Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குருசுமலை ஒரு புனித பயணம், சிலுவை மலை பயணம்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
                                          மலை முகட்டில் உள்ள சிலுவை சிலுவையை சுமக்கும் மலை, குருசுமலை பயணம், சிலுவை  மலை பயண ம் அந்த...
                                         மலை முகட்டில் உள்ள சிலுவை
சிலுவையை சுமக்கும் மலை, குருசுமலை பயணம், சிலுவை  மலை பயணம்
அந்த மலை சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது. சிலுவை என்ற சொல் குருசு என்றும் அறியப்படுகிறது. அதனால் அந்த மலை குருசு மலை என்று அழைக்கப்படுகிறது.

இறைமகன் இயேசு கிறிஸ்துவால் சிலுவை புனிதம் பெற்றது. அந்த சிலுவையின் அடிபணிந்து வணங்கினால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும், வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான மக்களை அதன் பாதை நோக்கி அழைத்துச் செல்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. பயணம் அழகிய சிற்றாறு 2 அணையின் கரைப்பகுதி வழியாக சென்றால் கேரள மாநில  எல்லைப் பகுதியான வெள்ளறடை சந்திப்பு வரும், அதிலிருந்து 2 கி.மீ. தூரம் குருசு மலை அடிவாரம்.

ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை. அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும். மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது.

                           பிரார்த்தனை நிலையில் ஏசுநாதர்

குமரி மாவட்டத்தின் மிக உயரமான மலை அதுதான். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரம் கொண்டது.  தமிழக கேரள எல்லை பகுதியில் எல்லைக் கோடு போல் உயர்ந்து நிற்கிறது இந்த மலை.  இதற்கு காளி மலை, குரிசு மலை, கொண்டகெட்டி, கூனிச்சி, வரம்பொதி என்று ஏராளமான பெயர்கள் உள்ளன.

நான் சென்றிருந்த சமயம் குருசுமலையில் திருவிழா கூட்டம் கால்வைக்க இடமில்லை. வருடந்தோறும் புனித வெள்ளிக்கு முந்தைய இருவாரங்களுக்கு முன் வரும் புதன் கிழமையில் இந்த கடினமான கொண்டாட்டம் தொடங்குகிறது.  தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது.  அதன் பின் புனித வெள்ளி அன்று மீண்டும் கொண்டாட்டம் தொடங்கி முடிகிறது. இந்த 6 நாட்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் குருசுவை தரிசனம் செய்து மகிழ்கிறார்கள்.

இந்த மலையில் ஏறுவதே ஒரு சாகஸம்தான். கல்வாரி மலையில் ஏசுக்கிறிஸ்து சிலுவையைச் சுமக்கும்போது பட்ட வேதனைகளையும், வலிகளையும் நமக்கு உணர்த்தும் பயணம் இது. புனித வெள்ளிக்கு முன்பு இப்படி சிலுவை பாதையில் செல்வது பாரம்பரிய வழக்கம். அப்படியொரு பயணத்தில் தான் நானும் கலந்து கொண்டேன். அப்போது அது கடினமாகத் தானே இருக்கும்.

கற்களும் புழுதியும் நிறைந்த குறுகலான கடினமான பாதையில் மலையேறுவது திணற வைக்கும் அனுபவம். மலையேறும் முன் சமதளத்தில் 50 அடி உயரத்தில் சிறிய குன்று இருக்கிறது. இதுதான் பயணத்தின் முதல் இடம். பிரார்த்தனை கூடம். இதை 'கெத்செமனே' என்கிறார்கள். இங்கு ஏசுவே பிரார்த்தனை செய்வது போல் ஒரு சிலை உள்ளது.
  
                                         'கெத்செமனே'  என்ற சிறிய குன்று
'கவனியுங்கள்....! பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் விழமாட்டீர்கள்...! ' என்ற வசனத்தை அது நினைவுப் படுத்துகிறது.  மலை மீது ஏறும் இந்த பயணம் நல்லபடியாக நிறைவு பெறவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைதான் இங்கு வரும் எல்லோருக்கும் உதிக்கின்றன. இந்த பிரார்த்தனைக் கூடம் அருகில் பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை உள்ளது. பெல்ஜியம் நாட்டில் பிறந்த இவர். நற்செய்தி அறிவிப்பதற்காக திருவிதாங்கூர் வந்தார். 1935 முதல் 1973 வரை கேரளாவில் இருந்தார்.

                                                   பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை
உண்டன்கோடு தேவாலயத்தில் குருவாக இருந்தபோது கொண்டகெட்டி மலையின் உச்சியில் வாழ்ந்த மலைவாசிகளை காலரா, மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் எமனுக்கு உயிர்களைப் பலியாக அனுப்பிக் கொண்டிருந்தன. அவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களை இந்த தேவாலயத்துக்கு தூக்கி வந்தார்கள். அவர்களை சிலுவையின் அற்புதத்தால் ஜான் பாப்பிஸ்ட் குணப்படுத்தினார்.
  
                                                 கரடு முரடுடான மலை பாதை 
கையில் எந்த பாரமும் இல்லாமல் வெற்று ஆட்கள் ஏறுவதற்கே திணறிப் போகும் இந்த மலைப் பாதையில் எப்படி நோயாளியையும் தூக்கிக்கொண்டு இறங்கினார்களோ, தெரியவில்லை..! செங்குத்தான இந்த மலையில் இருந்து நோயாளிகளைத் தூக்கி வருவது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது என்பதை மலைவாசிகள் பாதிரியாரிடம் தெரிவித்தனர். "நீங்கள் இங்கு  வரவேண்டாம்  உங்கள் இடத்தை தேடி தேவனே வருவார்" என்று கூறிய பாப்பிஸ்ட் 1957 மார்ச் 27-ல் மலை உச்சியில் மரத்தாலான ஒரு சிலுவையை  நிறுவி திருப்பலி நடத்தினார். அந்த மலைக்கு 'தெக்கன் குருசுமலை' என்று பெயரிட்டார். அன்றிலிருந்து குருசுமலை திருப்பயணம் ஆரம்பமானது. அந்தப் புனிதரின் ஞாபகார்த்தமாக இங்கு சிலை வைத்திருக்கிறார்கள்.

                 கன்னிமேரி ஏசு கிறிஸ்துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை
மலைப் பாதையின் தொடக்கத்தில் சங்கமாவேதி என்ற தியானக்கூடம் உள்ளது. இங்கு தியானம் செய்யலாம். இதன் அருகே கன்னிமேரி ஏசு கிறிஸ் துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை உள்ளது. குழந்தையை தாய் பாதுகாப்பது போல் மலையேறும் நம்மை கன்னிமேரி பாதுகாப்பாள் என்பது ஐதீகம். அங்கிருந்து  மலையேற்றம் தொடங்குகிறது. முதலில் ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நல்ல ரோடு இருக்கிறது.  அதன்பின் தொடங்கும் கடினமான பாதை மலை உச்சி வரை இடைவெளி இல்லாமல் தொடர்கிறது.  குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக மொத்தம் 14 சிலுவைகள் இந்த பாதையில் உள்ளன.

                                                             14 - வது சிலுவை
ஐந்தாவது சிலுவை உள்ள இடம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இடம் குளுமையான காற்றை சுவாசிக்கும் விதமாக உள்ளது. களைத்து வரும் பக்தர்களுக்கு அற்புதமான இடம்.

ஒன்று முதல் ஏழாவது சிலுவை வரை கேரள பகுதியில் உள்ளது.  அதற்கு பின் தமிழ்நாட்டுப் பகுதி ஆரம்பமாகிறது.  7 - 14 சிலுவைகள் தமிழ்நாட்டில் உள்ளன.  இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏழாவது சிலுவை வரை கேரள போலீஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும். எல்லோரும் மலையாளத்தில பேசிக் கொண்டிருப்பார்கள். 7வது சிலுவையில் இருந்து தமிழக போலீஸ் தமிழ் உரையாடல் என்று சூழலே மாறுவது ஒரு ரம்மியமான அனுபவம்.

                                      பாறையில் 'லாஸ்ட் ஸப்பர்ஓவியம்
பாறையில் வரையப்பட்டிருக்கும் 'லாஸ்ட் ஸப்பர்என்ற ஏசுவின் கடைசி உணவு விருந்து சித்திரமாக தீட்டப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து உயரத்துக்குப் போனால் மலைமுகட்டில்தான் சிலுவை உள்ளது.  ஜான் பாப்பிஸ்ட் செய்துதந்த மர சிலுவை இப்போது இல்லை.  மோசமான தட்பவெப்பத்தினால் அது சிதைவுற்றது.  அதன்பின் தற்போது உள்ள கான்கிரீட்டால் ஆன சிலுவையை வைத்துள்ளார்கள். இதன் உயரம் 25 அடி.
இந்த சிலுவை முன் சிறிய மண்டபம் உள்ளது.  சிலுவை இருப்பது தமிழ்நாட்டில்தான் என்றாலும், இது நெய்யாற்றின்கரை கிறிஸ்துவ சபைக்கு கட்டுப்பட்டது.  அதனால் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆராதனை வழிபாடுகள் எல்லாம் மலையாள மொழியிலே நடக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சார்பில் தவக்கால நாள்களின் இறுதிப் பகுதியில் இங்கு திருப்பயணம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குச் செல்கின்றனர்.




About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top