல், ராயல் பேலஸ் அருங்காட்சியகம், தர்பார்
ஹால், சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை காணப்படுகின்றன.
லலிதா மஹால், மைசூர் மைசூரின் சாமுண்டி மலையின் மீது அமைந்துள்ள
லலிதா மஹால், நவீன பாணியையும், ஆங்கிலேய
மெனார் பாணியையும், இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும்
கலந்து கட்டப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்ட இந்த
அரண்மனையின் அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப, விருந்தினர்களை
பாரம்பரிய பாணியில் உபசரித்து சேவைகளை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஹோட்டலாக
மாற்றப்பட்ட போதிலும் பழைய அரண்மனை தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
தமுக்கம் அரண்மனை 1670-ல் கட்டப்பட்ட தமுக்கம் அரண்மனை நாயக்க வம்சத்தை
சேர்ந்த ராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. தமுக்கம்
என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் என்று பொருள். இந்த அரண்மனை 1959-ல் அருங்காட்சியகமாக மற்றப்பட்டு தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம்
என்ற பெயரில் அறியப்படுகிறது.
ஜெய் விலாஸ் மஹால், குவாலியர் ஜெய் விலாஸ் அரண்மனையானது சிந்திய
வம்சத்தினரின் இருப்பிடமாகத் இருந்து வந்தது. இப்போதும் அவர்களது இருப்பிடமாகத்
திகழ்ந்து வரும் இவ்வரண்மனையின் ஒரு பகுதி தற்போது அருங்காட்சியகமாக
மாற்றப்பட்டுள்ளது. இங்கு சிந்தியாக்களின் பல அபூர்வ பொருட்களும், ஆவணங்களும், ஔரங்கசீப் மற்றும் ஷாஜஹான் பயன்படுத்திய
வாட்கள் போன்ற அரிய பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி மற்றும்
ஃப்ரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய பொருட்கள், கலைப்படைப்புகள்
மற்றும் கலை நுணுக்கம் பொருந்திய பாத்திரங்கள் ஆகியவையும் இங்கு பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பல டன் எடை கொண்ட
இரண்டு மிகப்பிரம்மாண்டமான பெல்ஜிய சர விளக்குகள் காண்போர் எவரையும்
வியப்பிலாழ்த்தும்.
சொக்கநாத நாயக்கர் அரண்மனை மதுரை
நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது
ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை
திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு தற்போது திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
ஜகன்மோகன் அரண்மனை, மைசூர் மைசூரில் உள்ள ஜகன்மோகன் அரண்மனையில், நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் திருமணத்தின் போது அமைக்கப்பட்ட திருமண
விதானத்தை தற்போதும் பார்க்க முடிகிறது. தர்பார் ஹால் என்றும் அறியப்படும் இந்த
விதானத்தில்தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்த நாள் விழாக்களை விமரிசையாக
கொண்டாடுவார் என்று சொல்லப்படுகிறது.
அமர்சிங்க் அரண்மனை, ஜெய்சல்மேர் ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 7கி.மீ தூரத்தில், அமர் சாகர் ஏரியின் கரைப்பகுதியில்
ராஜகம்பீரத் தோற்றத்துடன் அமர்சிங்க் அரண்மனை காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த ஏரியைச்சுற்றிலும் பாறையில் செதுக்கப்பட்ட பல மிருக உருவங்களின் சிலைகள்
அமைக்கப்பட்டுள்ளன. இவை ராஜகுடும்பத்தினரை பாதுகாக்கும் சக்திகளாக
நம்பப்பட்டிருக்கிறது. மேலும் ஐந்தடுக்குகளைக் கொண்டுள்ள அமர்சிங்க் அரண்மனையில்
அற்புதமான சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளதை பயணிகள் காணலாம். அதோடு இந்த
வளாகத்தில் பல தடாகங்கள், சுவர்கள் மற்றும் ஒரு சிவன் கோயில்
ஆகியவை அமைந்துள்ளன.
சத்ரபதி ஷாஹு அரண்மனை, கோலாப்பூர் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில்
அமைந்துள்ள சத்ரபதி ஷாஹு அரண்மனை, தற்போது ஒரு
அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் வழுவழுப்பான கருங்கற்களில்
கோலாப்பூர் அரசர்களின் வாழ்க்கை மற்றும் ஆட்சிமுறை குறித்த வரலாறு
பதிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணாடிகளில் பொறிக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஷாஹு வம்ச
மஹாராஜாக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கஜனேர் அரண்மனை, பிகானேர் பிகானேருக்கு அருகிலுள்ள கஜனேர் எனும்
இடத்தில் ஒரு காட்டின் நடுவே உள்ள ஏரிக்கரையில் இந்த கஜனேர் அரண்மனை அமைந்துள்ளது.
பிக்கானேர் அரசர்களின் வேட்டை மற்றும் பொழுதுபோக்கு மாளிகையாக இந்த அரண்மனை
பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள், பலகணிகள்,
சரிகை வேலைப்பாட்டு மறைப்புகள் ஆகியவை நுணுக்கமான கலையம்சங்களுடன்
காட்சியளிக்கின்றன.இந்த அரண்மனைக்கு வெளியே சுற்றுலாப்பயணிகள் இம்பீரியல் மணல்
வாத்து எனும் புகலிடப்பறவையை பார்த்து ரசிக்கலாம். மேலும் இப்பகுதியில் கலைமான்கள்,
கருப்பு மான்கள், நில்கை மான்கள், சிறு மான்கள், நீல எருதுகள் மற்றும் புள்ளிமான்கள்
ஆகியவற்றையும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கலாம்.
ஆல்பெர்ட் ஹால், ஜெய்ப்பூர் ஆல்பெர்ட் சவாய் ராம் சிங் மஹாராஜாவால் 1886-ஆம் ஆண்டு 4 லட்ச ரூபாய் மதிப்பீடு கொண்ட பஞ்ச
நிவாரணத் திட்டங்களின் ஒரு அங்கமாக ஆல்பெர்ட் ஹால் கட்டப்பட்டது. இது
ஜெய்ப்பூரிலுள்ள அழகான பூங்காத்தோட்டங்களில் ஒன்றான ராம் நிவாஸ் பாக் எனப்படும்
தோட்டத்தினுள் அமைந்துள்ளது. தற்சமயம் இந்த மாளிகையிலுள்ள அருங்காட்சியகத்தில்
உலோகச்சிலைகள், ஓவியங்கள், தந்தங்கள்,
தரைவிரிப்புகள் மற்றும் வண்ணமயமான ஸ்படிகங்கள் போன்ற அற்புதமான
சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகிலேயே ஒரு
விலங்குக்காட்சியகம் மற்றும் ரவீந்த்ர ரங் மஞ்ச் எனப்படும் நாடக சபா மன்றம் ஆகியன
அமைந்துள்ளன.
உஜ்ஜயந்தா அரண்மனை, அகர்தலா திரிபுரா தலைநகரமான அகர்தலாவில் அமைந்துள்ள
உஜ்ஜயந்தா அரண்மனை, தற்போது மாநில சட்டப்பேரவையாக இயங்கி
வருகிறது. இதற்கு உஜ்ஜயந்தா அரண்மனை எனும் பெயர், நோபல்
விருது பெற்ற இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூரால் வழங்கப்பட்டது.
ஹவா மஹால், ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் நகரின் பிரபலமான
நினைவுச்சின்னமாக திகழும் இந்த ஹவா மஹால் ஒரு கவிஞராகவும் விளங்கிய சவாய் பிரதாப்
சிங்மஹாராஜாவால் 1799-ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. லால்
சந்த் உஸ்தா எனப்படும் கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்ட இந்த மாளிகை 950 ஜன்னல்களைக்கொண்டுள்ளது. இந்த சல்லடைத்துவார ஜன்னல்கள் வீதிகளில்
நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அரண்மனைப் பெண்டிர் பார்த்து
ரசிப்பதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை.
கூச் பிஹார் அரண்மனை மேற்கு
வங்கத்தின் கூச் பிஹார் நகரத்தில் அமைந்திருக்கும் கூச் பிஹார் அரண்மனை, தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு நகரத்தின்
பாரம்பரிய வரலாற்றை எடுத்துக்கூறும் சின்னமாக திகழ்ந்து வருகிறது.
ஜக்மந்திர் பேலஸ், கோட்டா ஜக்மந்திர் பேலஸ் எழில் நிறைந்த செயற்கை
ஏரியான கிஷோர் சாஹர் ஏரியின் நடுவில் அமைந்துள்ளது. சிவப்பு மணற்பாறைக்கற்களால்
கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை கம்பீரமான தோற்றத்தைக்கொண்டுள்ளது. அதோடு கிஷோர்
சாஹர் ஏரியில் படகுச்சவாரி செய்யும்போது ஜக்மந்திர் அரண்மனையின் நிழல் ஏரியில்
விழுவது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
பாஞ்ச் மகால், ஃபதேபூர் சிக்ரி அழகிய தனித்துவம் வாய்ந்த
நீர்த்தொட்டியான அனூப் தலாவிற்கு அருகில் ஐந்து மாடிகளுடன் பரந்து விரிந்த பாஞ்ச்
மகால் ஓய்வு அரண்மனையாக அக்பரால் கட்டப்பட்டது. பொழுதுபோக்கவும் ,ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அக்பர் இந்த
அரண்மனையை பயன்படுத்தினார். மேலும் அக்பரின் ராணிகளும், இளவரசிகளும்
வலம்வரும் வண்ணம் பிரத்யேகமாக இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆம்பேர் அரண்மனை, ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே
ஆம்பேர் எனும் ஸ்தலம் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. இந்த
பழம்பெரும் நகரில் மூத்தா எனும் ஏரிக்கரையின் மீது ஆம்பேர் அரண்மனை அமைந்துள்ளது.
ஆம்பேர் கோட்டையின் ஒரு அங்கமாக இருக்கும் ஆம்பேர் அரண்மனையைத் தவிர மண்டபங்கள்,
சபைக்கூடங்கள், கோயில்கள் மற்றும் நந்தவனங்கள்
ஆகியவை கோட்டையினுள் அமையப்பெற்றுள்ளன.
ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை, உதய்பூர் ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை உதய்பூரின் அழகிய
ஏரியான பிச்சோலா ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. தற்சமயம் ஒரு பாரம்பரிய
விடுதியாக மாற்றப்பட்டுள்ள ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை, மேவார்
அரசரான மஹாராணா ஃபதேஹ் சிங் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
ஜல் மஹால், ஜெய்ப்பூர் ஜல் மஹால் எனும் இந்த அழகிய அரண்மனை
ஜெய்ப்பூரில் ஒரு சிறிய ஏரியின் நடுவே ஒஆவியம் போல காட்சியளித்துக்கொண்டிருகிறது.
இந்த அரண்மனை ஜெய்ப்பூர் மன்னர்கள் வேட்டைக்கு செல்லும்போது தங்கும் வசிப்பிடமாக
பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜக் மந்திர், உதய்பூர் ஏரித்தோட்ட அரண்மனை என்று பிரபலமாக
அழைக்கப்படும் ஜக் மந்திர் அரண்மனை பிச்சோலா ஏரியிலுள்ள நான்கு தீவுகளில் ஒன்றில்
அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில் ஒரு பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தோட்டத்தில் பயணிகள் பலவிதமான போகய்வில்லா பூக்கள், மல்லிகை
மலர்கள், ரோஜாப்பூக்கள், காட்டரளி
மரங்கள் மற்றும் பனை மரங்கள் போன்றவற்றை காணலாம்.
ஃபூல் மஹால் அரண்மனை, கிஷன்கர் கிஷன்கரின் நகர மையத்தில் இருக்கும் ஃபூல்
மஹால் அரண்மனை தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக போட்டிக் ஹோட்டலாக
மாற்றப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் அறைகள் எழில் ஓவியங்களாலும், பழமையான அரச மற்றும் பிரிட்டிஷ் தளவாடங்களை கொண்டு
அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதமானது. இந்த ஹோட்டலில் ராஜஸ்தானிய இசை,
நடனம் போன்ற ராஜஸ்தானிய கலை வடிவங்களை பயணிகள் அனுபவித்து
லயிக்கலாம். அதோடு இளமை பொலிவோடு இருக்க விரும்பும் பயணிகளுக்கென்று இங்கு தினசரி
யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
லேக் பேலஸ், உதய்பூர் லேக் பேலஸ் பிச்சோலா ஏரியில் உள்ள ஜக்
நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீரமான மாளிகை ஆகும். இந்த அரண்மனையிலுள்ள அறைகள்
இளஞ்சிவப்பு ரத்தினக்கற்கள், வண்ணந்தீட்டப்பட்ட கண்ணாடிகள்,
விதான வளைவு அமைப்புகள் மற்றும் பசுமையான தாமரை இலைகள் போன்றவற்றால்
அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது தற்சமயம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக
மாற்றமடைந்துள்ளது.
உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையானது அதை உருவாக்கிய
மஹாராஜா உமைத் சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய அரண்மனை சித்தார்
மலையின்மீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.
தற்சமயம் இந்த அரண்மனையின் ஒரு பகுதி பாரம்பரிய விடுதியாகவும் மற்றொரு பகுதி அருங்காட்சியகமாகவும்
மாற்றப்பட்டுள்ளது.
சிட்டி பேலஸ், உதய்பூர் உதய்பூரிலுள்ள சிட்டி பேலஸ் ராஜஸ்தான்
மாநிலத்திலேயே மிகப்பெரிய அரண்மனையாக கருதப்படுகிறது. அதோடு இது ஒரு மலைக்குன்றின்
உச்சியின் கட்டப்பட்டுள்ளதால் இங்கிருந்து மேலிருந்து கீழாக மொத்த உதய்பூர்
நகரத்தையும் பார்க்க முடிகிறது. இந்த சிட்டி பேலஸ் அரண்மனை வளாகம் 11 அரண்மனைகளை தன்னுள் கொண்டுள்ளது.
கௌடியர் அரண்மனை கேரளத் தலைநகர்
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கௌடியர் அரண்மனை 1915-இல் கட்டப்பட்டதாகும். 150 அறைகளுடன் பிரம்மாண்டமாக
கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஷக்தன் தம்புரான் அரண்மனை திரிசூர்
நகரத்தை உருவாக்கிய அப்பன் தம்புரான் வாழ்ந்த அரண்மனையாக ஷக்தன் தம்புரான் அரண்மனை
புகழோடு அறியப்படுகிறது. கொச்சி ராஜவம்சத்துக்கு சொந்தமாக இருந்த இந்த அரண்மனையை 1795-ஆம் ஆண்டில் ஷக்தன் தம்புரான் கேரள-டச்சு பாணியில்
புதுப்பித்துள்ளார். 2005-ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது ஒரு
அருங்காட்சியகம் போன்று மாற்றப்பட்டுள்ளது. இங்கு தம்புரான் காலத்திய பல
நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திப்பு சுல்தான் போன்ற பிரபல
வரலாற்று ஆளுமைகள் இந்த அரண்மனைக்கு விஜயம் செய்ததற்கான ஆதாரங்களும் இங்கு
காணப்படுகின்றன.
ஹில் பேலஸ் 1865-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹில் பேலஸ், கொச்சிக்கு அருகிலுள்ள திருப்புணித்துறா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன்
வளாகத்தில் மான் பண்ணை, தொல்லியல் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா என மொத்தம் 49 கட்டிடங்கள் உள்ளன.
கேரள மாநில தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த வளாகம் அதன் பாரம்பரிய அழகு
கெடாமல், மெருகுடன் அருங்காட்சியகமாக பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இந்த அரண்மனையில் 'சந்திரமுகி' படத்தின் ஒரிஜினலான 'மணிச்சித்திரத்தாழ்' திரைப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
கனகக்குண்ணு அரண்மனை கேரளத் தலைநகர்
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கனகக்குண்ணு அரண்மனை திருவிதாங்கூர் மன்னர்களால்
கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தற்போது திருவனந்தபுரத்தின் முக்கியமான பாரம்பரிய
நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் பிரத்யேக மையமாக பயன்படுத்தப்படுகிறது. இதை ஒட்டியே
நேப்பியர் மியூசியம் எனும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
பொல்கட்டி அரண்மனை கொச்சிக்கு
அருகிலுள்ள பொல்கட்டி தீவில் அமைந்துள்ள பொல்கட்டி அரண்மனை 1744-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த அரண்மனை தொடக்கத்தில் மலபார் டச்சு கமாண்டரின் இருப்பிடமாக இருந்துள்ளது.
பின்னர் 1909-ஆம் ஆண்டில் டச்சு வணிகர்கள் இம்மாளிகையை
ஆங்கிலேயருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு
அரசுடமையாக்கப்பட்ட இந்த அரண்மனையில் தற்போது ஒரு பாரம்பரிய சொகுசு ஹோட்டலும்,
ரிசார்ட்டும் செயல்பட்டு வருகின்றன.
கிருஷ்ணாபுரம் அரண்மனை ஆலப்புழா
மாவட்டத்தில் அரபிக் கடலோரம் அழகாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் காயம்குளம்
எனும் நகரத்தில் கிருஷ்ணாபுரம் அரண்மனை அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் அன்றைய திருவிதாங்கூர் மஹாராஜாவான
அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை
மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனையாக
கிருஷ்ணாபுரம் அரண்மனையை உருவாக்கியுள்ளார். ஒரு மலையின் உச்சியில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள்
மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
குதிர மாளிகா கேரளத் தலைநகர்
திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற கோயிலான பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் குதிர
மாளிகா அமைந்துள்ளது. புத்தென் மாளிகை என்ற பெயராலும் அறியப்படும் இம்மாளிகையின்
கூரைப்பகுதிக்குக் கீழே குதிரை சிற்பங்கள் அமைந்திருப்பதால் குதிர மாளிகா (குதிரை
மாளிகை) என்று அழைக்கப்படுகிறது. 1840-களில் கட்டப்பட்ட இந்த மாளிகை 150 ஆண்டுகளாக
பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் 1991-ல் அருங்காட்சியகமாக
மாற்றப்பட்டு பிறகுதான் திறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த
அருங்காட்சியகத்தில் திருவிதாங்கூர் அரசுக்கு சொந்தமான வாள் முதலிய படைக்கலன்கள்,
சிம்மாசனங்கள், ஓவியங்கள், மர வேலைப்பாடுள்ள பொருட்கள், மற்ற நாடுகளில் இருந்து
அரசுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஹால்சியோன் கேஸ்டில் திருவிதாங்கூர்
மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில்
தம்புரான் என்பவரால் 1932ம-ஆம் ஹால்சியோன்
கேஸ்டில் கட்டப்பட்டுள்ளது. இது திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கான பிரத்யேக
ஓய்வு மாளிகையாக இருந்துவந்தபோதும் 1964-ஆம் ஆண்டில் கேரள
அரசாங்கத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. கோவளம் அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும்
இந்த மாளிகை ‘கோவளம் இன்டர்நேஷனல் பீச் ரிசார்ட்' வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இந்த பாரம்பரிய விடுதியை பிரபலமான ‘லீலா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்' நிறுவனம் ஒரு 5 நட்சத்திர விடுதியாக நடத்தி வருகிறது. (புகைப்படம் 1957-ல் எடுக்கப்பட்டது)
பந்தளம் அரண்மனை பந்தளம் அரண்மனை
அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில்
ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின்
வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். பந்தளம்
அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார்.
கிளிமண்ணூர் அரண்மனை இந்தியாவின்
தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான ராஜா ரவி வர்மா பிறந்த இடமாக கிளிமண்ணூர் அரண்மனை
பிரபலமான அறியப்படுகிறது. இந்த அரண்மனையில் ஓவியம் வரைவதற்காகவும், அவற்றை சேகரித்து வைப்பதற்காகவும் சில கட்டிடங்களை
ராஜா ரவி வர்மா உருவாக்கியுள்ளார்.
ஆறன்முள கொட்டாரம் கேரளாவில் உள்ள
பாரம்பரிய கிராமமான ஆறன்முள கிராமத்தில் அமைந்துள்ள ஆறன்முள கொட்டாரம் அல்லது
ஆறன்முள அரண்மனை 150 ஆண்டுகளுக்கு
முன்னர் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை ஆறன்முள வடக்கே கொட்டாரம் என்ற
பெயரிலும் அறியப்படுகிறது. சபரிமலை புனித யாத்திரைகளுள் ஒன்றான "திருவாபரண
கோச யாத்திரை" இந்த அரண்மனையில் தாமதித்துச் செல்வது வழக்கம்.
மட்டாஞ்சேரி அரண்மனை 1555-ஆம் ஆண்டில் கொச்சியை ஆண்ட வீர கேரள வர்மா
என்பவருக்காக இந்த அரண்மனை போர்த்துகீசியர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 1663-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் இதில் பல மாறுதல்களும் புதுப்பிப்பு
வேலைகளும் செய்யப்பட்டு அதன் காரணமாக ‘டச்சு அரண்மனை'
என்ற பெயராலும் இது அழைக்கப்பட்டு வந்தது. கொச்சி கோட்டை
பகுதியிலேயே அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது கேரள பாணி கலை மற்றும்
பாரம்பரியத்துக்கான ஒரு அருங்காட்சியகத்தை போன்றே பயன்படுத்தப்படுகிறது. இதன்
சுவர்களில் காணப்படும் சுவரோவியங்களில் ஹிந்து புராணக்காட்சிகள் மற்றும்
கடவுளர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON