Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குமரித் தந்தை மார்ஷல் நேசமணி வரலாறு - marshal A. nesamony History
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்தவர் ஏ.நேசமணி. இவர் கன்யாமுமாரி மாவட்டம் ...



தென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்தவர் ஏ.நேசமணி. இவர் கன்யாமுமாரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895 ஜூன் 12ஆம் தேதி கேசவன் அப்பாவு நாடாரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அப்போது இந்தப் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. இவர் முதலில் திருநெல்வேலி ஸ்காட் கிருத்துவ உயர் நிலைப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார். அங்கு பயின்று வந்த காலத்தில் இவர் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டு, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்கும் குறிப்பாகக் கல்கத்தா மகாநாட்டுக்குச் சென்று வந்தார்.

மகாத்மா காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற புதுமையான போராட்ட வழிமுறைகளால் கவரப்பட்டு இவர் காந்திஜியின் பரம பக்தனாக ஆனார். அதனால் இவர் காதி மட்டுமே அணியும் பழக்கத்தை மேற்கொண்டார். அதன் பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஒரு வருஷம் கர்னூல் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியரானார். அதே நேரத்தில் இவர் சட்டக் கல்வியும் பயின்று திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி மூலம் படித்துத் தேர்ந்தார். 1914இல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.


நாகர்கோயிலில் 1921இல் பதிவு செய்து கொண்டு கிரிமினல் துறை வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார். நாகர்கோயில் பார் அசோசியேஷனுக்கு இவர் தலைமைப் பொறுப்புக்கு 1943இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1943 முதல் 1947 வரை இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராக இருந்தார். டிசம்பர் 1944இல் இவர் திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945-47இல் திருவாங்கூர் சட்டமன்றமான திருமூலம் சபையில் உறுப்பினர் ஆனார். திருவாங்கூர் பல்கலைக் கழக நியமன உறுப்பினராகவும் ஆனார்.

1947 அக்டோபரில் இவரது திருவாங்கூர் காங்கிரசை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார். 1948 -1952 கால கட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சட்டசபையில் திருவாங்கூர் காங்கிரசின் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தார். 1955-56இல் இவர் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

1951, 1962, 1967 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இவர் நாகர்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். அப்போதெல்லாம் இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ் நாடு சட்டமன்றத்திலும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.
  


அரசியலில் இவரது முக்கிய பங்கு கன்யாகுமரி பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து தமிழ் நாட்டில் சேர்க்கப் போராடியதுதான். திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று. மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். திருவாங்கூர் ராஜ வம்சத்தின் ஆட்சியில் மக்களில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கீழ் மட்டத்திலிருந்தவர்கள் உரிமைகள் பல  பறிக்கப்பட்டிருந்தன.

இதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள். கேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ் நிலையில்தான் தோன்றின. இந்த சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அனைப்பு இந்தப் போராட்டக் களத்தில் முன்னின்று நடத்தியது.

இந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறைகளை எதிர்த்துத்தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி உருவெடுத்தது. இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய தொடர்ந்த தீவிர போராட்டங்களின் காரணமாக கன்யாகுமரி மாவட்டம் உருவக்கப்பட்டது. இந்த மாவட்டம் பின்னர் தமிழ் நாட்டுடன் இணைந்தது. 1-11-1956இல் மொழிவழி மாகாண பிரிவினைன் போது கன்யாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைந்தது. இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் ஏ.நேசமணியும் பி.தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்து நடத்தினர்.
  


இந்த சாதனைகளின் காரணமாக நேசமணி "குமரித் தந்தை" என அழைக்கப்பட்டார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார். இந்த இணைப்புக்குப் பின் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.

செயற்கரிய சாதனைகளைப் புரிந்த ஏ.நேசமணி 1968 ஜூன் 1ஆம் தேதி காலமானார். இவர் இறக்கும் இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் இறப்பையொட்டி 1969இல் நடந்த இடைத் தேர்தலில்தான், அதற்கு முன்பு 1967இல் தன் சொந்த தொகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜ் இங்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.


இவருடைய முயற்சியால் மாத்தாண்டத்தில் நேசமணி நினைவு கிருஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது. இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழோடு மறைந்த ஏ.நேசமணி அவர்களின் புகழ் வாழ்க!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top