Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: திராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் வாழ்க்கைச் சுருக்கம் (Robert Caldwell)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மொழி என்பது மனிதனுக்கு மனிதன் தொடர்புகொள்வதற்காக உருவான ஒன்று. சைகை செய்தும், படங்களை வரைந்தும் எண்ணங்களை வெளிப்படுத்திய ஆதிகால மனிதன் ...

மொழி என்பது மனிதனுக்கு மனிதன் தொடர்புகொள்வதற்காக உருவான ஒன்று. சைகை செய்தும், படங்களை வரைந்தும் எண்ணங்களை வெளிப்படுத்திய ஆதிகால மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஒலியைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஒலியிலிருந்து பிறந்தன பல மொழிகள். மொழிகள் பல்கி பெருகியதால் அனைவரும் புரிந்துகொள்வதற்கும், தடையின்றி வர்த்தகம் செய்வதற்கும் ஒரு நடுநிலையான மொழி தேவைப்பட்டது. அந்தத் தேவையை ஆங்கிலம் நிறைவு செய்தது. அது அனைத்துலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொழியை வெறும் தொடர்புக்காக மட்டும் பெரும்பாலோர் பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் மொழியின் மீது அதிக பற்றுக் கொண்டு அதனை வழிப்படும் அளவுக்கு செல்கின்றனர். அப்படி வழிபடுவோரும், மொழிச் சேவை செய்வோரும் பொதுவாக தங்களின் தாய்மொழிக்கே அந்த மரியாதையை வழங்குவர். வெகுசிலரே தங்கள் தாய்மொழி அல்லாத வேறு ஒரு மொழிக்காக சேவை செய்யவும், அதன் மேன்மைக்காக பாடுபடவும் முனைவர். அப்படிப்பட்ட மூன்று அறிஞர்களை தமிழ் மொழி வரலாறு பெருமையுடன் சுமந்து நிற்கிறது.  


தமிழைத் தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும் சமயப் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து பின்னர் தமிழின் மீது காதல் கொண்டு அயராமல் மொழித் தொண்டு செய்த அந்த மூவர் வீரமாமுனிவர், ஜி.யு. போப், ராபர்ட் கால்டுவெல். தேம்பாவணி என்ற காப்பியத்தை தமிழுக்குத் தந்ததோடு தமிழ் 'அகராதியின் தந்தை' என்று போற்றப்படுபவர் இத்தாலியில் பிறந்து தமிழகத்தில் தமிழ்ச் சேவை ஆற்றிய வீரமாமுனிவர். உலகப் பொதுமறையான திருக்குறளையும், நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்ததோடு, தன்னுடைய கல்லறையில் தாம் ஒரு 'தமிழ் மாணவன்' என்று குறிக்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்த தமிழறிஞர் ஜி.யு. போப். திராவிடம் எனும் சொல்லை உருவாக்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை திராவிட மொழிகள் என்று கூறி அவற்றுக்கும் சமஸ்கிருதம் உட்பட்ட ஆரிய மொழிகளுக்கும் தொடர்பு கிடையாது என்பதை ஆதாரங்களோடு நிரூபித்தவர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல்.    

ஐரோப்பாவில் பிறந்தும், தமிழராக வாழ்ந்து மறைந்த அந்த அறிஞரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 1814-ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார் ராபர்ட் கால்டுவெல். தன் கல்வி முழுமையையும் அவர் ஸ்காட்லாந்தில் மேற்கொண்டார். கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக் கழகத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது மொழியியல் ஆராய்ச்சியில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு காரணம் அங்கு கிரேக்க மொழியைக் கற்றுத்தந்த ஒரு பேராசிரியர். வேறு பல மொழிகளோடு ஒப்பிட்டு கிரேக்க மொழியின் சிறப்பையும், மேன்மையையும் அவர் விரிவுரைகளில் தெளிவாக விளக்கி கூறுவார். மொழிகளுக்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அழகுபட எடுத்துக்கூறிய அந்த விரிவுரைகள் கால்டுவெல்லை வெகுவாக கவர்ந்தன. பிற்காலத்தில் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தையும், முனைப்பையும் அவருக்குள் ஏற்படுத்தின.  



பல்கலைக் கழகத்தில் சிறப்பு தேர்ச்சிப் பெற்று வெளியான கால்டுவெல்லுக்கு சமயப் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. 1838-ஆம் ஆண்டு தமது 24-ஆவது வயதில் சமயப் பணி புரிவதற்காக தமிழ்நாட்டிற்கு பயணமானார். தமிழகத்தின் தலைநகரமான சென்னை வந்து சேர்ந்தார். அடுத்த 53 ஆண்டுகள் சமயப் பணிகளுக்கு மேலாக தமிழ்ப் பணி ஆற்றப்போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்காது. அவரது தமிழ்ப் பணி பற்றி தெரிந்து கொள்ளும் முன் இன்னொரு முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி அன்னை மேரி என்ற கப்பலில் பயணமானார் கால்டுவெல். நடுக்கடலில் திடீரென்று கடும் சுழல்காற்று வீசியது அதில் அலைமோதத் தொடங்கிய அந்த கப்பலின் மீது புயலில் சிக்கித் தவித்த இன்னொரு பிரெஞ்சு கப்பல் மோதவே கால்டுவெல் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் ஆறு பேரைத் தவிர மற்றவர் கடலில் மூழ்கி மாண்டனர்.  

தெய்வாதீனமாக உயிர் தப்பிய அறுவரில் ஒருவர்தான் கால்டுவெல். தமிழ்மொழி செய்த தவப் பயனால்தான் அவர் உயிர் தப்பினார் என்று பல தமிழறிஞர்கள் பின்னாளில் கூறினார்கள். சமயப்பணிக்காக வந்திருந்ததால் மக்களோடு நெருங்கிப் பழகுவதற்காக தமிழ் மொழியைக் கற்க விரும்பினார் கால்டுவெல். மூன்றே ஆண்டுகளில் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டதோடு வடமொழியையும் கற்று இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றார். அதன்பின்னர் சமயப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டதிலுள்ள இடையன்குடி எனும் சிற்றூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது எந்தவித வசதியும் இல்லாமல் ஒரு சிற்றூராக காட்சியளித்தது இடையன்குடி. அந்த ஊரை வசதிகள் நிறைந்த நல்ல ஊராக மாற்றும் பணி முக்கியம் என்று முடிவெடுத்த கால்டுவெல் அரும்பாடுபட்டு அந்த ஊரை சீர்திருத்தினார். அதோடு அங்கு ஒரு கோவிலையும் எழுப்பினார் அந்தக் கோவில் அவர் நினைவாக இன்றும் இடையன்குடியில் செயல்பட்டு வருகிறது. 
தன்னை அன்போடு ஏற்றுக்கொண்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த மாவட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்தறிந்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகங்களாக விளங்கிய கொற்கை, காயல் ஆகியவைகளைப் பற்றிய தகவல்கள் கால்டுவெல்லை கவர்ந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்கை திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தொலைவில் ஒரு சிற்றூராக இருந்தது. அங்கு சென்று நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சிகள் செய்து பழைய கொற்கைத் துறை தரைமட்டத்திற்கு எட்டு அடிக்குக் கீழே இருந்தது என்றும், அப்போது அதனருகே கடல் இருந்ததென்றும் கண்டறிந்தார். தாமிரபரணி ஆற்று நீரில் கலந்து வந்த மண்ணும், மணலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்து கடலை ஐந்து மைல் தொலைவிற்கு அனுப்பி விட்டது என்று உணர்ந்தார். 

காவிரிப் பூம்பட்டிணத் துறைமுக வழியாக தமிழ்நாட்டின் அரிசி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது வரலாறும் கூறும் உண்மை. நமது அரிசியை கிரேக்க மொழியில் 'அருசா' என்று அழைக்கிறார் என்றும், அந்தச் சொல்லே மருவி ஆங்கிலத்தில் 'Rice' என்றானது என்றும் கால்டுவெல் ஆராய்ந்து சொன்னார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மயிலிறகு தோகை என்று அழைக்கப்பட்டது, ஹிப்ரு மொழியில் கிறிஸ்துவ வேத நூலாகிய பைபிளில் மயிலிறகு துகி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 'தோகை' என்ற சொல்லிலிருந்து மருவியதுதான் 'துகி' என்ற அந்தச் சொல் என்று அவர் விளக்கினார். இவ்வாறு பற்பல ஆராய்ச்சிகள் செய்து பல வரலாற்று உண்மைகளை முதன்முதலாக கண்டு சொன்னார் கால்டுவெல்.  

தென்னிந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துலு ஆகிய ஐந்து மொழிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும், அவற்றுள் ஆகப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆதாரங்களுடன் விளக்கி அவற்றை 'திராவிட மொழிகள்' என்றழைத்தார் கால்டுவெல். கால்டுவெல் தமிழையும், டாக்டர். குந்தார்கர் என்பவர் மலையாளத்தையும், டாக்டர். கிட்டெல் என்பவர் கன்னடத்தையும், அறிஞர் பிரெவ்ன் என்பவர் தெலுங்கையும் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து 'A comparative grammar of the dravidian languages' அதாவது 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதினார் கால்டுவெல். அந்த நூல்தான் ஆரிய மொழியின் இலக்கணம் வேறு திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதை ஆதாரங்களுடன் உலகுக்கு உணர்த்தியது. 


                                                       தமிழ் அறிஞர் கால்டுவெல் வீடு இடையன்குடி

தமிழர்கள்கூட செய்யாத அந்த அறிய பணியை மேலை நாட்டவரான கால்டுவெல் செய்ததை தமிழ் வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். சுருக்கமாக சொன்னால் திராவிட மொழிகளுக்கு புத்துயிர் அளித்தவர் கால்டுவெல். இன்று தென்னிந்திய பல்கலைக் கழகங்களில் திராவிட மொழிகள் பற்றிய துறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் கால்டுவெல்தான். தமிழ்நாட்டில் அவர் வசித்த 53 ஆண்டுகளில் அவர் மூன்றே மூன்று முறைதான் தாம் பிறந்த ஊருக்கு ஓய்வெடுக்க சென்றார். அந்தளவுக்கு அவர் தமிழ்நாட்டையும் தமிழையும் நேசித்தார். ஒரு மேலை நாட்டவரால் மேன்மை அடைந்தது தமிழ் மொழி என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்து காட்டிய கால்டுவெல் கொடைக்கானல் மலையில் இருந்தபோது 1891-ஆம் ஆண்டு தனது 77-ஆவது அகவையில் காலமானார். அவர் சுவாசித்த தமிழும். நேசித்த இடையன்குடியும் இன்றுவரை அவரை மறக்கவில்லை. அவரது நல்லுடல் இடையன்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் கட்டியிருந்த கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 
தமிழுக்கு அணி சேர்த்தவர்கள் பட்டியலில் 'கால்டுவெல்' என்ற மாமனிதருக்கு நிச்சயம் ஒரு முக்கியமான இடம் உண்டு. அவரைப் போன்றவர்கள் போட்ட விதைதான் விருட்சமாக வளர்ந்து தமிழ் மொழிக்கு 'செம்மொழி' தகுதியை பெற்றுத் தந்திருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் அவரது தாய்மொழிகூட இல்லை. அவரது வாழ்க்கை நமக்கு கூறும் உண்மை எளிமையான ஒன்றுதான். நாம் செய்யும் எந்த காரியத்திலும் அவரைப் போன்று முழுமனத்தோடும், ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் ஈடுபட்டால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அந்த உண்மை. 


கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
 நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)
பரதகண்ட புராதனம்


கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்
திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்(A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)

திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)

நன்றி !!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top