Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தமிழீழ போராட்ட தளபதி கேணல் ராதா - Tamil Eala Rada
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
யார் இந்த ராதா ? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்க...

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா 
எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை.

அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.

யாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.

கல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.
 

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?

பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது.

"Scout Attention" என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா.

ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார்.

"படுத்து நிலையெடு" (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த மேலாளரைக் ராதாவைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.

பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.

அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "Down Postion" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது.

தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்" என்று ராதா கூறி முடித்தார்.

ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.

இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.

விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவள்" கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.

கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top