Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை ஆச்சி வாழ்க்கை வரலாறு - Achi Manorama
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும் , தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ' ...

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.

தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.

 பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.


தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.

குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.
  

வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.

திமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாக பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.

   


மாலையிட்ட மங்கையாக திரைப்படத்துறைக்குள் வந்தார்
நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் அண்டு வெளியான "மாலையிட்ட மங்கை" என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.


அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முதல் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.

அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணிஎன்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.
  

ஜில் ஜில் ரமாமணியாக சிரிக்கவைத்தார்
ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது. அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.

அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் மனோரமா.நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.
  

நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்
நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய பாடல்களும் இன்றளவும் நினைவில் நிற்கின்றன. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடுஎன்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.
  

பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்; கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..என்று அவர் பாடிய பாடல்; பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதேஎன்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்என்கிற பாடல் என மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.
  

ஆயிரம் படங்களைத்தாண்டிய ஆச்சி
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு அதிகம். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.

பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இந்திய தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.
தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக தமிழ்த் திரையுலகில் நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
  

மாலையிட்ட மங்கையில் அறிமுகமாகி கடைசி வரை தனது நகைச்சுவை நடிப்பாலும், குணச்சித்திர நடிப்பாலும் உலகத் தமிழர்கள் மனதில் நகைச்சுவை அரசியாக வலம் வந்த மனோரமா 10.10.2015  இரவு  11 PM - மரணமடைந்தார். மாரடைப்பு மற்றும் முதுமை காரணமாக அவர் மரணத்தைத் தழுவினார். ஆச்சி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமாவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர், பல்துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் மனோரமாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
  

வழியெங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தங்களை இத்தனை காலமாக சிரிக்க வைத்த அந்த நகைச்சுவை அரசிக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top