கொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது.
கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே
கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என
புதிரான ஒரு பிரதேசமாகவே நமக்குத் தெரிகிறது கொல்லிமலை.
2004-ம் ஆண்டுதான் முதல் முதலில் கொல்லிமலை போனேன். பிறகு தொடர்ந்து
நான்கு ஆண்டுகளாக வருடத்திற்கு ஒரு முறையாவது போய்விட நேர்கிறது. ஐந்தாவது முறையாக
கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை சென்று வந்தேன்.
கொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சேலத்தில்
இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன்
தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற
சிறப்புடைய கொல்லிமலையில் மிளகு, பலா, அன்னாசி, தேன், வாழை, நெல், கொய்யா, பப்பாளி,
பட்டை போன்ற பயிர்கள் பரவலாக எங்கும் செழித்து வளர்ந்து காணக் கிடைக்கிறது. கல்பகாலம்
தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின்
மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய
மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.
கொல்லிமலையின் புகழுக்கு மற்றுமொரு காரணமாக விளங்கும் ‘கொல்லிப்பாவை‘
பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை
தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை
ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால்
மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக
கருதப்படுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை
பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையையும் அதனை
சூழ்ந்திருந்த நிலப்பரப்புகளையும் அரசாண்டு வந்திருக்கிறான்.
சரி, கொல்லிமலைக்கு போன கதையைப் பார்ப்போம். நாமக்கல் தாண்டி
நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் ஏற ஆரம்பித்தது. ஐந்து
நிமிடங்களுக்கொரு கொண்டை ஊசி வளைவு. மொத்தம் 72 கொண்டை ஊசி வளைவுகள். நாமக்கல் மற்றும்
சுற்று வட்டாரப் பகுதி மொத்தமும் பரநது விரிந்து அருமையாக இயற்கை சூழலில் காட்சியளிக்கிறது.
மலையில் வாகனம் பயணிக்கும்போதே நம்மை குளிர் போர்த்தத் தொடங்கி விடுகிறது. கொல்லிமலை
கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வழியில் எங்கும் ஊர்கள் கிடையாது.
மலை அடிவாரத்தில் தொடங்கினால் கொல்லிமலைக்கு 3 கி.மீ. தொலைவில் வரும் சோளக்காடு என்ற
ஊர் வருகிறது. அது சிறிய ஊர் என்றாலும் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடக்கிறது.
சோளக்காட்டினை அடுத்து வரும் வளப்பூர் என்ற பகுதிதான் கொல்லிமலையின்
நடுவாந்திரமான பகுதி என்பதால் இங்கு அரசு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில்
வருபவர்கள் நாமக்கல் அல்லது சேலத்திலிருந்து பயணம் செய்தால் வளப்பூர் வந்து சேரலாம்.
இங்கு தனியார் தங்கும் விடுதிகள் மிகக்குறைவு. நல்லதம்பி ரிசார்ட் மற்றும் பி.ஏ. கெஸ்ட்
ஹவுஸ் என்ற இரண்டு தனியார் விடுதிகள் மட்டுமே உள்ளது. படப்பிடிப்புக்கு வரும் குழுவினர்
இங்குதான் தங்குகிறார்கள். நானும் நண்பர்களும் பி.ஏ. கெஸ்ட் ஹவுசில் தங்கினோம்.
ஆகாய கங்கை அருவி வழி way to Aagaya Gangai water falls கொல்லிமலை Kollimalai
சீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர்
ஆலயம், பஞ்சநதி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசையில் உள்ளது. நம்மிடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே எல்லா இடத்தையும் சுற்றிப்பார்க்க
முடியும். இங்கு வாகன வசதி எதுவும் கிடையாது. கொல்லிப்பாவை கோயில் இருக்கும் இடம் உண்மையிலேயே
அச்சம் தருவதாக இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு
பார்வையாளர் அதிகம்தான். யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றி வரும் சிலரை இங்கு
பார்க்க முடிகிறது. யாரும் பிச்சை கேட்பதில்லை. ஆனால் அறப்பளிஸ்வரர் கோவில் பகுதியில்
அதே சடாமுடி தோற்றத்துடன் பிச்சை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
சீக்குப்பாறை மற்றும் தற்கொலை முனை இரண்டும் அருமையான ‘நோக்கு
முனை‘ மலையின் பெரும்பான்மை பகுதியின் இயற்கை அழகு நம்மை சில்லென்ற காற்றுடன் ஆனந்தப்படுத்துகிறது.
அருகாமையில் உள்ள அரசு மூலிகைப் பண்ணையில் அதிகம் மூலிகைச் செடிகள் இல்லையென்றாலும்
அரிய மூலிகை வகைகள் உள்ளது.
கொல்லிமலையில் என்னை மிகவும் கவர்ந்த இடம் பஞ்சநதி எனப்படும்
அய்யாறு அருவிதான். அறப்பளிஸ்வரர் கோயில் அருகே ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம்‘ என்ற எண்ணத்துடன்
உற்சாகமாக இறங்க… இறங்க… 150 படிகளுக்குள் மூச்சுவாங்கி கால் வலியெடுக்கிறது.
ஒரு படிக்கும்
மற்றொரு படிக்கும் சுமார் 1 ½ அடி உயரம் இருக்கிறது. யாரோ பின்னாலிருந்து தள்ளுவது
போல களைத்துப் போய் மெதுவாக 950 படிகள் கீழே இறங்கிப் போனால் ‘ஹோ‘வென பெரும் சப்தத்துடன்
180 அடி உயரத்திலிருந்து விழுகிறது அருவி. ஆழ்ந்த தனிமை, அதிக கூட்டமில்லாமல் நம் விருப்பம்
போல நேரமெடுத்துக் கொண்டு அருவியில் நனைந்து மகிழலாம். முதுகில் யாரோ அடிப்பது போல
சுளிரென்று அருவி நம் மீது வந்து விழுகிறது. அருவியில் குளித்ததும் இறங்கி வந்த களைப்பெல்லாம்
போய்விடுகிறது. ஆனால் மறுபடி படியேற ஆரம்பிக்கும் போது அதே கஷ்டம். எவ்வளவு பலசாலியாக
இருந்தாலும் கால் வலிக்கவில்லை என்று சொல்லாதவர்களே இல்லை. கஷ்டப்பட்டு படியேறி மேலே
வந்ததும் கொல்லிமலையின் சிறப்பான ‘முடவாட்டு கால்‘ சூப் குடித்ததும் வலி குறைந்தது
போல உணர்வு ஏற்படுகிறது, இரண்டு நாட்களுக்காவது கால் வலி நீடிக்கிறது. ஆனால் உடல் பாரம்
குறைந்து லேசாகிப் போன்றதொரு உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. (இதைத்தான் ‘ஆவி‘ ‘பேய்‘ என்கிறார்களோ...?)
‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும்
ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை
நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே
மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக
கூறப்படுகிறது. அருகில் உள்ள அறப்பளிஸ்வரர் கோயில 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி.
7-ம் நூற்றாண்டிலேயே தேவாரப் பாடல்களில் பாடப்பட்ட பெருமையுடையது. ‘அறைப்பள்ளி‘ ‘அறப்பளி‘
என மருவியுள்ளதாக தெரிகிறது.
கொல்லிமலைக்கு செல்பவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய
குறிப்புகள் (எனக்கு தெரிந்தவரை)
பி.எஸ்.என்.எல். தவிர எந்த அலைபேசியும் இங்கு இங்கு ‘டவர்‘ கிடைக்காது.
பஞ்சநதி அருவிக்கு இறங்கிச் செல்வதற்கு முன்பாக குடிக்க தண்ணீர்,
குளுகோஸ், குளிர்பானம், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது அவசியம். அந்த ஆழ்பள்ளத்தாக்கில்
எதுவுமே கிடைக்காது. அருவிக்கு செல்லும்போது வழியில் நிறைய குகைகள் உள்ளது. அங்கெல்லாம்
போக முயற்சிக்காமல் இருப்பது நலம். தெரியாமல் ஒரு குகைக்குள் போக முயற்சித்து வவ்வால்
வந்து முகத்தில் மோதி பயந்ததுதான் மிச்சம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போகாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால்
மெதுவாக 20 படிகள் இறங்கி சிறிது அமர்ந்து ஓய்வெடுத்தபின் இறங்கலாம்.
ரிசார்ட் இரண்டிலும் உணவு வசதி உள்ளது. வேறெங்கும் சுகாதாரமான
உணவு கிடைக்கவில்லை. அசைவப் பிரியர்கள் கவனத்திற்கு : இங்கு கிடைக்கிற ஆட்டிறைச்சியும்,
நாட்டு கோழி இறைச்சியும் மூலிகை தழைகளை உண்பதால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள்
தங்கும் விடுதியில் கூறினால் உங்களுக்கு வேண்டிய உணவை அவர்கள் சுவையாக தயாரித்து தருகிறார்கள்.
அறை வாடகை 300 முதல் 2000 வரை உள்ளது. ஆறு பேர் தங்கும் விஐபி
குடில்கள், இருவர் மட்டும் தங்கும் தேன்நிலவு குடில்கள் என தேவைக்கேற்ப உள்ளது.
மிளகு விலை குறைவாக உள்ளது. இங்கிருக்கும் அரசு கூட்டுறவு சங்கத்தில்
மிளகு, மலைத்தேன் இரண்டும் தரமானதாக கிடைக்கிறது. பட்டை மரம் எங்கு பார்த்தாலும் இருக்கிறது.
நீங்களே பறித்துக் கொள்ளலாம். கூடுமான வரை சொந்த வாகனம் எடுத்துச் செல்வது, கொல்லிமலையின்
முழு அழகையும், கண்டு ரசிக்க உதவியாக இருக்கும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான குறிப்பு கொல்லிமலையில் மர்ம
பிரதேசங்கள் நிறைய இருக்கிறது. ஏற்கனவே வாழ்ந்த சித்தர்களின் வசிப்பிடங்கள் அவை என
கூறப்படுகிறது. மற்றபடி இங்கு பேய், அமானுஷ்ய நடமாட்டம் என்று எதுவும் இல்லை. (நீங்கள்
உங்களோடு கூட்டிப் போனால்தான் உண்டு)
சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள், பொழுதுபோக்கு எதுவும் இங்கு
கிடையாது. இயற்கை விரும்பிகளுக்கு இனிய, அமைதியான இடம் கொல்லிமலை.
நமது பயணம் தொடரும் ......
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON