திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய
சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர்
மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள்
பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.
கடலுக்குள் ஆறுகள் சேரும் முன்பாக பல
லகூன்கள் உண்டாகியிருக்கின்றன. லகூன்களின் கரையில் காணப்படும் காடுகள் தான்
மாங்ரோவ் காடுகள் அல்லது அலையாத்திக்காடுகள்.கடல் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி
நிலத்தைக்காப்பதால் காலம் காலமாக நிலவிவரும் தமிழ்ப்பெயர் அலையாத்திக்காடுகள். ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள்
எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம்,
போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள்
எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர்
ஏற்பட்டது. இக்காடுகளுக்கு வெள்ளக்காடு
என்றொரு பெயரும் உண்டு.
வேர்கள் மூலம் சுவாசிக்கும்
தன்மையுடைய அவி, சென்னியா, மெனரனா
எனப்படும் தாவரம் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சதுப்பு நில காடுகளில்தான்
உள்ளன.பிற சதுப்பு நில வகைகள் கண்டல்,தில்லை, சுரப்புன்னை மற்றும் செரியோப்ஸ் டிக்கேன்ட்ரா வகையும் வெற்றிகரமாக
முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புவியியல்
அமைப்பில் முக்கியமான ஈரப் பத நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள்
குறிப்பிடப்படுகின்றன.
ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி
வரையில் அதிக எண்ணிக்கையிலானப் பறவைகள் இந்த பகுதிக்கு வருகின்றன. இப்பறவைகள்
சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின்
வடபகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன.
மேலும் பூநாரை,செங்கால் நாரை, சிறவி, நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகளைக் குறிப்பிடலாம். கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற அழியும் தறுவாயில் உள்ள
நீர்ப்பறவைகள் இப்பகுதியில் நிலையாக வசிக்கின்றன. முத்துப்பேட்டை நில பறவைகளான
பருந்து, சிவப்பு வளைய பச்சைக் கிளிகள் மற்றும் புள்ளி புறா
வகைகள் உள்ளன. முத்துப் பேட்டை சதுப்பு நிலக்காடுகளில் பாலுட்டி வகைகளான காட்டுப்
பூனைகள், குறுகிய மூக்கு உள்ள பூசந்தின்னி வெளவ்வால்கள்
காணப்படுகின்றன. கீப் கார்னர் செல்லி முனை, லகடன் கடல்
முகத்துவாரம் சேத்குடா உப்புத் தேரோட்டம் ஆகியன இங்குள்ள அழகுமிகு பகுதிகள்.
சுனாமி பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியது அலையாத்தி
காடுகள்தான். திருவாரூர் மாவட்டத்தை இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க கூடிய
அரணாகவும் அலையாத்திக் காடுகள் உள்ளன. சாம்புவானோடை படகு துறையில் இருந்து
இருபுறமும் அலையாத்தி மரங்களை கொண்ட நீர்ப் பாதையில் சுமார் 6 கீ.மீ தூரத்தை கடந்தால் கடல் முகத்துவாரத்தைக் காணமுடியும். இப்பாதையில்
ஏராளமான திட்டுகள் குட்டித் தீவுகளாகக் காட்சி அளிக்கின்றன.
சதுப்பு நிலக் காடுகளின் அழகைக் காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கி
இளைப்பாற ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 162 மீட்டர்
நீளத்திற்கு மரத்திலான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற அமைப்பு வேறு
எந்த சதுப்பு நிலக் காடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர
ஓய்விடத்திலிருந்து சதுப்பு நிலக் காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு
கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று ஜாம்புவானோடைப்
பகுதியில் இருந்து தனியார் மீன்பிடி படகுகள் மூலம் அலையாத்திக் காடுகளுக்குச்
செல்ல வேண்டும். இதற்காக படகு கட்டணம் ரூ 600 முதல்
வசூலிக்கப்படுகிறது. பல பேர் கூட்டாக
சேர்ந்து பெரிய படகை வாடகை பேசி எடுத்துக்கொள்ளலாம்.
வழித்தடம் :
சென்னைக்கு தெற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கோடியக்கரைக்கு அருகில்
முத்துப்பேட்டை உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து 70 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது. பஸ் மற்றும் ரயில் வசதி உண்டு.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON