பூமிக்கு அடியில் 150 அடி ஆழத்தில் நடைபயணம் சென்றால் எப்படி இருக்கும்? இதப் பத்தி யோசிக்கும்போதே ரொம்ப கிக்கா இருக்குல்ல? அப்ப நெஜமாவே அந்த இடத்துக்கு போனா கிலிய கிளப்பும் இல்ல?! ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த திகிலூட்டும் பேலம் குகைகள். நீங்கள் இங்கு முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் தனியாக எங்காவது சுற்றித் திரிந்து மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகையில் உங்களை எங்கென்று தேடுவது?!
பேலம் குகைகளை பார்ப்பதற்கு உள்ளூர் மக்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இக்குகைக்குள் நுழைவதற்கு ஒரு சிறு ஓட்டை வழியாக நீங்கள் இறங்க வேண்டும். இங்கு நிலத்துக்கடியில் உள்ள ஆறு, மெதுவான சுண்ணாம்புக் கற்களை ஊடுருவி அறுத்துக் கொண்டு போனதால், இந்தக் குகை உண்டாகியிருக்கிறது. இந்த குகையில் நீங்கள் அதிகம் நடக்க வேண்டியிருப்பதோடு சில இடங்களில் தவழ்ந்தும் போகவும் நேரும். எனவே அதற்கு தகுந்த ஆடைகளும், காலணிகளும் நீங்கள் கொண்டு செல்வது அவசியம்.
வரலாறு பேலம் குகைகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புத்த மற்றும் சமணத் துறவிகள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக இங்கு கிடைக்கப்பெற்ற புத்த நினைவுச் சின்னங்கள் அனந்தபூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்த குகையில் சில புத்த கால மிச்சங்களை கண்டிபிடித்துள்ளது. இந்த ஆதாரங்களை வைக்கும் பார்க்கும்பொழுது கிறிஸ்து பிறப்பதற்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குகைகள் தோன்றியிருக்கவேண்டும் என்று தொல்லியல் துறை கருதுகிறது.
குப்பைக்கூளமாக கிடந்த வரலாற்று சின்னம்!!! பேலம் குகைகளில் 1988-ஆம் ஆண்டு வரை அருகாமை பகுதிகளின் குப்பைகளை கொட்டி வந்ததால் ஒரு குப்பைக்கூளமாகவே இருந்து வந்தது. அதன்பிறகு பேலம் பகுதியில் வசித்த சில செல்வாக்கு வாய்ந்த மக்கள் ஆந்திர அரசை அணுகி குகையை சுற்றுலாத் தலமாக மாற்ற வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து 1999-ஆண்டு ஆந்திர சுற்றுலாத் துறை குகையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதுடன், குகையை சுத்தம் செய்து சுற்றுலாத் ஸ்தலமாக மாற்றுவதற்கு 75 லட்ச ரூபாயை ஒதுக்கியது
ஆலமர மண்டபம் இந்த அறையின் மேற்கூரையிலிருந்து தொங்கும் கசித்துளி படிவுகள் இயற்கையாக அமைந்த தூண்களாகும். அதுமட்டுமல்லாமல் இவை பார்ப்பதற்கு கிளை பரப்பி விழுதுகளுடன் ஆலமரத்தினை போல் தோற்றமளிக்கிறது. எனவே ஆழ மரம் என்ற பொருளில் இதை உள்ளூர் மக்கள் 'ஊடாலமாரி' என்று அழைக்கிறார்கள்.
ஆயிரம் பாம்புகள் படமெடுத்தாடும் இடம்! இந்த அறையில் காணப்படும் கசித்துளி படிவுகள் பார்ப்பதற்கு படமெடுத்தாடும் நாகப்பாம்பின் தோற்றத்தை ஒத்திருக்கிறது. அதோடு மேற்கூரையில் காணப்படும் அமைப்புகள் ஆயிரம் பாம்புகள் படமெடுத்தாடுவதை போல காட்சிதந்து நம்மை மிரள வைத்து விடுபவை!
பாதாள கங்கா பாதாள கங்கா என்பது குகையில் காணப்படும் வற்றாத நீரூற்றை குறிக்கிறது. இந்த நீரூற்று ஒரு குறிப்பிட்ட பூமியின் ஆழத்தில் மறைந்துபோய் 2 கி.மீ தூரத்திலுள்ள பேலம் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் இணைவதாக நம்பப்படுகிறது.
மூச்சு முட்டும் பயணம்! பேலம் குகை 3.5 கி.மீ நீளமுடையது என்றாலும் தற்போது பொதுமக்களுக்காக 2 கி.மீ அளவுக்கே சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கி.மீ நீளமும் நடந்து செல்வது யாரையும் மூச்சு முட்ட செய்து விடும், அந்தளவுக்கு இறுக்கமான ஒரு சூழலே உள்ளே நிலவுகிறது. எனினும் ஆந்திர சுற்றுலாத் துறை காற்று போய்வர, ஆங்காங்கே சில அமைப்புகளை நிறுவியுள்ளதுடன் சில ஒளிக்கீற்றுகளையும் உள்ளே பார்க்க முடிகிறது. அதனால் ஓரளவு சிரமமில்லாமல் பயணம் மேற்கொள்ள முடிகிறது. எனவே இங்கு ஒருவர் வழிகாட்டியின் உதவியோடு பயணத்தைத் தொடர்வதுதான் சிறந்தது. மேலும் பேலம் குகையின் நுழைவாயிலுக்கு அருகே ஒரு கேண்டீன் மற்றும் ஒரு கழிவறை பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது
நன்றி!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.