Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மாவீரன் "சேகுவேரா" இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு...
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ' சே ' கட...
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.

மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே' கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.


இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சே' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சே' கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது 'சே'தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. 'சே'வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் 'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00... 'சே'வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் 'சே'... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00... 'சே'வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. 'மரியோ ஜேமி' என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.

நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.


''கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.



நன்றி !!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top