Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் காமாக்யா ஆலயம் kamakhya temple
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கெளஹாத்தி , அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரம் . இந்நகர் பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது . முற்காலத்தில் இவ்விடம் ‘‘ பாண்ட...
கெளஹாத்தி, அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரம். இந்நகர் பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது. முற்காலத்தில் இவ்விடம் ‘‘பாண்டு’’ (மகாபாரதத்தில் மிகவும் பிரசித்தமான பெயர்) என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் செய்யும் படகுப்பயணம் நம் அன்னையின் அருளைப் போலவே மிகவும் இனிமையானது சுகம் தருவது. பிஹுஎன்ற பண்டிகை வருடத்தில் மும்முறை இங்கு கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள காமாக்யா திருக்கோயில் அம்பிகையின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இத்திருத்தலத்தில் கொலுவீற்றருளும் அம்பிகையின் திருநாமம் காமாக்யாதேவி. ஈசன் உமாநந்தாவாக திருவருட்பாலிக்கிறார். இந்த சக்திபீடம் அஸ்ஸாம் கெளஹாத்திக்கு சமீபத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் நீலாத்ரி என்னும் பர்வதத்தில் அமைந்துள்ளது. இந்த மலை சுமார் 600 அடி உயரம், ஆலயம் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

அதை ஒட்டினாற்போல் ஒரு குகை அமைந்துள்ளது. அந்த குகையில் த்ரிகோணாகாரமாகவும், நீர் நிறைந்ததாகவும், ஒரு சிறிய குளம்போல முப்பத்திரண்டு அங்குல அளவில் இந்த சக்திபீடம் விளங்குகிறது. இந்த பீடத்தில் முக்தியை வேண்டுவோர்க்கு அதை அருள்கிறாள் தேவி. இத்தலம் உருவானதற்கு ஒரு புராண சம்பவம் கூறப்படுகிறது. நான்முகன் தான் படைப்புத் தொழில் செய்வதால் அகம்பாவம் கொண்டு அலைய, அதை அழிக்க தேவி தன் கூந்தலில் இருந்து ஒரு அசுரனை சிருஷ்டித்தாள். கேசிகன் எனும் அந்த அசுரனால் நடுநடுங்கிய நான்முகன் தேவியைச் சரணடைய, தான் உண்டாக்கிய அசுரனை தானே சாம்பலாக்கி, அந்த சாம்பலால் ஒரு மலையை உண்டாக்கி, அதில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு நான்முகனிடம் கூற, அப்படியே நீலாத்ரி மலையையும் அங்கே நிறைய துளசிச்செடிகளோடு கூடிய நந்தவனமும் அமைத்தான் நான்முகன் என்று ஒரு புராணம் கூறுகிறது.


இவள் அன்பின் உறைவிடம். கருவறையில் யோனி வடிவமாக ஒரு பாறை உள்ளது. அப்பாறையில் உள்ள தேவியின் யோனிக்கே வழிபாடு நடைபெறுகிறது. மாதம் மூன்று நாட்கள் தேவி வீட்டு விலக்காக இருக்கும் நாட்களில் இப்பீடத்திற்கு பூஜைகள் நடப்பதில்லை. அப்போது அதை ஒரு சிவப்பு பட்டுத்துணி சாத்தி மூடிவிடுகின்றனர். அந்த துணியை பிரசாதமாகப் பெறுவோர் வாழ்வில் பெறற்கரிய பேறு பெற்றவர்கள் என்பது ஐதீகம். தவநிலையில் ஈசன் இருந்தபோது மலர்க்கணையை அவர்மீது எய்து அவர் தவத்தைக் கலைத்தான் மன்மதன். அவனை ஈசன் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார். ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்ப்பித்தாள் பராசக்தி. அதற்கு நன்றிக்கடனாக மன்மதன் இத்தலத்தைக் கட்டியதாக வேறொரு புராணம் இந்த சக்திபீடம் அமைந்ததற்குச் சொல்லப்படுகிறது. சக்தி பீடங்களிலேயே தலையாயதும், முதன்மையானதுமாகிய இந்த தலத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை காமேஸ்வரி, காமரூபிணி, காம, காமாக்யா என்றும் அழைக்கின்றனர். 

இத்திருத்தலத்தில் அன்னைக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது. ஆலயத்தின் உள்ளேயே அழகான திருக்குளம் ஸெளபாக்ய குண்ட் எனும் பெயரில் உள்ளது. ஆலயத்தின் மைய மண்டபத்தின் ஒருபுறம் தாழ்வான குகை போன்ற அமைப்பு உள்ளது. அதில் நுழைந்து பத்து படிகள் கீழிறங்க புனிதமான கருவறையைக் காணலாம். அங்கே முப்பத்திரண்டு அங்குல நீளத்தில் த்ரிகோணமாக அமைந்துள்ள தொட்டி உள்ளது. தொட்டியின் மையத்தில்தான் கல்லால் வடிவமைக்கப்பட்ட யோனி அங்கம் உள்ளது. இவ்வங்கம் வெளியே தெரியாமலிருக்க அந்தத் தொட்டியிலே எப்போதும் நீர் நிரம்பி மறைத்துக் கொண்டிருக்கும். அத்தொட்டியின் அருகிலேயே இந்நீர் சுரக்கிறது என்பது அற்புதமான தகவல். தேவியின் 51 சக்தி பீடங்களுள் இப்பீடம் யோனி பீடமாகத் திகழ்கிறது. யோனி பீடத்திற்குப் பக்கத்திலேயே லக்ஷ்மி, சரஸ்வதி இருவரும் சுயம்பு வடிவில் அருள்கின்றனர்.


இன்றைக்கும் இரவு நேரங்களில் பல தெய்வீக ஒலிகள் அங்கே கேட்பதுண்டு. இந்த காமாக்யா தேவி திருமண வரமருள்வதில் நிகரற்றவளாகக் கருதப்படுகிறாள். இங்கு தேவியின் கெளலமார்க்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது சாக்தர்களுக்கும், ஞானிகளுக்கும் முக்தி அளிக்கவல்லது. அணிமாதி அஷ்ட ஸித்திகளும் இத்தலத்தில் ஸித்திக்கும் என்பது ஐதீகம். இந்த யோனி பீடத்திற்கு வம்சா எனும் பெயரில் உபபீடம் ஒன்றும் உள்ளது. ஸ்ரீவித்யா உபாசகர்கள், மந்த்ரோபதேசம் பெற்றவர்கள், பூரணதீட்சை அடைந்தவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காமாக்யா கோயில் சென்று, மூன்று நாட்கள் தங்கி, மந்திரப் பிரயோகங்களையும் தந்திரப் பிரயோகங்களையும் அவள் சந்நதியில் சமர்ப்பித்தால் ஜென்மம் சாபல்யமடையும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை. தசமகா வித்யைகளுக்கான தேவியர்களின் இருப்பிடம் இம்மலையில் பரவலாக காணப்படுவது அற்புதம்.

காளி, தாரா, சின்னமஸ்தா, பைரவி, பகலா, தூமாவதி ஆகியோருக்கான ஆலயங்களை இம்மலைச் சரிவுகளில் தரிசிக்கலாம். புவனேஸ்வரிக்கான ஆலயம் இக்குன்றின் 212 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலை உச்சியிலிருந்து நாற்புறங்களிலும் இயற்கை எழில் நிரம்பி நிறைந்திருக்கிறது. அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தல மகிமை, பைரவர் மகிமை ஆகிய இந்நான்கும் கொண்ட மகா சக்தி பீடம் காமாக்யா. இப்பீடத்தை உமாநந்தர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். மகாபாரதத்தின் உத்யோக பருவம், துரோண பருவம் மற்றும் காளிகாபுராணம், காமாக்யா தந்த்ரம், திரிபுராரஹஸ்யம், யோகினி தந்த்ரம் போன்ற அரிய நூல்கள் இந்த காமாக்யா பீட நாயகியின் மகிமைகளைப் போற்றுகின்றன.


இங்குதான் அன்னை சத்யபாமா நரகாசுரனை வதம் செய்தாள். காமரூபமாய் மாதவர் காத்திட காமகிரி பீடத்தில் அமர்ந்தவள் இத்தேவி. பெருந்தவம் புரிவோர்க்கு அருள்புரியவென்றே இப்பீடத்தில் ஒய்யாரமாக அழகுடன் காட்சி நல்குபவள். பேதமின்றி பாவியர்க்கும் அருள்புரியும் தரிசனத்திற்கு ஈடு இணையே இல்லை. சோதனைகள் நீக்கி மனமாசுகள் அகற்றி, வேதனை தீர்த்து அன்பர்கள் உய்ய வழிகாட்டு பவள் இந்த சக்திபீட நாயகி. ஆதியந்தமில்லாத ஈசனுடன் பேரழகியாய்க் கலந்து உறைபவள். இவ்வன்னையை மனதில் இருத்தி நிறுத்தி துதிக்க பல சித்திகளைத் தந்தருள்பவள். திருமண வரம் தருவதில் நிகரற்றவள் இந்த அம்பிகை. முக்தியைத் தரும் இந்த சக்தியை பக்தியுடன் வழிபட்டு உய்வோம்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top