Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குளச்சல் சண்டை வெற்றித்தூண் - “விக்டர் பில்லர்- culachal war - victor piller
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஜூலை 31- ந்தேதி... உலக வரலாற்றில் குளச்சல் நகரம் இடம் பிடித்த நாள். குளச்சல் நோக்கி போரிட்டு வந்த டச்சுக்காரர்களை வீழ்த்தி குளச்சல...

ஜூலை 31-ந்தேதி... உலக வரலாற்றில் குளச்சல் நகரம் இடம் பிடித்த நாள். குளச்சல் நோக்கி போரிட்டு வந்த டச்சுக்காரர்களை வீழ்த்தி குளச்சல் நகரம் வரலாற்றில் இடம் பிடித்து 270 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

அந்த வரலாற்று நாள் குறித்த நினைவலைகள் இதோ... குமரி மாவட்டம் கேரளாவோடு இணைந்திருந்த காலம் அது! கேரள மாநிலத்தில் உள்ள கொச்சித் துறைமுகம் போன்று தமிழகத்தில் உள்ள இயற்கை துறைமுகமான குளச்சல் துறைமுகம் முக்கிய வியா
பார ஸ்தலமாகவும் இருந்து வந்தது. இந்தியா அந்நிய ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்தபோது 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி டச்சுப்படையினரை திருவிதாங்கூர் படை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியது இத்துறைமுகத்தில்தான்.

      மன்னர் முன்பு டச்சு தளபதி டிலனாய் சரணடைவது குறித்த ஓவியசிற்பம்          அந்தகாலத்தில் டச்சுப்படையினருக்கு குளச்சல் மீது ஆசை. இதற்காக டச்சு வீரர்கள் திருவிதாங்கூரை குறி வைத்து கடல்மார்க்கமாக குளச்சலில் வந்து இறங்கினர். இதை அறிந்து கொண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா ஒரு படையை குளச்சலுக்கு அனுப்பினார். இதற்குள் டச்சுப்படையினர் தேங்காய் பட்டணம, மிடாலம் ஆகிய சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு இரணியல் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.


திருவிதாங்கூர் குதிரைப் படையினர் டச்சுப்படையினரை எதிர்த்து போர் செய்தனர். குதிரைப்படையை எதிர்த்து போரிட டச்சுப்படையினருக்கு முன் அனுபவமோ இல்லாததால் டச்சுப்படையினரை எளிதில் வெல்ல முடிந்தது. மார்த்தாண்டவர்மா குளச்சல் கடற்கரையில் வரிசையாக மாட்டு வண்டியுடன் பெரிய பனை மரத்தடிகளை ஏற்றி ராட்சத பீரங்கி போல் நிறுத்தி டச்சுப்படையை அசர வைத்து தந்திரமாக பணிய வைத்தார் என்றும் முந்தைய வரலாறுகள் கூறுகின்றன.

மேலும் மீனவர்கள் உதவியுடன் டச்சுப்படையினரை வீழ்த்தியதால் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் துறைமுகத்தில் விக்டர் பில்லர்என்ற வெற்றித்தூணை நிறுவினார் என்றும் கூறப்படுகிறது.

போரில் கைதிகளாக பிடிபட்டவர்களில் திறமையான வீரர்களான டிலனாய், பொனாடி ஆகிய இருவருக்கும் மன்னர் மார்த்தாண்ட வர்மா மன்னிப்பு அளித்து தனது படை தளபதியாக நியமித்தார். பின் அவரது தலைமையில் அதிகமான வெற்றி சரித்திரத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

1771-ல் தக்கலை அருகே உதயகிரியில் டிலனாய் மறைந்தார். அவரது இறுதி விருப்பப்படி மன்னர் உதயகிரியில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்துள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க குளச்சல் நகரம் 1955-ம் ஆண்டு தமிழகத்தின் கலாசார நகரமாக அறிவிக்கப்பட்டது.

இயற்கை துறைமுகம், ஏ.வி. எம்.சானல், பழமையான கோவில்கள், இயற்கை கடற்கரை போன்றவைகளுக்கு மகுடம் வைத்தாற்போல் வரலாற்று சின்னமாக குளச்சல் வெற்றித்தூண் உயர்ந்து நிற்கிறது. மன்னர் மார்த்தாண்டவர்மாவால் நிறுவப்பட்ட இந்த வெற்றித்தூண் சுமார் 15 அடி உயரம் கொண்டது.
   

இந்த தூணின் அடித்தளம் கருங்கல்லால் ஆன அடிப்பகுதி, அதற்கு மேல் ஒரே கல்லில் தூண் பகுதி மற்றும் அதற்கு மேல் உள்ள திருவிதாங்கூர் அரச முத்திரையான சங்கு ஆகியவை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சங்கு முத்திரை தற்போது குளச்சல் நகராட்சி முத்திரையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சரித்திர சிறப்புமிக்க இந்த வெற்றித்தூணுக்கு கடந்த 2 வருடங்களாக ஜூலை 31-ந்தேதி கேரள மாநிலம பாங்கோடு ராணுவ முகாமை சேர்ந்த சென்னை ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினார்கள். இதில் 24 குண்டுகள் முழங்க உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா வெற்றித் தூணுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 270 ஆண்டுகள் மழை, வெயிலாலும், 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமியாலும் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் கம்பீரமாக நிற்கும் போர் வெற்றித்தூணை இந்திய அரசு வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும், அதோடு கடல் சார்ந்த எழில் கொஞ்சும் குளச்சல் பகுதியை சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தென்னகத்தில் பல கலைச் சிறப்புகள் இருந்தும் வரலாற்று சின்னங்களின் வரிசையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க குளச்சல் வெற்றித்தூணையும் இந்த வரிசையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க குளச்சல் போர் நடந்து 270 ஆண்டுகள் ஆகியும் குளச்சலில் ஏராளமான திட்டங்கள் இன்னும் கிடப்பிலேயே உள்ளன.

அவை பின்வருமாறு:-
* குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* குளச்சல் துறைமுக பகுதியில் போர் வெற்றித்தூண் அமைந்துள்ள வளாகத்தில் அப்போதைய கஸ்டம்ஸ் கோர்ட் கட்டிடம் இன்று கேட்பாரற்று பராமரிப்பின்றி பாழாகி இருந்த இடமே தெரியாமல் உள்ளது. இந்த கட்டிடத்தை சீரமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

* பாம்பூரி வாய்க்காலில் ஓடுகின்ற நீரை தடுப்பு அணைகள் கட்டி அந்த நீரை ஏ.வி. எம். சானலில் நீரோட்டம் செய்யது சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் படகு போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.

* ஏ.வி.எம். சானலை தூர்வாரி பொதுமக்கள் குளிக்க வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

* குளச்சலை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளும் இன்னும் கிடப்பிலேயே உள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.


                                                               

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top