Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிகரங்களின் கிரீடம் 'இடுக்கி' சிறப்பு பயணம்- சுற்றுலா
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கடவுளின் சொந்த தேசம்’ எனப்படும் கேரள மாநிலத்தில் உள்ள கவர்ச்சியான இயற்கை சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றுதான் இந்த இடுக்கி மாவட்டம்.    ...
கடவுளின் சொந்த தேசம்’ எனப்படும் கேரள மாநிலத்தில் உள்ள கவர்ச்சியான இயற்கை சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றுதான் இந்த இடுக்கி மாவட்டம்.


                                                                 
                                                               தொம்மன்குத்து அருவி - மரக்குடில் 

 பசுமைக் கானகத்தை ஆடையாக போர்த்தி நீண்டுயர்ந்து நிற்கும் சிகரங்களை கிரீடமாக சுமந்தபடி இயற்கை அன்னை தரிசனம் தரும் இந்த பிரதேசத்தில்தான் இந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றான ஆனைமுடி சிகரம் வீற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகிலேயே இரண்டாவது பெரிய வில்லணை (வில் போன்ற வளைவுத் தடுப்பை கொண்ட அணை) இடுக்கி மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.


                                                       வில் போன்ற வளைவுத் தடுப்பை கொண்ட அணை

பண்டைய கால சேர சாம்ராஜ்யத்தின் பூமியாகவும், பிற்காலத்தில் ஐரோப்பிய குடியேறிகள் பலர் வந்து வசித்த பிரதேசமாகவும் அறியப்படும் இது வரலாற்றில் தனக்கென்ற இடத்தை பிடித்துள்ளது.
தேக்கு, கருங்காலி, சந்தனமரம், யானைத்தந்தம் மற்றும் மயில் தோகை போன்ற அரிய பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய வணிகக்கேந்திரமாக இடுக்கிப்பகுதி பலகாலம் தொட்டு இன்று வரை திகழ்ந்து வருகிறது.
கற்கால நாகரிகம் இந்த வனப்பகுதியில் செழிப்புடன் விளங்கியிருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. கற்காலத்துவக்கத்தின் மானுட வம்சம் இங்கு வசித்திருக்கக்கூடும் என்று வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.
                                                                          தொம்மன்குத்து அருவி
1947-49ம் ஆண்டுகளில் உடும்பன்சோலா மற்றும் பீர்மேடு என்ற இடங்களுக்கு அருகே கல்திட்டைகள் அல்லது கல்லுகுடைகள் எனப்படும் கற்கால சமாதித்திட்டுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
1972ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் தனி மாவட்டம் எனும் அந்தஸ்தை பெற்ற இடுக்கி பிரதேசம் தற்போது கேரளாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக விளங்குகிறது. இதில் தேவிகுளம், அடிமலி, உடும்பன்சோலா, தேக்கடி, முர்ரிக்கடி, பீர்மேடு மற்றும் தொடுபுழா போன்ற முக்கியமான நகரங்கள் உள்ளடங்கியுள்ளன.
அது மட்டுமல்லாமல் தொடப்புழயாறு, பெரியாறு மற்றும் தலயா போன்ற ஆறுகளும் இடுக்கி மாவட்டத்தில் பாய்கின்றன. 2000 மீட்டர் உயரம் உள்ள ஆனைமுடியை தவிர்த்து மொத்தம் 13 சிகரங்களும் இடுக்கி மலைப்பிரதேசத்தில் வானோங்கி நிற்கின்றன.
இடுக்கியை கேரளாவின் மின்னுற்பத்தி கேந்திரம் என்றே சொல்லலாம். ஏனெனில், மாநிலத்தின் 66 சதவீத நீர்மின்சாரப் பயன்பாடு இடுக்கியிலிருந்தே பெறப்படுகிறது. இடுக்கி வில்லணை, குளமாவு அணை மற்றும் செருதோணி அணை ஆகிய மூன்று முக்கியமான அணைகள் இடுக்கி பகுதியில் அமைந்துள்ளன. சொக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை பின்னணியாக கொண்டு வீற்றிருக்கும் இந்த அணைப்பகுதிகள் அவசியம் தரிசித்து மகிழ வேண்டிய அம்சங்களாகும். இவை தவிர இடுக்கியிலுள்ள முக்கிய மலைவாசஸ்தலமான ராமக்கால்மேடு எனுமிடத்தில் காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.
கேரளாவின் முக்கியமான பாசன நீர்த்தேக்கமான மலங்காரா நீர்த்தேக்கத்தில் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம். நேரமும் மனமும் மட்டும் இருந்தால் போதும், இடுக்கியில் பார்த்து ரசிக்க ஏராளமான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
                                                                                                பீர்மேடு 

இடுக்கியின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்

இடுக்கியில் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக மங்களா தேவி கோயிலை குறிப்பிடலாம். இது கடல் மட்டத்திலிருந்து 133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் வடக்கும்கூர் ராஜாவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சோழ வம்ச கட்டிடக்கலை பாணியில் எழுப்பப்பட்டுள்ள அண்ணாமலையார் கோயிலும் இங்கு தரிசிக்க வேண்டிய ஆலயமாகும்.
மேலும், கரிக்கோட் எனும் இடத்தில் சிதிலமடைந்த ஒரு புராதனக் கோட்டையையும் நின்னார் எனப்படும் மசூதியையும் பார்க்கலாம். வடக்கும்கூர் ராஜா தன் படையிலிருந்த இஸ்லாமிய போர்வீரர்களுக்காக இந்த மசூதியை கட்டியதாக சொல்லப்படுகிறது.
தொடுப்புழா எனும் இடத்தில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழைய தேவாலயமும் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் தேக்கடி பகுதியில் பெரியார் தேசிய காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிமலா சரணாலயத்தில் பல அரிய காட்டுயிர்களும் தாவர வகைகளும் நிரம்பியுள்ளன. இதற்கு அருகிலேயே சின்னார் காட்டுயிர் சரணாலயம், இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம், ஆனைமுடி சோலை தேசியப்பூங்கா, இரவிகுளம் தேசியப்பூங்கா மற்றும் பம்பாடும் சோலை தேசியப்பூங்கா ஆகிய ஏராளமான வனவிலங்கு பூங்காக்கள் அமைந்துள்ளன.
இந்த வனப்பகுதிகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களான நீலகிரி வரையாடு (மலை ஆடு) , நீலகிரி கருப்புப்புறா, கவுர் எருமை, ஊதா தவளை, புலி, ராட்சத சடை அணில், யானை, சாம்பார் மான் மற்றும் நீலக்குறிஞ்சி ஆகியவற்றை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காட்டுயிர் ஆர்வலர்கள் வருகை தருகின்றனர். இவற்றில் ‘வரையாடு’ தமிழ்நாட்டின் அரசு விலங்கு என்பது பலராலும் அறியப்படாத ஒரு தகவலாகும்.
தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் அல்லது சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் பல்வகை பறவைகள் மட்டுமல்லாது அரிய ஊர்வன வகைகள் மற்றும் விலங்குகளையும் பார்க்கலாம்.
இங்கு கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிக்கின்றன.
                                                                      குறிஞ்சிமலா சரணாலயம்
இவற்றில் மலை இருவாட்சி வளைகுடா ஆந்தை போன்றவற்றை உங்களால் பார்க்க முடிந்தால் இயற்கையின் படைப்புகளில் இப்படியுமா என்று அசந்து போவீர்கள். மேலும் இப்படிப்பட்ட அதிசய பறவைகள் நமது மண்ணில் வாழ்கின்றன என்பது ஒரு பெருமைக்குரிய அம்சமும் ஆகும்.
நீங்கள் மலையேற்றத்தில் விருப்பமுள்ள சாகச பயணிகளாக இருப்பின் கல்வாரி மலை,குளமாவு, பல்குலமேடு மற்றும் நெடுங்கண்டம் மலை போன்றவற்றிற்கு பயணம் மேற்கொள்ளலாம்.
இயற்கையை எளிமையாக ரசிக்க விரும்புவோர் ஹில் வியூ பார்க், தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம் மற்று பைனாவு போன்ற எழில் நிறைந்த தோட்டப்பூங்கா ஸ்தலஙள் மற்றும் மலைக்காட்சி தளங்களுக்கு விஜயம் செய்யலாம்.

                                         குளமாவு


                                 ராமக்கல்மேடு
நன்றி!!



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top