Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கல்வியின் நாயகன் ’காமராஜர்' - வாழ்க்கை வரலாறு!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி...
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.


காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள். கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார். 
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார். அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது. ”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

        பெருந்தலைவர் காமராஜர்  மணி மண்டபம், கன்னியாகுமரி. அருகிலிருப்பது காந்தி மண்டபம்

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.முதலமைச்சராக காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள். 




About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top