உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிறபோதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.
நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.
யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.
எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.
ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.
எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.
படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.
தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.
குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.
குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.
குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.
குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.
என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.
ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.
சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.
இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.
பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.
திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.
நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON